விஜய்காந்த் ஒரு தொகுதியில் தான் ஜெயித்தார்.. கமல்ஹாசனால் அது கூட ஜெயிக்க முடியவில்லை.. ரஜினி அரசியலே வேண்டாமென தெறிச்சு ஓடினார்.. தமிழ்நாட்டு அரசியல் கூட்டணி அரசியல் தான்.. அதனால் தான் திமுக இன்னும் ஒருமுறை கூட தனியாக போட்டியிடவில்லை.. விஜய் இதையெல்லாம் புரிந்து கொள்ளனும்..

தமிழக அரசியல் வரலாற்றில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனியாக நின்று அசுர பலம் பெற முடியுமா அல்லது தவிர்க்க முடியாத கூட்டணி அரசியலுக்குள் செல்லுமா என்ற விவாதம் மிக தீவிரமாக எழுந்துள்ளது.…

vijayakanth kamal vijay

தமிழக அரசியல் வரலாற்றில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனியாக நின்று அசுர பலம் பெற முடியுமா அல்லது தவிர்க்க முடியாத கூட்டணி அரசியலுக்குள் செல்லுமா என்ற விவாதம் மிக தீவிரமாக எழுந்துள்ளது. இதற்கு முன் களமிறங்கிய சூப்பர் நடிகர்களான விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் அனுபவங்களே, தமிழ்நாட்டின் அரசியல் களம் கூட்டணி என்ற கட்டமைப்பை மீறி செல்ல முடியாதது என்பதை உணர்த்தும் வரலாற்று பாடமாக உள்ளது.

நடிகர் விஜயகாந்த், 2005-ஆம் ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியை தொடங்கியபோது, தனியாக போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவுடன்தான் களமிறங்கினார். தே.மு.தி.க. முதன்முதலில் தனித்து களமிறங்கியது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய விஜயகாந்த், தனக்கு என்று ஒரு நிலையான வாக்கு வங்கியை உருவாக்கினார். ஆனால், அவரால் ஒரே ஒரு தொகுதியில் அதாவது அவர் போட்டியிட்ட விருத்தாசலம் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

விஜயகாந்த் கூட்டணி அரசியலின் அவசியத்தை உணர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு எதிரான அலையை பயன்படுத்தி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த கூட்டணியின் அமோக வெற்றியால், விஜயகாந்த் 25 தொகுதிகளை கைப்பற்றி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற மிக உயர்ந்த அந்தஸ்தை பெற்றார்.

விஜயகாந்தைப் போன்ற பலம் வாய்ந்த நடிகர், தனித்து நின்று ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லை என்பதையும், கூட்டணி சேரும்போது மட்டுமே அதிகாரத்தை எட்ட முடியும் என்பதையும் அவரது அரசியல் பயணம் நிரூபித்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், 2019 மக்களவை தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்கினார். கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு பெரிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணியிலும் சேராமல், ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி போட்டியிட்டது.

அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். கடுமையாக போராடிய போதிலும், அந்த ஒரு தொகுதியில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரது கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் கிடைத்தாலும், தமிழக சட்டசபைக்குள் நுழைய முடியவில்லை.

கூட்டணி பலமின்றி, பிரபலமான நட்சத்திரமாக இருந்தாலும், வலுவான திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை மீறி ஒரு தொகுதியில்கூட வெல்வது சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை கமல்ஹாசனின் தோல்வி உணர்த்தியது.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் மிகப்பழமையான மற்றும் பலமான கட்சிகளில் ஒன்று. மாநில அளவில் மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்திருந்தாலும், அந்த கட்சி வரலாற்றில் ஒருமுறை கூட சட்டமன்ற தேர்தலில் தனித்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு போட்டியிட்டதில்லை அல்லது தனித்துப் போட்டியிட்டு அறுதி பெரும்பான்மையை பெற்றதில்லை. கூட்டணி தான் அந்த கட்சியை இன்று வரை காப்பாற்றி வருகிறது.

திமுக எப்போதும் காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது வேறு சில கட்சிகளாக இருக்கட்டும், ஒரு வலுவான ‘மெகா கூட்டணியை’ திரட்டிக் கொண்டே களமிறங்குவார்கள். இதற்கு ஒரே காரணம், தமிழக அரசியல் என்பது கூட்டணி அரசியல் என்ற அடிப்படை விதியாகும். வெற்றிக்கு தேவை வாக்கு சதவீதங்களை சேகரிக்கும் கூட்டணிக் கட்சிகள்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டுள்ளார். அவர் பின்வரும் முக்கியப் பாடங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்:

தமிழகத்தில் வாக்குகள் பிரதானமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என்ற இரு பெரும் திராவிட கட்சிகளுக்கிடையே பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய கட்சி, தனது நட்சத்திர பலத்தால் வாக்குகளை பெற்றாலும், வெற்றிக்கு தேவையான 50%-க்கும் அதிகமான வாக்குகளை பெற, கூட்டணிக் கட்சிகளின் சிறு வாக்குகளின் பங்களிப்பு அத்தியாவசியமாகிறது.

விஜயகாந்த் கூட்டணியில் இணைந்தபோது எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், தனித்து நின்றபோது தோல்வி கண்டார். தமிழகத்தில் அதிகாரம் என்பது கூட்டணி என்னும் பாலத்தின் வழியே மட்டுமே சாத்தியமாகும். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஆழமான கிளைகளை பரப்பியுள்ளன. இவர்களின் பூத் கமிட்டி கட்டமைப்புகளை சமாளிக்க, த.வெ.க.வும் மற்ற கட்சிகளின் அமைப்பு பலத்தையும், தொண்டர் பலத்தையும் நம்பியே ஆக வேண்டும்.

எனவே, நடிகர் விஜய் தனது இலக்கை வெற்றிகரமாக அடைய வேண்டுமென்றால், ‘தனித்து ஆட்சி’ என்ற ஆரம்பநிலை கொள்கையிலிருந்து விலகி, கூட்டணி அரசியலின் தவிர்க்க முடியாத யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயல்படுவது காலத்தின் கட்டாயமாகிறது. இல்லையெனில், விஜயகாந்த் ஒரு தொகுதியில் பெற்ற வெற்றியோ அல்லது கமல்ஹாசன் பெற்ற வாக்கு சதவீதமோ மட்டுமே மிஞ்சும் நிலை உருவாகலாம்.