நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் சிலர் போலியாக ஆஜராகி இருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைத்த குற்றச்சாட்டையும் நீதிபதிகள் தீவிரமாக கவனத்தில் எடுத்துள்ளனர்.
சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்படுவது குறித்த உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங் மனு, எழுந்து ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். “இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் போலியானவை. யாருடைய பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டதோ, அவர்களே நீதிமன்றத்தில் ஆஜராகி, ‘தங்கள் அனுமதியின்றி போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது’ என்று கூறியுள்ளனர். அப்படி இருக்கும்போது, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது உகந்ததாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “நீதிமன்றத்தை ஏமாற்றியது தொடர்பாக தனியாக விசாரணை மேற்கொள்கிறோம். அந்த பிரச்சினை உரிய முறையில் விசாரிக்கப்படும் என்று உறுதி அளிக்கிறோம். ஆனால், தற்பொழுது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது மாற்றப்பட்டதுதான்” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இந்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த மனுவே முதன்மையானது என்றும், அந்த முதன்மை மனுவில் மனுதாரர்கள் கேட்ட நிவாரணத்தின் அடிப்படையில்தான் இரு நீதிபதிகள் அமர்வு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க.வின் மனுவில், கரூர் கூட்ட நெரிசலுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருந்ததாகவும், விஜய் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் நிர்வாகி தொடர்பாக பேசியபோதுதான் கலவரம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், கூட்டத்திற்குள் திடீரென ஆம்புலன்ஸ்கள் வந்ததாகவும், அந்த ஆம்புலன்ஸ்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் படம் ஒட்டப்பட்டிருந்தது என்றும் த.வெ.க. வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்திருந்தனர். இந்த கேள்விகளுக்கு புலன் விசாரணை மூலம் சி.பி.ஐ. விடை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி எஸ். செந்தில்குமார் அவர்கள், விஜய் மற்றும் த.வெ.க. குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். வழக்கில் விஜய் தரப்பு எதிர்மனுதாரராக இல்லாத சூழ்நிலையில், அவர் தலைமை பண்பை விமர்சித்தது ஏன் என்று வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
மேலும், தேர்தல் பிரச்சார நடைமுறைகளை வகுக்க கோரிப் பொதுநல வழக்காக தொடரப்பட்ட ஒரு விவகாரத்தை, தனி நீதிபதி கிரிமினல் வழக்காக எவ்வாறு பதிவு செய்ய உத்தரவிட்டார் என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர், தேர்தல் பிரச்சார வழிமுறைகளை வகுக்க கூறிய விவகாரத்தை கிரிமினல் வழக்காக எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நீதித்துறை நடைமுறைகள் தொடர்பான ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
மொத்தத்தில், கரூர் விபத்து வழக்கு சி.பி.ஐ.யின் கைகளுக்கு சென்ற நிலையில், மனுதாரர் மோசடி மற்றும் உயர் நீதிமன்ற நடைமுறை சிக்கல்கள் குறித்தும் உச்ச நீதிமன்றம் தனியே விசாரிக்க உள்ளது, இந்த வழக்கில் மேலும் பல பரபரப்பான திருப்பங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
