ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் கூறினார்.. டிரம்ப் பேட்டி.. அப்படி எல்லாம் சொல்லவே இல்லை.. சில மணி நேரத்தில் மறுப்பு தெரிவித்த இந்தியா.. போரை நிறுத்தியது போல் தொடரும் டிரம்பின் புழுகுமூட்டை..!

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களில், நாட்டின் எரிசக்தி முடிவுகள் நுகர்வோர் நலன் மற்றும்…

oil

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களில், நாட்டின் எரிசக்தி முடிவுகள் நுகர்வோர் நலன் மற்றும் சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டவை என இந்தியா திட்டவட்டமாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எரிசக்தி விலையை நிலையாக வைத்திருப்பதும், விநியோகத்தை பாதுகாப்பதும் இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகள் என்று இந்திய அரசு மீண்டும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

“இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய இறக்குமதியாளராகும். நிலையற்ற இந்த எரிசக்ச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதே எங்களின் நிலையான முன்னுரிமையாகும். எங்களது இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டவை,” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், டிரம்ப் கூறியது போல் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து பிரதமர் மோடி ஏதேனும் “உறுதிமொழி” அளித்தாரா என்பது பற்றி நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தபடி, இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், அது மாஸ்கோவின் பொருளாதார வளங்களை கட்டுப்படுத்தி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்று அமெரிக்கா வாதிட்டு வருகிறது.

இது தொடர்பாக நேற்று டிரம்ப் பேசுகையில், ’இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க போவதில்லை என்று இன்று எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய படி. மேலும் அவர், “இந்த மாற்றத்திற்குச் சிறிது காலம் எடுக்கும்; உடனடியாக செய்ய முடியாது. ஆனால் இந்தச் செயல்முறை விரைவில் முடிந்துவிடும், இப்போது நாம் சீனாவையும் அதையே செய்ய வைக்க போகிறோம்,” என்றும் தெரிவித்திருந்தார்.

டிரம்பின் இந்த கூற்றுக்கு பதிலளித்த இந்திய அரசு, “எரிசக்தி விலையை நிலையாக உறுதி செய்வதும், விநியோகத்தை பாதுகாப்பதும் எங்கள் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எங்கள் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும் பன்முகப்படுத்துவதும் இதில் அடங்கும்,” என்று உறுதிப்படுத்தியது.

அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை அதிகரிப்பது குறித்து பேசிய அரசு, “எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இது சீராக முன்னேறி உள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகமும் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவித்தது.

முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தக் கோரி அமெரிக்கா விடுத்த கோரிக்கைகளை, நியாயமற்றவை என்றும், இரட்டை வேடத்தை காட்டுபவை என்றும் இந்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்திருந்தது.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததை தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் சலுகை விலையில் கிடைத்ததை சாதகமாக்கிக் கொண்ட இந்தியா, அதன் முக்கிய எண்ணெய் வாடிக்கையாளராக மாறியது. டிரம்ப் நிர்வாகம் கடந்த ஆகஸ்டில் இந்திய ஏற்றுமதிகள் மீது 50% சுங்க வரி விதித்து அழுத்தம் கொடுத்த போதிலும், தேசிய நலன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சந்தை பொருளாதாரமே கொள்முதல் முடிவுகளுக்கு வழிகாட்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவின் சலுகை விலை “எங்களுக்கு சேவை செய்யும் வரை” எண்ணெய் வாங்குவது தொடரும் என்றும் அரசு மீண்டும் மீண்டும் கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.