சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாக பரவலாக ஒரு கருத்து நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் டாலரின் வலிமை மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார். டாலரை எதிர்க்கும் நாடுகளின் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும், குறிப்பாக பிரிக்ஸ் (BRICS) நாடுகள் டாலரின் ஆதிக்கத்தைத் தாக்க முயல்வதை தான் எப்படித் தடுத்தேன் என்றும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார். இருப்பினும், கள நிலவரம் டிரம்ப்பின் கூற்றுக்கு மாறாக உள்ளது என்றும், டாலரை நீக்கும் முயற்சியில் பிரிக்ஸ் நாடுகள் உறுதியாக முன்னேறி வருவதாகவும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதார வலிமைக்கு டாலரே அடிப்படை என்று நம்புபவர். அவரது கூற்றுப்படி டாலரில் வர்த்தகம் செய்ய விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் எப்போதும் அமெரிக்காவில் இருக்கும். டாலரின் ஆதிக்கத்தை குறைக்க அல்லது எதிர்க்க முயற்சிக்கும் நாடுகள் மீது அமெரிக்கா மிக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால் உண்மை நிலை என்னவெனில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு, டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து, தங்கள் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்களில் அல்லது ஒரு புதிய பொது நாணயத்தில் நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி, டிரம்ப் பார்வையில் டாலருக்கு எதிரான ஒரு “தாக்குதல்” ஆகும்.
பிரிக்ஸ் அமைப்பு, டாலருக்கு எதிராகச் செயல்பட்டால், அல்லது புதிதாக அந்த அமைப்பில் இணையும் நாடுகள் மீது அமெரிக்கா மிக அதிக வரிகளை விதிக்கும் என்று டிரம்ப் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். தான் விடுத்த இந்த அச்சுறுத்தலின் காரணமாகவே, பல நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணையும் முடிவை கைவிட்டதாகவும், பிரிக்ஸ் அமைப்பை பற்றிய பேச்சுகள் தற்போது குறைந்துவிட்டதாகவும் டிரம்ப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
ஆனால் டிரம்ப்பின் கூற்றுக்கு மாறாக, பிரிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் டாலரை நீக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வருவதாக சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். : டிரம்ப் கூறியதுபோல், நாடுகள் பின்வாங்கவில்லை. மாறாக, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு 10-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
டாலரின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான பிரிக்ஸ் நாடுகளின் முயற்சிகள் நடைமுறையில் தீவிரமடைந்துள்ளன: பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், தங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை பெரும்பாலும் அமெரிக்க டாலருக்கு பதிலாக, அவரவர் உள்ளூர் நாணயங்களில் நடத்த தொடங்கியுள்ளன. பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் இணைந்து, தங்கத்தால் ஆதரிக்கப்படும் அல்லது மற்றொரு வடிவத்தில் ஒரு புதிய பொதுவான வணிக நாணயத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் முக்கியத்துவம் வெகுவாகக் குறையும்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகளாவிய நாணய பரிமாற்றங்களுக்கான மையமாக அமெரிக்க டாலர் இருந்தது. இதனால் உலக பொருளாதாரத்தின் மீது அமெரிக்கா மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்த முடிந்தது. உலகமே ஒரு குடையின் கீழ் இயங்குவது போலவும், அமெரிக்கா அதன் ‘நாட்டாமை’ போலவும் செயல்பட்டது. தற்போது, பிரிக்ஸ் நாடுகள் தங்களின் சொந்த பொருளாதார நலன்களின் அடிப்படையில், தன்னிச்சையாக முடிவெடுக்க தொடங்கியுள்ளன. இந்த டாலரை நீக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றால், அது அமெரிக்க பொருளாதாரத்திற்கும், டாலரின் உலகளாவிய நிலைக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
உலகளாவிய பொருளாதார அதிகார மையம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து, பிரிக்ஸ் நாடுகள் தலைமையிலான வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளின் பக்கம் நகர தொடங்கியுள்ளது. இனிமேல், உலக நாடுகள் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியதில்லை என்ற எண்ணம் சர்வதேச அளவில் உருவாகி வருகிறது.
மொத்தத்த்ஹில் டொனால்ட் டிரம்ப் டாலரின் மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். அதே சமயம், பிரிக்ஸ் நாடுகளின் மீது அவர் பயன்படுத்தும் அச்சுறுத்தல் தந்திரங்கள், டாலருக்கு வரும் சவாலை அமெரிக்கத் தலைமை எவ்வளவு தீவிரமாக கருதுகிறது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், களத்தில் பிரிக்ஸ் உறுதியாக முன்னேறி வருகிறது. அதிக நாடுகள் இணைவது, மற்றும் டாலரை நீக்கும் முயற்சிகளில் உறுதியுடன் செயல்படுவது ஆகியவை, அமெரிக்காவின் ‘நாட்டாமை’ மெதுவாக முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளாகவே சர்வதேச அரசியல் வியூகர்களால் பார்க்கப்படுகின்றன. இது வெற்றி பெற்றால், சர்வதேச பொருளாதாரத்தின் எதிர்காலம் அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து விலகி, பல மையங்கள் கொண்ட புதிய உலகை நோக்கி நகரும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
