கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி முடிவுக்கு பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் நீதிமன்றத்தின் கருத்துக்கள் குறித்து பிரபல வழக்கறிஞர் நளினி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற விவாதங்கள் அரசியல்ரீதியான மோதல்களாக மாறியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையையும், அவர்களின் அடிப்படை வாழும் உரிமை பறிக்கப்பட்டதையும் பிரதானமாக கருத்தில் கொண்டது.
ஒன்றரை வயது குழந்தையை இழந்தோரின் கண்ணீரும், அழுகை குரலும் எங்களுக்கு முக்கியம். அதுவே எங்களின் கவனத்தை ஈர்க்கிறது,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இது, அரசியல்ரீதியான மோதல்களை தாண்டி, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
விபத்து நடந்த சில நாட்களிலேயே, தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். இதில், “காவல்துறையின் தரப்பில் எந்த தவறும் இல்லை” என்றும், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்கும்” என்றும் கூறியிருந்தனர்.
உச்ச நீதிமன்றம் இந்த செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு விபத்து நடந்த உடனேயே, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது, அரசு அதிகாரிகளும் ஆளும் தரப்பும் ஊடகங்களுக்கு வந்து “எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை” என்று பேசுவது, விசாரணை நியாயமாக நடக்காது என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் விதைத்துவிட்டது.
“அதிகாரிகளை வைத்து தமிழக அரசு மீடியா ட்ரையல் நடத்துகிறது. இது, மாநில காவல்துறையின் விசாரணை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது,” என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, ஒருவர் வழக்கில் பார்ட்டியாக இல்லாதபோது, அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்களை விமர்சிக்கவோ அல்லது விசாரணையை நடத்தவோ உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவாக செயல்படத் தேவையில்லை,” என்று கூறி, உயர் நீதிமன்றத்தின் எஸ்ஐடி உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி மற்றும் ஏற்கனவே இருந்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை அவர்கள் சேகரித்த ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும். விபத்து குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக சிபிஐ-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணையை ஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பார். மேலும், சிபிஐ அணியில் தமிழ்நாட்டு கேடரில் பணியாற்றும், ஆனால் தமிழர்களாக இல்லாத, காவல் துறை அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இது, விசாரணை தமிழக அரசின் சார்பு இல்லாமல் நடுநிலையாக நடக்க உறுதி செய்வதற்காகும்.
இந்தத் தீர்ப்பை எந்த அரசியல் கட்சிக்கும் கிடைத்த வெற்றியாக கருத முடியாது. மாறாக, நீதிமன்றத்தின் மூலம் பொதுமக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும் என்று வழக்கறிஞர் நளினி கருத்து தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
