இந்தியாவிற்கும் மங்கோலியாவிற்கும் இடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடைவெளி இருந்தாலும், “நம் எல்லைகள் தொடாமல் இருக்கலாம், ஆனால் நம் இதயங்களும் பாரம்பரியமும் தொடர்கின்றன” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல், இரு நாடுகளின் உறவு பிணைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.
மங்கோலிய ஜனாதிபதி உக்னா குரேல்சுக்-ன் புது தில்லி பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளையும், 10 ஆண்டுகால பங்களிப்பையும் குறிக்கிறது. இந்த பயணம், கலாச்சாரம், பாதுகாப்பு, மற்றும் பொருளாதாரம் என பல துறைகளில் ஒத்துழைப்பை மறுவரையறை செய்துள்ளது.
ஜனாதிபதி குரேல்சுக்-ன் இந்த பயணம், ஆழமான நட்புறவை உறுதிப்படுத்தியுள்ளதுடன், வருங்காலங்களில் பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புக்கு வலிமையான அடித்தளத்தை அமைத்துள்ளது.
இந்தியா மற்றும் மங்கோலியா பௌத்தம் மூலம் ஆழமான நாகரிக தொடர்புகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்த கலாச்சார பாலம் இப்போது நவீன இராஜதந்திர பிணைப்பாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், இந்த விஜயம் வெறும் குறியீடாக மட்டும் இருக்கவில்லை; பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற முக்கியமான வணிக விவகாரங்களை பற்றியதாகவும் இருந்தது.
மங்கோலியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்திற்கு இந்தியா $1.7 பில்லியன் நிதியுதவி அளித்துள்ளது. இது இருதரப்பு ஒத்துழைப்பின் மிகப் பெரிய திட்டம் ஆகும். 2028-ல் செயல்பட தொடங்கும் இந்த ஆலை, ஆண்டுக்கு 1.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை சுத்திகரித்து, மங்கோலியாவின் எரிசக்தி சுதந்திரத்திற்கு பெரிய திருப்புமுனையாக அமையும்.
இது வெளிநாடுகளில் இந்தியா மேற்கொள்ளும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மங்கோலிய அதிகாரிகள் இந்திய நிறுவனங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.
நிலத்தால் சூழப்பட்ட மங்கோலியா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் அமைந்துள்ளது. இது பரந்த ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மங்கோலியாவில் உள்ள முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய பூமியில் உள்ள தனிமங்களின் இருப்பு, இந்தியாவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப இலக்குகளுக்கு இன்றியமையாதது. இந்தியா, மங்கோலியாவின் யுரேனியம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் பங்கெடுக்க ஆர்வம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைக்கவும் இருநாடுகள் திட்டமிட்டுள்ளன.
பிரதமர் மோடி, மங்கோலிய குடிமக்களுக்கு இலவச இ-விசாக்கள், புதிய இளைஞர் கலாச்சார தூதுவர் திட்டங்கள் மற்றும் நாலந்தா பல்கலைக்கழகம் – மங்கோலியாவின் காந்தன் மடாலயம் இடையேயான கூட்டாண்மை ஆகியவற்றை அறிவித்தார். இது பௌத்த பாரம்பரியத்தின் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, மனிதாபிமான உதவிகள், பாரம்பரிய மறுசீரமைப்பு மற்றும் கனிம வள ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மங்கோலியாவிற்கு, இந்தியா இரண்டு பெரிய அண்டை நாடுகளுக்கு மாற்றாக ஒரு ஜனநாயக பங்காளியாக நிற்கிறது. இந்தியாவிற்கு, மங்கோலியா ஆசியாவின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான நண்பனாக திகழ்கிறது.
சீனாவின் அண்டை நாடான மங்கோலியா, இந்தியாவுக்கு நட்பு நாடாக மாறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
