தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பேசப்பட்டு வந்த நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அவரது ‘தமிழக வெற்றிக் கழகம்’ அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, முதல் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு பிறகு, தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான ஏஜென்சிகள் வாரா வாரம் எடுத்து வரும் ரகசிய சர்வேக்களின் முடிவுகள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைமைகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக டெல்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் தரும் தகவல்களின்படி, தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகள் தனித்தனியே அல்லது நம்பகமான ஏஜென்சிகள் மூலம் எடுத்து வரும் தொடர் சர்வேக்களின் மைய சாரம் ஒன்றாகவே உள்ளது.
நடிகர் விஜய்யின் த.வெ.க. தனித்து போட்டியிடும் பட்சத்தில், அவர்கள் 100 முதல் 115 தொகுதிகளை பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வேக்கள் தெரிவிக்கின்றன. இது தனிப் பெரும்பான்மைக்கு மிக அருகில் உள்ளதால், அவரது அரசியல் செல்வாக்கு எதிர்பார்ப்புகளை மீறியுள்ளதைக் காட்டுகிறது.
வாக்காளர்களின் முதல் தேர்வாக, த.வெ.க.வுக்கு சுமார் 35% முதல் 38% வாக்குகள் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவிக்கு வாக்காளர்கள் விரும்பும் நபராக விஜய் முன்னிலை வகிக்கிறார். த
விஜய் கட்சி துவங்கியதிலிருந்து, பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு இளம் தலைமையை மக்கள் நாடுவதன் விளைவே இந்த சர்வே முடிவுகள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான மனநிலையை இந்த சர்வேக்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த துயர சம்பவம், விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை பெரிய அளவில் கேள்விக்குள்ளாக்கியது. அவரது அரசியல் நகர்வுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன, மேலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கடுமையாகப் பயன்படுத்தின. ஆனால், சர்வே முடிவுகள் இதற்கு நேரெதிராக உள்ளன.
கரூர் விபத்து நடந்த பிறகு, விஜய்யும் அவரது கட்சியும் மீது தொடுக்கப்பட்ட அரசியல் தாக்குதல் மற்றும் வழக்குகள், அவரது ஆதரவாளர்களிடம் ஒருவித பரிதாப அலையை உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக, அவர் மீதான எதிர்ப்பை விட, ஆதரவு அதிகரித்து இருக்கலாம்.
இந்த தொடர்ச்சியான சர்வே முடிவுகள், திராவிட கட்சிகளின் தலைமைகளுக்கு உள்ளுக்குள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யின் வருகை யாருடைய வாக்கு வங்கியை அதிகம் சிதைக்கிறது என்பதே இப்போது அவர்களது முக்கிய கேள்வி.
2026 சட்டமன்றத் தேர்தல், 1967-ல் தி.மு.க.வும், 1977-ல் அ.தி.மு.க.வும் ஆட்சியை பிடித்தது போல, தமிழக அரசியலில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு வலுவான மாற்றாக களமிறங்கிய நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி, விஜய்யின் வருகையால் சிதறடிக்கப்பட வாய்ப்புள்ளது என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வரும் நாட்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் அரசியல் வியூகங்கள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவும், தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளவும் அவர்கள் மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகள், தமிழகத்தின் அரசியல் நிலவரத்தை தீர்மானிக்கும். ஆனால், தற்போதைய சர்வேக்கள் காட்டுவது என்னவென்றால், விஜய் இப்போது ஒரு நடிகரோ அல்லது புதிய அரசியல்வாதியோ அல்ல; அவர் ஆளும் கட்சிக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு மாற்று சக்தி என்பது உண்மை..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
