புதிய உச்சத்தில் தங்கம் விலை.. 2025ல் மட்டும் 52% உயர்வு..தங்கம் பாதுகாப்பான முதலீடா? தங்கத்தின் விலை உயர்வுக்கு இந்த 5 காரணங்கள் தான் காரணம்.. இந்தியர்கள் தான் தங்கத்தை சேமிப்பதில் பெஸ்ட்..!

தங்கத்தின் விலை உலகச்சந்தையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் $4000 டாலர்களை தொட்டு, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு 2025ஆம்…

gold

தங்கத்தின் விலை உலகச்சந்தையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் $4000 டாலர்களை தொட்டு, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு 2025ஆம் ஆண்டில் மட்டும் 52% வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிட முதலீடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கம் விலை ஏற்றம் கண்டபோது, இந்திய சந்தையிலும் அதன் தாக்கம் வலுவாக உணரப்படுகிறது. உள்நாட்டில், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிந்து வருவதும், உலகளாவிய விலை ஏற்றத்தின் உத்வேகமும், பண்டிகை மற்றும் திருமண காலங்களில் உள்ளூர் தேவை அதிகரிப்பதும் தங்கம் விலையை சாதனை உச்சத்திலேயே தக்கவைக்க முக்கிய காரணங்களாக உள்ளன. வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படும்போது, ரூபாய் பலவீனமாக இருப்பது இறக்குமதி செலவுகளை அதிகரித்து, அதன் விளைவாக இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கிறது.

தங்கத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி குறித்து உலகளாவிய நிதி நிறுவனங்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளன. சர்வதேச முதலீட்டு வங்கியான HSBC, தங்கத்தின் மீதான தனது நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைத்து கொள்கிறது. $4000 டாலருக்கும் மேலாக தங்கம் விலை உயரும் என அது ஆக்கப்பூர்வமாகக்கணித்துள்ளது.

மறுபுறம், Goldman Sachs மற்றும் Bank of America போன்ற நிறுவனங்கள், தங்கம் தற்போது ‘அதிக விலைக்கு வாங்கப்பட்ட நிலையில்’ இருப்பதாக கருதுகின்றன. இந்த நிலை, முதலீட்டாளர்களால் லாபத்தை எடுக்கும் நடவடிக்கைக்கு வழிவகுத்து, விரைவில் தங்கத்தின் விலை குறையலாம் என்று எச்சரிக்கின்றன.

தங்கத்தின் விலை உயர்வு வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல; இது சிக்கலான உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளின் பிரதிபலிப்பாகும். தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய 5 காரணங்கள் இதோ:

1. உலகளாவிய நிச்சயமற்ற நிலை:

பல்வேறு நாடுகள் விதிக்கும் புதிய வரிகள் நாடுகளுக்கிடையேயான வர்த்தக போர் ஆகியவை உலக பொருளாதார நிலைமை குறித்த அச்சத்தை உருவாக்குகின்றன. போர், இயற்கை சீற்றங்கள் அல்லது அரசியல் ஸ்திரமின்மை போன்ற நிச்சயமற்ற காலங்களில், முதலீட்டாளர்கள் எப்போதும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதி, அதில் முதலீடு செய்வதால், தேவை அதிகரித்து விலை உயர்கிறது.

2. நாணய மதிப்புச் சரிவுக்கு எதிரான காப்பீடு

வர்த்தகப் போர் காரணமாக நாடுகளுக்கு இடையேயான பணப்புழக்கம் குறைவதால், உலக நாணயங்களின் மதிப்பு பலவீனமடைகிறது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இத்தகைய சூழலில், நாணய மதிப்பு வீழ்ச்சிக்கு எதிராக தங்கம் ஒரு வலுவான காப்பீடாக செயல்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நாடி வருகின்றனர்.

3. சந்தை உத்வேகம் மற்றும் முதலீட்டாளர் வேட்டை:

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை, குறுகிய கால இலாப நோக்குடன் பல புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. இந்த உத்வேகம் காரணமாக, அதிகளவில் புதிய முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்க தொடங்குகின்றனர். முதலீட்டாளர்கள் தங்கள் மொத்த முதலீட்டுப் பங்கில் தங்கத்தின் இருப்பை சராசரியாக 10%ல் இருந்து 30% ஆக அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

4. வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள்:

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைப்பதில் காட்டும் நீண்ட கால தாமதம் அல்லது குழப்பங்கள் ஆகியவை பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மையை உருவாக்குகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் பத்திரங்கள் மற்றும் டாலரை விட்டு விலகி, வட்டியில்லா சொத்தான தங்கத்தில் கவனம் செலுத்துகிறார்கள். இதுவும் தங்கம் விலையை உயர செய்கிறது.

5. பலவீனமான பங்குச் சந்தை வருமான சுழற்சிக்கு எதிரான காப்பீடு:

பொதுவாக, பங்குச்சந்தையின் வருமானம் குறையும் போது தங்கம் ஒரு வலுவான காப்பீடாக கருதப்படுகிறது. பங்குச் சந்தைகள் அதிக இடர் நிறைந்ததாக கருதப்படும்போதும், முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனத்தை பாதுகாக்கத் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

இந்த ஐந்து காரணங்களின் ஒருங்கிணைந்த விளைவே, தங்கம் தற்போது உலகளாவிய அளவில் வரலாற்று உச்சத்தை தொட்டிருக்கிறது. உலகப் பொருளாதாரம் ஸ்திரமடையும் வரை, தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.