தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கோ அல்லது திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைப்பதற்கோ தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை ஒரு பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. விஜய் கூட்டணியில் சேராவிட்டால் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடுமையான அறிவுரைகளை வழங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிட்ட அதிமுக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்த்து வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்ற உணர்வு அதிமுக தலைவர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
தவெக தனியாக போட்டியிடும்பட்சத்தில், அல்லது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் விஜய்யின் மாபெரும் மக்கள் ஆதரவு, குறிப்பாக இளைஞர்களின் வாக்குகள், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக மூத்த தலைவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.
அதிமுக தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்தால், தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு கிளம்பும் சூழல் உருவாகும் என்றும், அவரது பதவிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஒரே வழி, விஜய்யுடன் கூட்டணி அமைப்பதே என்று மூத்த தலைவர்கள் சிலர் ஈபிஎஸ்-க்கு அறிவுறுத்தியுள்ளனர்.
“விஜய்யின் மாஸ் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியுடன் இணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். இல்லையேல் அதிமுக கதை முடிந்துவிடும். 2026 தேர்தலில் ஒருவேளை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், விஜய்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதே கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது. விஜய்யை எதிர்ப்பதை விட, அவரை அரவணைத்து செல்வதே இப்போதைய புத்திசாலித்தனம்” என்று கட்சிக்குள் பேச்சு அடிபடுவதாகத்தெரிகிறது.
அண்மைக் காலமாக எடப்பாடி பழனிசாமி, விஜய் மற்றும் தவெக குறித்து தனது கட்சியினர் கடுமையான விமர்சனங்களை வைக்க கூடாது என்று மறைமுகமாக அறிவுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இது விஜய்யுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்தை அதிமுக கொண்டிருப்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.
விஜய் தனது கட்சியை சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நிறுவியுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று அரசியலை வழங்குவதே தவெகவின் நோக்கம் என்று அவர் அறிவித்துள்ளார்.
அதிமுக, பா.ஜ.க.வுடன் விலகி நிற்கும் நிலையில், பா.ஜ.க.வின் ‘பாசிச’ அரசியலை தான் எதிர்க்க போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்திருப்பதால், பா.ஜ.க. இடம்பெறும் எந்த கூட்டணியிலும் தவெக சேராது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
எனவே, அதிமுக தங்களுக்குள்ளேயே இருக்கும் பிளவுகளை சரிசெய்து, விஜய்க்கு சமமான அரசியல் மரியாதையையும், முதல்வர் பதவிக்கான வாய்ப்பையும் அளித்தால் மட்டுமே தவெகவுடன் கூட்டணி சாத்தியம். இல்லையெனில், விஜய் இன்றி அதிமுகவின் நிலை இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு செல்வதை தடுக்க முடியாது என்பதே தமிழக அரசியல் களத்தில் நிலவும் எதார்த்தமாக கருதப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
