பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஐந்தாவது நாளில் நடந்த முக்கியமான சம்பவங்கள் குறித்து தற்போது பார்ப்போம். ஐந்தாவது நாளில் ஐந்து முக்கிய விஷயங்கள் நடந்தன. அவை
1. துஷார் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. நந்தினி வெளியேற்றப்பட்டார்
3. ஆதிரை விதிகளை மீறினார்.
4. பிக் பாஸின் உந்துதலின் பேரில், கனி மற்ற போட்டியாளர்களின் பங்களிப்பு குறித்து சில விஷயங்களை பேசினார்.
5. வியனா மற்றும் வினோத் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலான போட்டியாளர்கள் தங்கள் சொந்த தேவைகள் மற்றும் சுயநலத்திற்காகவே விளையாடுகிறார்கள் என்ற விமர்சனம் வலுவாக எழுந்துள்ளது. இது எல்லா சீசனிலும் இருந்தாலும் இந்த சீசனில் கொஞ்சம் அதிகமாவே உள்ளது.
நேற்றைய எபிசோடில் கனி எழுப்பிய நியாயமான கேள்வி என்னவெனில் ஒழுங்குமுறையை போட்டியாளர்கள் மீறினார்கள் என்பதுதான். பிக் பாஸ் வீட்டில் விதிகள் மற்றும் அறிவிப்புகள் குறித்த அடிப்படை புரிதல் கூட பல போட்டியாளர்களிடம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது.
பிக் பாஸ் வீட்டின் விதிகள் தமிழில் தெளிவாக படிக்கப்பட்டாலும், அதனை உள்வாங்கவோ, அதன்படி நடந்துகொள்ளவோ பலரும் தயாராக இல்லை. ஒரு அறிவிப்பு படிக்கப்படும்போது, சிறு குழந்தை போல அதனை கவனிக்காமல் அடிப்படை ஒழுங்குமுறைகூட இங்கு இல்லை.
முக்கியமாக, ஒரு டாஸ்க் தொடர்பான அறிவிப்பை படிக்கும்போது, வியனா மற்றும் பார்வதி போன்றோர் அடுத்தடுத்து ‘ரெஸ்ட் ரூம்’ செல்ல எழுந்தது குறித்து கனி கேள்வி எழுப்பினார். “5 நிமிடம் கூட பொறுக்க முடியாதா? இதுபோல விதியை மீறினால் என்ன அர்த்தம்?” என்று கனி கேட்டது நியாயமானது.
ஆனால், சீனியர் போட்டியாளரான பார்வதி இதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. “அடக்க முடியவில்லை,” என்று கூறியதோடு, கனி அறிவுரை கூற முற்படும்போது, “அந்த பொண்ணு வந்தவுடன் எல்லாவற்றையும் சேர்த்து சொல்லுங்கள்” என்று கனிக்கு எதிராக பேசினார்.
ஒரு சீனியர் போட்டியாளராக இருந்து கொண்டு, அடிப்படை ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பதும், அதனை சுட்டிக்காட்டும்போது அடக்க முடியாதது போல நடிப்பதும், ஒரு ‘சீனியர் பிம்பத்தை’ வீட்டின் மீது சுமத்தி, மற்றவர்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. கனி நியாயம் பேசியபோதும், திவாகர் மட்டுமே பார்வதிக்கு ஆதரவாக வந்து பேசினார். மற்ற போட்டியாளர்கள் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தனர். இது போட்டியாளர்களுக்கு இன்னும் மெச்சூரிட்டி வரவில்லை என்பது தெரிகிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் வரும்போது, சில போட்டியாளர்கள் தங்களுடைய எளிமையான பின்னணி மற்றும் உழைப்பு குறித்து பெருமையாக பேசினார்கர். ஆனால், அவர்களுக்கு சவுகரியமான சூழல் வரும்போது அவர்களது செயல்பாடு சபரி, தான் ஒரு வீலாகர் என்றும், அதிகாலையிலேயே எழுந்து உழைப்பதாகவும் ஆரம்ப நாளன்று கூறினார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் AC வசதியுடன் கூடிய சொகுசான அறை இருக்கும்போது, மற்றவர்களுக்கு உணவு சமைக்க வேண்டிய தேவை இருந்தும், அவர் காலையில் 9 மணி வரை உறங்குகிறார்.
காலையில் காபி, சமையல் வேலைகளுக்காக கனி கெஞ்சி கேட்கும்போதும், “எழுந்தால் பாட்டு போடுவார்கள், அப்புறம் தூக்கம் கலைந்துவிடும்” என்று வினோத் போன்றவர்கள் காரணம் சொல்வது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘அதிகாரம்’ மற்றும் ‘சுகவாச பழக்கத்தை’ வெளிப்படுத்துகிறது.
கடின உழைப்பை அடையாளமாக பேசும் நபர்கள், சலுகைகள் கிடைக்கும்போது, தங்களுக்காக உழைக்கும் சக போட்டியாளர்களுக்காக கூட எழுந்து உதவ மறுப்பது, எளிமையான ஆட்களிடம் அதிகாரம் கிடைக்கும்போது அவர்களின் அணுகுமுறை எப்படி மாறுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள் மற்றும் பிரச்னைகள், போட்டியாளர்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு பதிலாக, ஒருவரையொருவர் குறை சொல்லும் களமாகவே மாறுகிறது. நேற்று தண்ணீர் பிரச்னையின் போது கம்ருதீன் கோபமாக பேசியதற்காக, இன்று அவர் முகமூடியை கழற்றியது குறித்து ஆதிரை கேள்வி எழுப்புவது, “எல்லாரும் யோக்கியம், நீங்கள் மட்டும் யோக்கியன் இல்லை” என்ற ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கவே பயன்படுகிறது.
அதேபோல் தப்பு செய்தவர்கள் மீது பழி போட்டு, தங்கள் தவறுகளை மறைத்துக்கொள்வது இங்கு சர்வசாதாரணமாக நடக்கிறது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடம் காணப்படும் ஒரு பெரிய மைனஸ் என்னவென்றால், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லை என்பதுதான். டாஸ்கில் தோற்றதற்காக முகமூடி அணிந்திருந்த ஆதிரை, தன்னுடைய கேள்வி நியாயமானது என்று நிரூபிக்க, முகமூடியை கழற்றுகிறார். இது, தான் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ள மறுப்பதையும், விதிகளை தனக்குச் சாதகமாக மீறுவதையுமே காட்டுகிறது.
பார்வதியின் உணர்வுபூர்வமான நாடகம் நேற்றைய எபிசோடில் நடந்தது. சண்டைக்கு பிறகு, கனி வந்து ‘சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டதற்கு, பார்வதி மிகவும் மோசமான எதிர்வினையை கொடுத்தார். ‘எப்படி என்னை கேட்க தோன்றியது?’ என்பது போல அவரது ரியாக்ஷன் இருந்தது. இங்கே கனி, தன் கடமையை மனிதநேயத்துடன் செய்தபோதும், பார்வதி அதை ஒரு சண்டைக்கான ஆயுதமாக மாற்ற முயன்றார். சபரி மட்டுமே நடுநிலையுடன், ‘நேற்று நடந்தது போகட்டும்’ என்று பார்வதிக்கு அறிவுரை கூறினார்.
நேற்றைய சம்பவங்கள், பிக் பாஸ் வீட்டில் சுயநலம், போலியான உணர்வுகள் மற்றும் அதிகாரம் கிடைத்தவுடன் மாறும் மனநிலை ஆகியவை மட்டுமே மேலோங்கி நிற்கிறது என்பதையே மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. வரும் நாட்களில், போட்டியாளர்கள் தங்கள் பொது புத்தியை பயன்படுத்தி, விளையாட்டு உணர்வுடன் செயல்படுவார்களா அல்லது இந்த சலுகை அரசியலை தொடர்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
