உச்சநீதிமன்ற உத்தரவு விஜய்க்கு ஒரு வெற்றி தான்.. இனி அரசியல் ரீதியான அழுத்தம் குறையும்.. ஆனாலும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வது தான் விஜய்க்கு பாதுகாப்பு.. முத்தலிப் பேட்டி..!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.…

vijay video

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, கரூர் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், சி.பி.ஐ.யின் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஆனால் தமிழ்நாட்டைச் சாராத இரண்டு ஐ.ஜி. தரத்திலான காவல் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், உச்ச நீதிமன்றமே இந்த வழக்கின் விசாரணையை நேரடியாக கண்காணிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலிப் கருத்துத் தெரிவிக்கையில், “இது வரவேற்கத்தக்க நல்ல விஷயம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதால், ஆளும் கட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. உள்ளது என்று விமர்சிக்கலாம். ஆனால், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை அறிக்கை மாதம்தோறும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், இது நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும்” என்று விளக்கினார்.

பொதுநல வழக்கு எப்படி கிரிமினல் வழக்காக பதிவு செய்யப்பட்டது, எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டதில் உள்ள சிக்கல்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் அதன் பணியை தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் முத்தலிப் கூறினார்.

விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய முத்தலிப், இந்த சி.பி.ஐ. விசாரணை மற்றும் உச்ச நீதிமன்ற கண்காணிப்பு, விஜய் தரப்புக்கு ஒருவகையான சட்ட பாதுகாப்பை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். “அரசியல் ரீதியாக அவருக்கு ஒரு பேக்கப் தேவைப்படும். அது அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால் தான் நடக்கும். இப்போதாவது விஜய் இதை உணர்ந்து கூட்டணி நோக்கி நகர வாய்ப்புகள் அதிகம்” என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.