அமெரிக்காவின் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பன்னாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள், இந்தியாவில் தாங்களே சரக்குகளை இருப்பு வைத்து நேரடியாக விற்க அனுமதி கேட்டு வருகின்றன. இது தொடர்பாக, அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் இந்திய அரசுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகர்வு, இந்திய சில்லறை வர்த்தகர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தற்போதைய விதிமுறை என்னவெனில் இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வகுத்துள்ள 2016 ஆம் ஆண்டின் பிரஸ் நோட் 3 விதியின்படி, வெளிநாட்டு முதலீடு கொண்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் சரக்கு இருப்பு சார்ந்த மாதிரியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியா மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஒரு சந்தை இடமாக மட்டுமே இந்தியாவில் செயல்பட முடியும். அதாவது, அவை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களுக்கான ஒரு டிஜிட்டல் தளமாக மட்டுமே செயல்பட வேண்டும். இந்த நிறுவனங்கள் தாங்களாகவே சரக்குகளை இருப்பு வைக்கவோ, விலை நிர்ணயிக்கவோ, விலையை கட்டுப்படுத்தவோ, அல்லது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவோ விற்பனை செய்ய முடியாது.
இந்த விதிமுறைகள், சிறு வணிகர்களை பாதுகாக்கவும், உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனங்களால் செய்யப்படும் விலை ஏற்ற இறக்கத்தை தடுக்கவும் உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்ளூர் நிறுவனங்களான ஜியோமார்ட், பிக்பாஸ்கெட், நைகா போன்ற நிறுவனங்கள் மட்டுமே தாங்கள் விரும்பிய பொருட்களை இருப்பு வைத்து விற்க அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால் அமெரிக்காவின் இகாமர்ஸ் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் தாங்களே சரக்குகளை இருப்பு வைத்து நேரடியாக விற்க அனுமதி கேட்டு புதிய கோரிக்கைகளை முன்வைக்கின்றன. அது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றன. அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை குழு தற்போது இந்தியாவை நோக்கி இந்த விதிகளை மாற்றியமைக்க கோரி அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்க தளங்களுக்கு ‘சமமான களம்’ அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.
இந்த கோரிக்கை எழுந்துள்ளதன் பின்னணி மிகவும் முக்கியமானது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக 25% அபராத வரி மற்றும் சமச்சீர் வரி 25% என இந்தியா மீது அமெரிக்கா ஏற்கனவே 50% வரியை சுமத்தியுள்ளது. இந்த வர்த்தக அழுத்தத்துடன் டிஜிட்டல் கொள்கைக்கான அழுத்தமும் இணைந்து வந்துள்ளது.
இந்தியா உலகிலேயே இரண்டாவது பெரிய ஆன்லைன் சந்தையாக உள்ளது. இங்கு 880 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயனாளர்கள் உள்ளனர். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் $800 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு மட்டும் $325 பில்லியன் ஆகும். இந்த மாபெரும் சந்தையின் கதவுகளை திறந்து, முழுமையான கட்டுப்பாட்டுடன் வர்த்தகம் செய்யவே அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் துடிக்கின்றன.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சரக்கு இருப்பு வைத்து விற்க அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்திய சில்லறை வணிகச் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று உள்ளூர் வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர். அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இந்த அனுமதி சிறிய சில்லறை வணிகர்களை அழித்துவிடும் என எச்சரித்துள்ளது. மேலும், இந்தியாவின் சந்தை கட்டுப்பாடு அமெரிக்க நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிடும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் விரிவான இ-காமர்ஸ் கொள்கை, தரவு ஒழுங்குமுறை, போட்டி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக பல மாதங்களாக ஆய்வில் உள்ளது. உலகளாவிய வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், இந்த கொள்கை இப்போது மறு மதிப்பீடு செய்யப்படுவதால், இதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் இந்திய அரசு ஆலோசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய சந்தையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் அமெரிக்காவின் அழுத்தம் ஆகிய இரண்டிற்கும் இடையே சமரசம் காணும் ஒரு புதிய யோசனை ஆராயப்படுகிறது. வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி, இருப்பு வைத்து கொள்ளலாம் என்ற திட்டம் தொடங்கப்படலாம். இது, உள்நாட்டுச் சந்தையை பாதிக்காமல் இருக்கும்.
அமெரிக்காவின் வர்த்தக போரால் உலக வர்த்தகமே பிளவுபட்டுள்ள நிலையில், இந்திய அரசு தனது தேசிய நலன்களை பாதுகாக்கும் விதத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது வர்த்தகக் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
