திரையுலகில் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கும் வாய்ப்பை துறந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது, அவரை தமிழகத்தின் முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்ற கனவை அவரது ரசிகர்கள் மத்தியில் விதைத்துள்ளது. சமீபத்திய அரசியல் சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம், மேலும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது.
இந்த கூட்டணி மற்றும் பதவிக் குறித்த பேச்சு, விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பிளவுபட்ட கருத்துகளையும் உருவாக்கியுள்ளது.
விஜய்யின் பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் த.வெ.க. ஆதரவாளர்களின் சமூக வலைதள பதிவுகள், அவர்கள் விஜய்யை முதலமைச்சர் அல்லது சூப்பர் ஸ்டார் என்ற முதல் இடத்திலேயே பார்க்க விரும்புவதை பிரதானமாகக் காட்டுகிறது.
“விஜய், துணை முதலமைச்சர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் போன்ற இரண்டாம் நிலை பதவிகளுக்காக அரசியலுக்கு வரவில்லை. அவர் வந்தால், முதலமைச்சராகவே வரவேண்டும்.”
ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஒரு மாநிலத்தில் இரண்டாம் நிலை ஆளாக இருக்க அவர் தேவையில்லை.
ஒருவேளை முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை என்றால், அவர் அரசியலை விடுத்து, மீண்டும் சினிமாவில் ‘நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார்’ இடத்தை தக்கவைத்துக்கொண்டு நீடிக்கலாம். துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற இரண்டாம் கட்ட பாத்திரங்களை அவர் ஏற்கக் கூடாது.
விஜய்யை எப்போதும் உச்சத்தில் பார்க்க விரும்பும் ரசிகர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் இந்த பதிவுகள், தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்யும் கிட்டத்தட்ட கூட்டணி என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், ரசிகர்கள் முன்வைக்கும் இந்த கருத்துக்கள் விஜய்யின் அரசியல் வியூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.
அரசியல் என்பது வெறுமனே தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமல்ல; கூட்டணி பலமே உடனடி அதிகாரத்தை கைப்பற்ற அத்தியாவசியமானது. இந்த அடிப்படை உண்மையை விஜய் நன்கு உணர்ந்திருப்பார்.
ஒருபுறம் ரசிகர்கள் அவரை தலைமை பதவிக்கு கட்டாயப்படுத்துகின்றனர். மறுபுறம், ஒரு பெரிய கூட்டணியில் இணைவதன் மூலம் கிடைக்கும் அதிகாரமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் அவரது கட்சியின் நீண்டகால வளர்ச்சிக்கு அவசியம்.
துணை முதலமைச்சர் பதவி என்பது உடனடியாக ஒரு மாநில நிர்வாகத்தில் ஆளுமை செலுத்தும் அதிகாரத்தையும், அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். இருப்பினும், தனது ரசிகர்கள் மற்றும் அடிப்படை ஆதரவாளர்களின் தீவிரமான மனநிலையை விஜய் புறக்கணிக்க முடியுமா என்பதும் சவால்தான்.
விஜய் தனது ரசிகர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, இரண்டாம் நிலை பதவிகளை முற்றிலும் நிராகரிப்பாரா, அல்லது தனது அரசியல் லட்சியங்களை அடைவதற்காக தற்காலிகமாக ஒரு பெரிய கூட்டணியின் கீழ் அதிகாரத்தை பெற துணிவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய் தனது அடுத்த அடியை எப்படி வைக்க போகிறார் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
