அமெரிக்க நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகிறதா? ஒரே பணத்தை 4 நிறுவனங்கள் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்தும் மாயாஜாலம்.. இதுதான் ’வட்ட முதலீடு’.. ஆனால் ஒரு நிறுவனம் நஷ்டமடைந்தால் டோட்டலாக எல்லாமே Collaps..

செயற்கை நுண்ணறிவு துறையானது முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படுவதால், இத்துறை அபார வளர்ச்சியில் உள்ளது. இருப்பினும், ஆய்வாளர்கள் ‘வட்ட முதலீடு’ (Circular Deals) என்ற…

open ai

செயற்கை நுண்ணறிவு துறையானது முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படுவதால், இத்துறை அபார வளர்ச்சியில் உள்ளது. இருப்பினும், ஆய்வாளர்கள் ‘வட்ட முதலீடு’ (Circular Deals) என்ற கவலையளிக்கும் வடிவத்தை சுட்டிக்காட்டி, ஒரு பெரிய பொருளாதாரக் குமிழி (Bubble) உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.

‘வட்ட முதலீடு’ என்றால் என்ன? என்பதை தற்போது பார்ப்போம். ‘வட்ட முதலீடு’ என்பது ஒரு சில சக்திவாய்ந்த நிறுவனங்களுக்கு இடையே ஒரே பணம் திரும்ப திரும்ப முதலீடாக மாறும் ஒரு சிக்கலான வலையமைப்பாகும்.

உதாரணமாக மைக்ரோசாஃப்ட், OpenAI-இல் சுமார் $13 பில்லியன் முதலீடு செய்துள்ளது. ஆனால், மைக்ரோசாஃப்ட் வெறும் முதலீட்டாளர் மட்டுமல்ல; அதுவே OpenAI-இன் மிகப்பெரிய வாடிக்கையாளரும் கூட. அதாவது Azure மூலம் கிளவுட் உள்கட்டமைப்பை வழங்குபவரும் ஆகும். எனவே, மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்யும் பணத்தின் கணிசமான பகுதி, கிளவுட் சேவைகளுக்கான கட்டணமாக மீண்டும் மைக்ரோசாஃப்ட்டுக்கே திரும்பி செல்கிறது.

SoftBank – Nvidia – Oracle – OpenAI வட்டம்: இந்த கூட்டில் மேலும் பல நிறுவனங்கள் இணைகின்றன. SoftBank, OpenAI-இல் முதலீடு செய்கிறது. OpenAI, சிப்ஸ்கள் மற்றும் கணினி ஆற்றலுக்காக Nvidia-விடம் செலவு செய்கிறது. Nvidia, OpenAI-இல் $100 பில்லியன் வரை முதலீடு செய்கிறது. OpenAI அந்த பணத்தை Oracle-இடம் இருந்து கணினி வாங்க பயன்படுத்துகிறது. Oracle, Nvidia-விடம் இருந்து சுமார் $40 பில்லியன் மதிப்புள்ள சிப்ஸ்களை வாங்குகிறது. இதுபோக, Nvidia, OpenAI-இற்கு AI உள்கட்டமைப்பை வழங்கும் Coreweave என்ற நிறுவனத்திலும் பங்கு வைத்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நிறுவனமும் முதலீட்டாளர், சப்ளையர், வாடிக்கையாளர் மற்றும் கூட்டாளர் என பல வடிவங்களில் ஒரே நேரத்தில் அணிந்துள்ளன.

இந்த ‘வட்ட முதலீடு’ நிஜமான வளர்ச்சியை மறைக்கும் ஒரு மாயையை உருவாக்குகிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வால் ஸ்ட்ரீட் ஆராய்ச்சி நிறுவனமான New Street Research-இன் மதிப்பீட்டின்படி, Nvidia, OpenAI-இல் முதலீடு செய்யும் ஒவ்வொரு $10 பில்லியனுக்கும், சிப் வாங்குதல் அல்லது குத்தகை கொடுப்பனவுகள் மூலம் சுமார் $35 பில்லியனை திரும்பப் பெறுகிறது. இது Nvidia-வின் ஆண்டு வருவாயில் சுமார் 27% ஆகும்.

இந்த நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதால், ஒரு முக்கிய நிறுவனம் தடுமாறினால், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் சீட்டுக்கட்டுகள் போல சரியக்கூடும். இதே பணம் ஒரே நிறுவனங்களுக்குள் வட்டமிடுவது, மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையாக தோன்றினாலும், உண்மையில் இது பணத்தை இடது பாக்கெட்டில் இருந்து வலது பாக்கெட்டிற்கு மாற்றுவது போலத்தான் என்றும், உண்மையான சந்தை மதிப்பு குறித்து கேள்வி எழுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வட்ட முதலீடு ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப குமிழி வெடித்தால், அமெரிக்காவின் ஜி.டி.பி. வளர்ச்சி 1.7% ஆக குறையக்கூடும் என்றும், இதன் அலைகள் கனடா, மெக்சிகோ முதல் தைவான், தென் கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் பாதிக்கும் என்றும் ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் கணித்துள்ளது.

இந்த வட்ட முதலீடு சட்டவிரோதமானது அல்ல என்றும், நவீன சிலிக்கான் பள்ளத்தாக்கு இப்படித்தான் செயல்படுகிறது என்றும் சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். AI இறுதியில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும், இந்தச் சந்தை குமிழி 2000-ஆம் ஆண்டில் வெடித்த டாட்காம் குமிழியை விட இப்போது கட்டுக்குள் இருப்பதாகவே தெரிகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், இந்த AI ஏற்றம் ஒரு சில நிறுவனங்களை மட்டுமே சார்ந்துள்ளது என்பதும், ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சி ஒட்டுமொத்த துறையின் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதும் தான் தற்போதைய மிகவும் அபாயகரமான நிலை என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.