விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு விஜய்சேதுபதி நாள் மற்றும் எலிமினேஷன் நாள் என்பதால் விறுவிறுப்பாக சென்றது.
விஜய் சேதுபதி முதலில், கடந்த 15 நாட்களில் வீட்டில் நடந்த சந்தோஷமான தருணங்கள் என்னென்ன என்று போட்டியாளர்களிடம் கேட்டு பாசிட்டிவ்வாக தினத்தை தொடங்கினார்.
அதன்பின் விஜய் சேதுபதி முதலில் கானா வினோத் இடம் பேசினார். வினோத், தூக்கமின்மை, மூளை குழப்பம் மற்றும் சக போட்டியாளர்களின் குரட்டை பற்றிய தனது பிரச்சனைகளை சொன்னார். எல்லாவற்றையும் விட, “இங்கே நீச்சல் குளத்திற்கு பதிலாக கிணறு வைத்திருந்தால், ஆறு பேரும் செத்திருப்போம் சார்!” என்று சொன்னது கலகலப்பை ஏற்படுத்தியது.
லாரல் ஹார்டி ஜோடி போல, கானா வினோத்துக்கும் திவாகருக்கும் இடையேயான நட்பு மற்றும் உரையாடல் மிகவும் நன்றாக இருப்பதாக விஜய் சேதுபதி பாராட்டினார்.
எனினும், பார்வதிக்கு திவாகருடன் நடக்கும் ரேம்ப் வாக் பார்ட்னர்ஷிப் பிடிக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது. அவர் அதை வெளிப்படையாக கூறாமல், இட்லிக்கு உவமையாகப் பூசி மொழுகி பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது.
வீட்டின் கேப்டன் டாஸ்க் குறித்து விவாதம் சூடுபிடித்தது. தலைவர் துஷாரின் செயல்பாடுகளில் பலருக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தன. பார்வதி எழுந்து, துஷார் ஒரு சார்பாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, மேஜை மீது ஏறி உட்கார்ந்தது போன்ற விஷயங்களைக் குறிப்பிட்டு, “நம்ம வீட்ல உட்காருவது போலத்தான் சார்!” என்று துஷாரிடம் கூறியதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, “அது உங்கள் வீடு கிடையாது. பொதுவான இடத்தை பயன்படுத்தும் போது சில நாகரிகம் தேவை,” என்று சுட்டிக்காட்டினார்.
சமையல் பொறுப்பில் இருந்த கலை, தான் சாப்பாடு வடித்து வைத்தாலும், அதன் கிரெடிட் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், சபரி கரண்டியை என் கைக்கு வரவிடவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். அதற்கு விஜய் சேதுபதி, “உங்கள் உரிமைக்காக நீங்க ஏன் அங்க கேட்கவில்லை?” என்று கேள்வியெழுப்பினார்.
தலைவர் என்ற முறையில், துஷார் பிரச்சனைகளை எதிர்த்து பேசாமல் “வாயை மூடிக்கொண்டே இருந்துவிட்டார்” என்று மற்ற போட்டியாளர்களும் மக்களும் வருத்தம் தெரிவித்தனர். அவருக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறிவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டது.
சுபிக்ஷா மற்றும் வியன்னா எழுந்து, சாப்பாட்டில் உப்பு பிரச்சனை குறித்துப் பேசினர். சமைத்தவர்கள் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிக உப்பை கொட்டி உணவு வீணடிக்கப்பட்டதை குறித்து விஜய் சேதுபதி விசாரித்தார். அதற்கு கனி “சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம் என்பதை உணர்த்தவே இதை செய்தோம்” என்று கனி விளக்கம் அளித்தார்.
தவறு செய்வது இயல்பு என்றாலும், அதை மூடி மறைக்காமல், “I’m very sorry” என்று சொன்னால் போதும் என்று அறிவுறுத்தினார். மேலும், திவாகர் பசி பொறுக்காமல் சமையல் குறித்து பேசிய போது, விஜய் சேதுபதி, “திவாகர், நாம் இங்கு கேப்டன்ஷிப் பற்றி பேசி கொண்டிருக்கிறோம், சம்பந்தம் இல்லாமல் பேசாதீர்கள்,” என்று அவரை உட்கார வைத்தார்.
இந்த வார எலிமினேஷனில், போட்டியாளர் அப்சரா வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் விஜய் சேதுபதி போனவுடன் வீட்டிற்குள் கமருதீனுக்கும் ஆதிரைக்கும் இடையே பெரிய சண்டை வெடித்தது. ஆதிரை, தன்னை ‘பலூன் அக்கா’ என்று அழைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோது, “நான் பணம் சம்பாதிக்கவே இங்கு வந்தேன். பலூன் அக்கா என்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை” என்று முகத்தில் கரியைப் பூசுவது போல பேசியதாக விவாதிக்கப்பட்டது.
மொத்தத்தில் மகிழ்ச்சியான தருணங்கள், கேப்டன் டாஸ்க், சாப்பாட்டில் உப்பு, பலூன் அக்கா விவகாரம், அப்சரவாவின் எலிமினேஷன் என நேற்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே சென்றது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
