சமீபகாலமாக தங்கம் போலவே வெள்ளியின் விலையும் அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 2 லட்சத்தை தாண்டி சென்றுள்ளது. இந்த திடீர் விலையேற்றத்துக்கு பின்னால், அரசின் கொள்கை முடிவுகள், இறக்குமதி தடைகள் மற்றும் உலகளாவிய தேவை அதிகரிப்பு ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.
விலையேற்றத்திற்கான முக்கியக் காரணங்கள் பல இருந்தாலும் முக்கிய காரணம் தாய்லாந்து ரூட் & இறக்குமதி தடை ஆகும். இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் குறிப்பாக தாய்லாந்து நாட்டிற்கும் இடையே உள்ள தாராள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, தாய்லாந்தில் இருந்து வரும் வெள்ளிக்குச் சுங்க வரி கிடையாது. உலக வெள்ளி சந்தையின் தலைநகராக கருதப்படும் லண்டனில் இருந்து வெள்ளி தாய்லாந்துக்கு சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு ‘டியூட்டி இல்லாமல்’ வந்தது.
இந்த சலுகையை பயன்படுத்தி அதிகளவில் வெள்ளி இறக்குமதி ஆவதை கவனித்த அரசு, இது தவறான பயன்பாடு என கருதி திடீரென வெள்ளி இறக்குமதிக்கு தடை விதித்தது. இத்தடை, உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் வரத்தை உடனடியாக நிறுத்தியது. அதே சமயம், சில மியூச்சுவல் ஃபண்டுகள் விளம்பரங்களை வெளியிட்டு மக்களை வெள்ளியில் முதலீடு செய்ய தூண்டியதால், வெள்ளியின் தேவை திடீரென அதிகரித்தது.
தேவை அதிகமானதால், வெள்ளி கட்டிகள் லண்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. இது, கப்பலில் கொண்டு வருவதை விட 15 முதல் 20 மடங்கு அதிக செலவு பிடிக்கும் விஷயமாகும். மேலும், உலகளவில் கிரீன் எனர்ஜி மற்றும் EV வாகனங்களில் வெள்ளியின் தேவை அதிகரித்ததால், சர்வதேச சந்தையிலும் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி தடை காரணமாகவும், அதிக விலையில் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லாததாலும் சந்தையில் ஒரு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு, வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இன்று வங்கியில் ஒரு 30 கிலோ வெள்ளி கட்டிக்கு பணம் செலுத்தினால், டெலிவரி கிடைப்பதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு மேல் தாமதம் ஆகிறது.
தங்கம் உள்பட மற்ற உலோகங்கள் போல் வெள்ளியை வெட்டி எடுக்க முடியாது. மற்ற உலோகங்கள் தயாரிக்கும்போது கிடைக்கும் உதிரி பொருள் தான் வெள்ளி. எனவே வெள்ளியின் உற்பத்தி ஒரு சீராகவே இருக்கும். ஆனால் வெள்ளிக்கு டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் விலையும் உயர்கிறது.
இந்த நிலையில் வெள்ளி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டால் திடீரென வெள்ளி விலை கீழே போகவும் வாய்ப்பு உள்ளதால் வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
