அண்மைக் காலங்களில், BRICS கூட்டமைப்பு பலம் பெறுவதையும், உலகளாவிய தெற்கு நாடுகள் அவற்றின் பொருளாதார இறையாண்மைக்காக குரல் கொடுப்பதையும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், ஒரு நேரடி அச்சுறுத்தலாக பார்க்க தொடங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வரை BRICSஐ கேலி செய்த மேற்கு நாடுகள், தற்போது அதன் பலத்தை ஒப்புக்கொண்டுள்ளது.
வாஷிங்டனின் முன்னணி சிந்தனை குழுக்களில் ஒன்றான ஹட்சன் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்று, பல்முனை உலகின் எழுச்சியையும், அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்கான வாஷிங்டனின் ஆக்ரோஷமான திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஹட்சன் அமைப்பு வெளியிட்ட அந்த அதிர்ச்சியூட்டும் அறிக்கையின் தலைப்பு என்னவெனில் BRICS-ஐ எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் உலகளாவிய டாலர் ஆதிக்கத்தை பாதுகாப்பது என்பது தான்.
இந்த அறிக்கை, BRICS கூட்டமைப்பை ஒரு எதிரியாக அடையாளப்படுத்துகிறது. உலகளாவிய தெற்கு நாடுகள் உண்மையான அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை விரும்பவில்லை; மாறாக, வாஷிங்டனுக்கு எதிராக ஒன்றிணைவதே அதன் நோக்கம் என்றும் அது வாதிடுகிறது.
மிக முக்கியமாக, BRICS நாடுகள் தங்கள் நிதி பரிமாற்றங்களுக்காக உருவாக்க விரும்பும் மாற்று அமைப்புகள், “ஹவாலா நெட்வொர்க் போன்ற பயங்கரவாதக் குழுக்கள்” பயன்படுத்தும் முறைகளுக்கு ஒத்ததாக இருப்பதாக இந்த அறிக்கை ஒப்பிடுகிறது. பொருளாதார இறையாண்மையை பெற முயற்சிக்கும் நாடுகளை, அமெரிக்காவின் முன்னணி சிந்தனைக் குழு ஒன்று பயங்கரவாதத்துடன் ஒப்பிடுவது, வாஷிங்டன் எந்த அளவிற்கு பீதியடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
BRICS ஒரு ராணுவ கூட்டமைப்பு அல்ல, அது பொருளாதார நோக்கம் கொண்டது என்றும், சமத்துவமான அடிப்படையில் மேற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் BRICS தலைவர்கள் இந்த கட்டுரைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும், ஹட்சன் அமைப்பு அதை அச்சுறுத்தலாகவே பார்க்கிறது.
1944-இல் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு உருவானதிலிருந்து அமெரிக்காவின் உலகளாவிய அதிகாரத்தின் அடித்தளமாக டாலரின் முதன்மை நிலை இருந்தது. ஆனால், 2014-இல் BRICS நாடுகள் புதிய மேம்பாட்டு வங்கியை நிறுவியது, இருதரப்பு நாணய பரிமாற்ற ஒப்பந்தங்களை அதிகரித்தது, மற்றும் யுவான் ஆதிக்கம் செலுத்தும் வர்த்தகத்தை ஊக்குவித்தது ஆகியவை டாலரின் மையநிலையை அரிக்கும் கருவிகள் என்று ஹட்சன் அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் மற்றும் டாலரை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதுமே, உலகளாவிய தெற்கு நாடுகளை மாற்று தளங்களை தேட தூண்டியது என்பதை வாஷிங்டன் ஏற்க மறுக்கிறது. அதற்குப்பதிலாக, BRICS நாடுகளின் “டாலர் அல்லாத வர்த்தகத்தை” ஊக்குவிக்கும் நிதி நிகழ்ச்சி நிரலை, அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக கருதுவதாக ஹட்சன் ஒப்புக்கொள்கிறது.
மொத்தத்தில், இந்த அறிக்கை BRICS நாடுகள் அதிகார பிணைப்பை கோருவதையும், அமைதியான ஒத்துழைப்பை விரும்புவதையும் அமெரிக்கா எவ்வாறு ஆக்கிரமிப்புடன் அணுகப் போகிறது என்பதைக் காட்டுகிறது. பொருளாதார நிர்ப்பந்தத்தின் தோல்வியடைந்த கொள்கைகளை திரும்பப் பெறாமல், இன்னும் அதிக தடைகளை பயன்படுத்த பரிந்துரைப்பது, உலகளாவிய நிதி பல்முனை மாற்றத்தை மேலும் விரைவுபடுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
