விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், சமீபத்தில் நடைபெற்ற ‘மாஸ்க் டாஸ்க்’ மற்றும் பிற உரையாடல்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாகியுள்ளன. போட்டியாளர்களின் எல்லை மீறிய நடவடிக்கைகள், நிகழ்ச்சி ஆபாசத்தை நோக்கி செல்வதாகவும், இதில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் மாஸ்க் டாஸ்க் நடைபெற்றபோது, போட்டியாளர்களான ரம்யா ஜோவும் எஃப்.ஜேவும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரம்யா ஜோ, எஃப்.ஜேவை நோக்கி, தான் அணிந்திருந்த முகமூடியை கொண்டு அநாகரிகமான ஒரு செய்கையை செய்ததாக கூறப்படுகிறது. இது ஆபாசமானதாகவும், எல்லை மீறிய சில்மிஷமாகவும் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, படுக்கையறையில் நடந்த உரையாடலில், ஆதிரை மற்றும் எஃப்.ஜே.வின் பேச்சுகளும், ‘நான் பிடித்தால் விடமாட்டேன்’ போன்ற வசனங்களும் ஆபாசத்தை குறிக்கும் வகையில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. எஃப்.ஜே. மீது பல சர்ச்சைகள் தொடர்வது போலவே, பெண்களின் எல்லை மீறிய செய்கைகளுக்கும் அவர் இலக்காவதாக கருதப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து பேசியுள்ள விமர்சகர்கள், பெண்கள் இதுபோன்ற அநாகரிகமான செயல்களை செய்யும்போது அதை “18+ ஜோக்” அல்லது “அடல்ட் ஜோக்” என கடந்து செல்வதாகவும், அதே செயலை ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் செய்தால் அவனை சமூகமே மொத்தமாக துரத்தி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற கோரும் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ரம்யா ஜோ, பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பு ‘ரெக்கார்டு டான்ஸ்’ கலைஞராக இருந்தவர். ஒரு மேடையில், தன்னை நோக்கி அநாகரிகமான சைகைகள் செய்த இளைஞர்களை நோக்கி, தனது நடுவிரலை காட்டி எதிர்த்து நின்றவர் என்பதால், வீட்டின் உள்ளே அவரிடம் எல்லை மீறிய ஆபாசத்தை எதிர்பார்க்க கூடாது என்று சிலர் கருதினர்.
ஆனால், தற்போது ரம்யா ஜோ எஃப்.ஜே.விடம் நடந்துகொண்ட விதம், அவருடைய தொழிலை பற்றியும் தவறான விமர்சனங்களை ஏற்படுத்தலாம் என்ற கவலை எழுந்துள்ளது. ‘ரெக்கார்டு டான்ஸ் ஆடும் பெண்களை உள்ளே விட்டால் இப்படித்தான் நடக்கும்’ என்ற கேவலமான பேச்சுக்கு ரம்யா ஜோ காரணமாகிவிடக் கூடாது என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
கடந்த சீசனில், நடிகர் பிரதீப் ஆண்டனி மீது ஒரு பெண் போட்டியாளரிடம் தவறாக நடந்துகொண்டதாக வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டு, அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதேபோல், தற்போது ரம்யா ஜோவின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில்,ரம்யா ஜோவுக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுகின்றன.
விமர்சகர்கள், “பிக் பாஸ் மேடையில் ஆண், பெண் சமம். டாஸ்க் என்றால் எல்லோரும் சமம். ஒரு பெண் தவறு செய்தால், அதையும் விமர்சிக்க வேண்டும். ஒரு ஆம்பளைக்கு ஒரு நீதி, ஒரு பொம்பளைக்கு ஒரு நீதி என்பது என்ன நீதி?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சி, குழந்தைகளுக்கும் 24/7 ஒளிபரப்பாகும் தளங்களிலும் இவ்வளவு அப்பட்டமான ஆபாசத்தை அனுமதிப்பது நிகழ்ச்சி பொறுப்பாளர்களின் கவனக்குறைவை காட்டுகிறது. போட்டியாளர்கள் தங்களுக்கு இருந்த ‘தப்பான பெயரை’ மாற்றுவதற்காக வந்த நிலையில், அதை மேலும் கெடுத்துக் கொள்வது துரதிர்ஷ்டவசமானது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
