இந்தியாவில் அறிமுகமாகிறது காகிதமற்ற டிஜிட்டல் நாணயம்.. ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவு மிச்சம்.. பணம் அனுப்ப டிஜிட்டல் எண் அல்லது QR கோடு போதும்.. UPI பரிவர்த்தனையும் இதுவும் ஒன்றா? அல்லது வேறுபாடு உள்ளதா? இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி..!

யு.பி.ஐ மூலம் உலக வரலாற்றில் முத்திரை பதித்த இந்தியா, இப்போது மற்றொரு மிகப்பெரிய மைல்கல்லை நோக்கி நகர தயாராகிவிட்டது. ஆம், விரைவில் இந்தியாவில் ‘காகிதமற்ற டிஜிட்டல் நாணயம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது! இது வெறும் வதந்தியல்ல.…

e rupee

யு.பி.ஐ மூலம் உலக வரலாற்றில் முத்திரை பதித்த இந்தியா, இப்போது மற்றொரு மிகப்பெரிய மைல்கல்லை நோக்கி நகர தயாராகிவிட்டது. ஆம், விரைவில் இந்தியாவில் ‘காகிதமற்ற டிஜிட்டல் நாணயம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது!

இது வெறும் வதந்தியல்ல. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களே இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “இந்த புதிய டிஜிட்டல் நாணயம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ‘ஸ்டேபிள் காயின்கள்’ போன்றே இருக்கும். இது காகித பயன்பாட்டை குறைக்கும், பரிவர்த்தனைகளை வேகமாகவும் எளிமையாகவும் மாற்றும். இது இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், இந்திய அரசு ஒரு புதிய வகையான ‘டிஜிட்டல் நோட்டை’ அறிமுகப்படுத்த போகிறதா? இந்த காகிதமற்ற நாணயம் என்றால் என்ன? இதை எப்படிப் பரிமாற்றம் செய்வது? இது நாம் இப்போது பயன்படுத்தும் Google Pay, PhonePe போன்ற UPI பரிவர்த்தனைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது? பாதுகாப்பானதுதானா? இவை அனைத்தையும் விரிவாக பார்ப்போம்.

கத்தாரில் நடைபெற்ற வர்த்தக பேச்சுவார்த்தையின்போதுதான், பியூஷ் கோயல் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் இந்தியாவின் சொந்த டிஜிட்டல் நாணயம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அது எவ்வாறு செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.

“பிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோகரன்சிகளை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. ஆனால், அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு புதிய வகை கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்துகிறோம். இந்த புதிய டிஜிட்டல் நாணயம் (e₹ – டிஜிட்டல் ரூபாய்), முற்றிலும் பாதுகாப்பானது. இது காகித பணத்தை போலவே செயல்படும், ஆனால் மின்னணு வடிவில் மட்டுமே இருக்கும். இது நேரடியாக இந்திய ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படும். மேலும், வழக்கமான வங்கி பரிவர்த்தனைகளை விட இது மிகவும் வேகமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும். இந்த நடவடிக்கையின் மூலம், உலகிலேயே ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இணைகிறது.

டிஜிட்டல் ரூபாய் எப்படி இயங்கும்? UPI-யை விட ஏன் வேறுபட்டது? என்ற பலரது கேள்விக்கான விடையை பார்ப்போம். CBDC ((Central Bank Digital Currency) என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் அதாவது ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வமான டிஜிட்டல் நாணயமாகும். இந்த டிஜிட்டல் ரூபாய், தற்போது நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைவிட முற்றிலும் மாறுபட்டது.

நீங்கள் ஒருவருக்கு டிஜிட்டல் ரூபாயை அனுப்பும்போது, ஒரு ‘எண்’ மாத்திரமே ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு செல்லாது. மாறாக, நீங்கள் அசல் மதிப்புள்ள ஒரு டிஜிட்டல் டோக்கனை அல்லது க்யூ.ஆர். குறியீடு போன்ற ஒரு அங்கத்தை அனுப்புவீர்கள். இது காகித பணத்தை நேரடியாக கைமாற்றுவது போன்றது, ஆனால் மின்னணு வடிவத்தில் நடக்கும்.

தற்போது பணத்தை வங்கிக்கணக்கில் வைத்திருப்பதை போலல்லாமல், இந்த டிஜிட்டல் நாணயத்தை நீங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் டிஜிட்டல் வாலட்டில் சேமித்து வைக்கலாம். இது உங்கள் பையில் பணத்தை வைத்திருப்பது போல. இதனால் வங்கி திவாலானாலும் உங்கள் பணத்திற்கு ஆபத்து இருக்காது என்ற ஒரு பாதுகாப்பு அம்சம் உள்ளது.

இந்த டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பு பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை போல மாற்றமடையாது. உங்கள் டிஜிட்டல் வாலட்டில் ரூ.1,000 இருந்தால், அதன் மதிப்பு எப்போதும் ரூ.1,000 ஆகவே இருக்கும். இது அசல் காகித நாணயத்தின் மதிப்பிற்கு சமமானது. மேலும், இது நேரடியாக ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்பட்டு, பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுவதால், மிகவும் பாதுகாப்பானது என்றும் அரசு உறுதியளிக்கிறது.

சிறிய அளவிலான பரிமாற்றங்களுக்கு இணைய இணைப்பு கூட தேவையில்லாத வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. இது, டிஜிட்டல் ரூபாய் நேரடியாக டிஜிட்டல் டோக்கன்களாக பரிமாற்றம் செய்யப்படுவதால், இணைய வசதி குறைவாக உள்ள கிராமப்புற பகுதிகளிலும் பயன்பாட்டிற்கு வழி வகுக்கும்.

இந்தியா இந்த திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு முக்கிய மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன:

1. பண செலவை குறைத்தல்: காகித நாணயங்களை அச்சிடுவதற்கும், பராமரிப்பதற்கும் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகிறது. இந்தக் காகிதமற்ற நாணயத்தின் அறிமுகம் மூலம் மக்களின் வரிப்பணம் மற்றும் வளங்கள் பெருமளவு சேமிக்கப்படும்.

2. கறுப்புப் பண ஒழிப்பு: ஒவ்வொரு பரிவர்த்தனையும் டிஜிட்டல் தடயத்தை விட்டுச் செல்லும் என்பதால், வரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பண பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு இது உதவும்.

3. வேகமான பரிவர்த்தனை: வங்கி இடையீடுகள் இல்லாததால், பணம் செலுத்துவது மிகவும் வேகமாகவும், திறமையாகவும் மாறும்.

2023ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 134 நாடுகள் தங்கள் சொந்த மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை உருவாக்குவதிலோ அல்லது ஆய்வு செய்வதிலோ ஈடுபட்டுள்ளன. சீனா (‘டிஜிட்டல் ரென்மின்பி’), பஹாமாஸ் (‘சாண்ட் டாலர்’), நைஜீரியா (‘இ-நைரா’) போன்ற நாடுகள் ஏற்கனவே CBDC-ஐ அறிமுகப்படுத்தியுள்ளன.

அதே சமயம், அமெரிக்கா போன்ற நாடுகள் தனியுரிமை, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் வங்கி அமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக அதிகாரப்பூர்வ டிஜிட்டல் டாலரை அறிமுகப்படுத்துவதை தடை செய்துள்ளன.

யு.பி.ஐ. போலவே இந்த டிஜிட்டல் ரூபாயும் இந்தியாவில் அடுத்த பெரும் புரட்சியாக மாறுமா? அல்லது கட்டுப்பாடு, தனியுரிமை மற்றும் சுதந்திரம் குறித்து புதிய கேள்விகளை எழுப்புமா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

காகிதமற்ற இந்த டிஜிட்டல் நாணயம் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை எப்படி மாற்றியமைக்கும்? இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பதை சொல்லுங்கள்.