தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியை தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அவரை மற்ற நடிகர்களின் தோல்விகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆந்திர அரசியலில் கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற நடிகர் என்.டி. ராமாராவ் உடன் விஜய்யை ஒப்பிடுவதுதான் பொருத்தமானது என்றும், என்.டி.ஆரின் வழியில் விஜய் நிச்சயம் தமிழக ஆட்சியைப் பிடிப்பார் என்றும் அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, நடிகர்களாக அரசியல் கட்சி தொடங்கி வெற்றி பெற்றவர்கள் என்றால், அது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவர் மட்டுமே என்ற நிலை உள்ளது. இதர நடிகர்கள் அரசியலில் தோல்வியடைந்ததை காரணம் காட்டி, விஜய்யின் வாய்ப்புகளை குறைத்து மதிப்பிடுவது தவறு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆந்திராவில் ‘பிரஜா ராஜ்ஜியம்’ கட்சியைத் தொடங்கி தோல்வியை தழுவிய நடிகர் சிரஞ்சீவி. தமிழகத்தில் கட்சி தொடங்கி, ஒரு கட்டத்தில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தாலும், ஆட்சியை பிடிக்க விஜயகாந்த்தால் முடியவில்லை. அண்மை காலத்தில் கட்சி தொடங்கி, பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை பதிவு செய்யாதவர் கமல்ஹாசன்.
மேற்கண்ட நடிகர்களின் அரசியல் பயணத்துடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு, அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. ஆனால், இந்த ஒப்பீடு அடிப்படை தவறானது என்றும், விஜய்யின் ஆரம்ப வேகம், ஆந்திராவின் சரித்திர நாயகனான என்.டி.ஆர். அவர்களின் அரசியல் நுழைவுடனே ஒப்பிடப்பட வேண்டும் என்றும் வல்லுநர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.
தெலுங்குத் திரையுலகின் ஜாம்பவானாகக் கருதப்பட்ட என்.டி. ராமாராவ் கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார். இதுவே நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ஒரு வலுவான முன்னோடி என்கிறார் ஒரு பிரிவினர். அவர் தெலுங்கு தேசம் என்ற கட்சியை மார்ச் 1982-ல் தொடங்கினார். சரியாக அடுத்த ஆண்டு ஜனவரி 1983-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, 46% வாக்கு சதவீதத்துடன் மாபெரும் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1983-ஆம் ஆண்டு ஆந்திர அரசியலில் மாபெரும் புயலாக நுழைந்து ஆட்சியை பிடித்த என்.டி.ஆர்., அதன் பின்னர் 1985, 1994 ஆகிய ஆண்டுகளிலும் ஆட்சி அமைத்தார். இடைப்பட்ட காலத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும், தெலுங்கு தேசம் கட்சி 2014, 2024 ஆகிய ஆண்டுகளிலும் ஆட்சியை அமைத்தது. ஆந்திராவின் தவிர்க்க முடியாத சக்தியாகவும் உள்ளது. என்.டி.ஆரின் இந்த சரித்திர சாதனையின் பின்னணியை வைத்தே விஜய்யின் அரசியல் வாய்ப்புகளை எடை போட வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, விஜய்யிடம் ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது அரசியல் பிரவேசத்திற்கான வரவேற்பு, என்.டி.ஆருக்கு ஆந்திராவில் கிடைத்த வரவேற்புக்கு இணையாக உள்ளது,” என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஆட்சியை பிடித்துவிடுவார். ஒருவேளை அவர் ஆட்சியைப் பிடித்தால், என்.டி.ஆரைப் போலவே அவரும் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு” என்று உறுதியாக கருத்துத் தெரிவித்துள்ளனர். விஜய்யின் அரசியல் நகர்வுகள், ஆந்திராவின் என்.டி.ஆர். சகாப்தத்தை பிரதிபலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
