கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகங்களிலும் பொதுவெளியிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், மூத்த பத்திரிக்கையாளர் திரு. மணி அவர்கள் அளித்த நேர்காணலில் விஜய்க்கு ஆதரவாக பல விஷயங்களை கூறியுள்ளார்.
ஊடகங்களில் நடத்தப்படும் ‘மீடியா ட்ரையல்’ மூலம் விஜய் அரசியல் ரீதியாக “முடிக்கப்பட்டுவிட்டார்” என்ற பார்வை நிலவுவது உண்மை. இதற்கு விஜய்யின் கட்சி தரப்பில் இருந்து சரியான அளவில் ஊடகங்களை சந்தித்து விளக்கமளிக்காத ‘செயலற்ற அரசியல்’ நிலைப்பாடும் ஒரு காரணமாகும்.
ஆனால், கள நிலவரம் வேறுவிதமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசும்போது, “அவர் வீடியோ காலில் எங்களது துயரத்தை கேட்டு மன்னிப்பு கேட்டார், கண்ணீர் விட்டார்” என்று மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். அறிவுஜீவிகள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் நிலவும் எதிர்மறை பார்வைக்கும், அடித்தட்டு மக்கள் மத்தியில் நிலவும் அனுதாபத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது.
சம்பவம் நடந்த அடுத்த நாள் மற்ற அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் களத்தில் இருந்தபோது, விஜய்யின் கட்சியினர் இல்லாதது ஒரு பெரிய பின்னடைவு. தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் சமாதானம் பேசுவது என்பது தனிப்பட்ட விவகாரம். ஆனால், ஒரு அரசியல் கட்சித் தலைவராக ஒரு பெரிய துயரச் சம்பவம் நடந்தபோது, பொதுவெளியில் அதிகாரப்பூர்வமான ஒரு நிலைப்பாட்டை தெரிவிக்க தவறியது விஜய்யின் மிகப்பெரிய தவறு.
சட்டத்தின் முன், விஜய் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத நபர்தான். அவரது குற்றம் அதிகபட்சம் ‘கவனக்குறைவு’ என்பதாகவே இருக்கும்; அது கொலை அல்ல. இது மனிதனின் முட்டாள்தனத்தால் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம்.
இந்த கூட்டத்திற்கு இவ்வளவு குறுகலான இடத்தில் அனுமதி அளித்த அரசாங்கத்திற்கும் விஜய்க்கு இணையான பொறுப்பு இருக்கிறது. நியாயப்படி மாவட்ட ஆட்சியரையும் காவல் கண்காணிப்பாளரையும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். குறைந்தது அதை கூட அரசு செய்யவில்லை.
ஆச்சரியப்படும் விதமாக, இந்த துயரச் சம்பவத்திற்கு பிறகும், பல தரப்பு மக்களிடமும் பேசும்போது, விஜய்யின் ஆதரவு ஒரு சதவீதம் கூட குறையவில்லை. மக்கள் கருத்து கணிப்பின்படி விஜய்தான் முன்னணியில் நிற்கிறார்.
ஒரு நேரத்தில் மாநில அரசையும் மத்திய அரசையும் எதிர்கொள்வது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத அரசியல். எனவே, திமுக மற்றும் பாஜகவில் ஒருவரை மட்டுமே தனது எதிரியாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் தள்ளப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தை அதிமுகவும், காங்கிரஸும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றன. விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பதன் மூலம் திமுகவை பலவீனப்படுத்த அவை இலக்கு வைத்துள்ளன. இவ்வாறு பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
