தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட அமெரிக்கா.. வரிச்சுமை அனைத்தும் அமெரிக்க மக்கள் தலையில்.. பாஸ்போர்ட் அந்தஸ்தும் போச்சு.. 8 போர்களை நிறுத்திய டிரம்பால் அமெரிக்காவின் விலைவாசி உயர்வை நிறுத்த முடியலையே.. பொங்கும் அமெரிக்கர்கள்..!

அமெரிக்கா ஃபர்ஸ்ட்” என்ற கொள்கையை முன்னிறுத்தி, அமெரிக்க உற்பத்தியை தூண்டும் நோக்கில், மற்ற நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த கடுமையான இறக்குமதி வரிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல், அமெரிக்க பொருளாதாரத்திற்கே பெரும் சுமையாக…

trump

அமெரிக்கா ஃபர்ஸ்ட்” என்ற கொள்கையை முன்னிறுத்தி, அமெரிக்க உற்பத்தியை தூண்டும் நோக்கில், மற்ற நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த கடுமையான இறக்குமதி வரிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல், அமெரிக்க பொருளாதாரத்திற்கே பெரும் சுமையாக மாறி, ஒரு ‘பொருளாதார பூமெராங்’ ஆக திரும்பி அடித்திருக்கிறது.

அமெரிக்காவில் எஃகு, கார்கள், தளபாடங்கள் என அனைத்தும் “மேட் இன் யு.எஸ்.ஏ” முத்திரையுடன் வெளிவர வேண்டும் என்பதே டிரம்ப்பின் கனவாக இருந்தது. இதற்காக, இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதித்தால், வெளிநாட்டு பொருட்களின் விலை உயர்ந்து, அமெரிக்க நுகர்வோர் உள்நாட்டு பொருட்களை நாடி செல்வார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் நம்பியது. ஆனால், யதார்த்தம் வேறுவிதமாக அமைந்தது.

இந்த கட்டணங்களை வெளிநாடுகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று கருதப்பட்டாலும், நடைமுறையில் சுமையின் பெரும் பகுதி அமெரிக்க மக்கள் மீதே விழுந்துள்ளது. வரி செலவுகளில் 22% அமெரிக்க வணிகங்கள் செலுத்துகின்றன. 18% மட்டுமே வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் செலுத்துகின்றனர். மீதமுள்ள 55% வரை அமெரிக்க நுகர்வோரின் தலையில் விழுந்துள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை அமெரிக்காவில் 4% உயர்ந்துள்ளது. உள்நாட்டு பொருட்களின் விலைகூட சுமார் 2% உயர்ந்துள்ளது. ஏனெனில், தொடக்கத்தில் வரிச்சுமையை சகித்துக் கொண்ட அமெரிக்க நிறுவனங்கள், இப்போது அந்த செலவை விலைகள் மூலம் நுகர்வோரிடம் திருப்பி செலுத்தி வருகின்றன.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக பணவீக்கத்தை குறைக்க போராடி வரும் நிலையில், டிரம்ப்பின் வரிகள் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது.

டிரம்ப்பின் வரிகள் பணவீக்கத்தை சுமார் 0.4 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளதாகவும், இது அடுத்த ஆண்டு 0.6% ஆக உயரக்கூடும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை கூறுகிறது. ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் அவர்களே, விலைகள் உயர்வதற்கு வர்த்தக வரிகள் ஒரு காரணம் என்று ஒப்புக்கொண்டுள்ளார். டிரம்ப்பின் வர்த்தக போர் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் சரியவில்லை என்றாலும், அதன் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 1.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுநர்கள், வர்த்தக வரிகள் மட்டும் பொருளாதார வளர்ச்சியில் அரை சதவீத புள்ளியை குறைக்கும் என்று கூறுகின்றனர். இது $30 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும்.

உள்நாட்டில் அமெரிக்க மக்கள் அதிக விலை கொடுக்கையில், வெளிநாடுகளில் அமெரிக்கா தனது அந்தஸ்தை இழந்து வருகிறது. சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் அமெரிக்க பாஸ்போர்ட் முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறி, இப்போது 12வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரேசில் அமெரிக்கக் குடிமக்களுக்கு மீண்டும் விசாக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனா, வியட்நாம் மற்றும் பப்புவா நியூ கினியா போன்ற நாடுகள் ஐரோப்பியர்களுக்கு தாராளமாக விசா வழங்கினாலும், அமெரிக்கர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அமெரிக்காவை முன்னிலைப்படுத்த முயன்ற டிரம்ப் கொள்கையின் வினோதமான முரண்பாடு இது. மற்றவர்களை சிரமப்படுத்த நினைத்து, அமெரிக்கா இறுதியில் தனக்கு தானே வரி விதித்துக் கொண்டது என்பதே இதன் நிதர்சனம்.