அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது அதிரடியாக புதிய மற்றும் கடுமையான வரிகளை அறிவித்ததை தொடர்ந்து, இந்த வாரம் உலக பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், என்விடியா மற்றும் டெஸ்லா ஆகிய மூன்று நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் சுமார் ரூ.63 லட்சம் கோடி அதிகமாக சரிந்தது. இதில் பியூட்டி என்னவெனில் மூன்றுமே அமெரிக்க நிறுவனங்கள். இதனால் அமெரிக்கா தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டதாக விமர்சனம் செய்யப்படுகிறது.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்கள் மீதும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்றும், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த வரிகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளே இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்று டிரம்ப் தரப்பில் கூறப்படுகிறது. சிப்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு மிக முக்கியமான கனிமங்களான அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதிக்கு சீனா சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள், அமெரிக்காவின் முக்கிய தொழில்களை பாதிக்கக்கூடியவை என்று கூறி, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிரம்ப் புதிய வரிகளை விதித்துள்ளார்.
அமெரிக்கா, சீனா இடையேயான இந்த வர்த்தக போரால் அமேசான், என்விடியா, டெஸ்லா போன்ற நிறுவனங்களின் விநியோகச் சங்கிலி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்நிறுவனங்களின் வர்த்தகம் சீனாவுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.
வரிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் போது, உதிரி பாகங்களுக்கான இறக்குமதி செலவு பல மடங்கு உயர்கிறது. இது தயாரிப்பு செலவுகளை அதிகரித்து, இலாபத்தைக்குறைக்கும்.சிப்கள் மற்றும் மென்பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள், செயற்கை நுண்ணறிவு துறையை நேரடியாக பாதிக்கும் அடியாக கருதப்படுகிறது. என்விடியா நிறுவனம் மட்டும் $200 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்தது.
அமெரிக்கா மட்டுமல்லாமல், ஹாங்காங் மற்றும் ஷென்சின் பங்குச்சந்தைகள் உட்பட ஆசியச் சந்தைகளும் கடுமையாகச் சரிந்தன. இந்த வர்த்தக போர் பங்குச் சந்தையில் மட்டும் நின்றுவிடாது. அமெரிக்காவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா – சீனா இடையே நடக்கும் வர்த்தகப்போர் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமையும் என்றும், சீன சந்தையில் இந்திய பொருட்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் வர்த்தக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருப்பினும், உலகளாவிய தேவை குறைவது அல்லது சீன விநியோகத்தில் ஏற்படும் சிக்கல் இந்திய ஏற்றுமதியையும் பாதிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் உள்ளது.
தற்போதைக்கு, உலக முதலீட்டாளர்கள் ஆபத்தை மறுமதிப்பீடு செய்து வருகின்றனர். வர்த்தகப்போர் அடுத்து எந்த திசையில் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
