விஜய்யின் அமைதி அவரது எதிரிகளுக்கு வெற்றி.. தொண்டர்களை சோர்வடையாமல் வைத்திருப்பது ஒரு தலைவனின் கடமை.. வாரக்கணக்கில் ஒரு தலைவர் அமைதியாக இருந்தால் தொண்டன் என்ன செய்வான்.. அரசியலில் இருப்பு முக்கியம்.. விஜய் சுதாரிப்பாரா?

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் அரசியல் நகர்வு, இப்போது ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த கரூர் விவகாரத்துக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுத்துவரும் நிலைப்பாடு,…

vijay

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் அரசியல் நகர்வு, இப்போது ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த கரூர் விவகாரத்துக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுத்துவரும் நிலைப்பாடு, அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜய் தனது கட்சியை தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் தனித்து இயங்கலாம் என்று உறுதி கொண்டிருந்தார். ஆனால், கரூர் மாவட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட அரசியல்ரீதியான மற்றும் நிர்வாகரீதியான நெருக்கடிகள், மாநிலத்தில் ஆளும் சக்திகளின் அழுத்தத்தை அவருக்கு நேரடியாக உணர்த்தியது.

கரூர் சம்பவம், வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை அல்ல; ஒரு ஆளும் கட்சியின் அழுத்தத்தின் வெளிப்பாடு என்பதை விஜய் புரிந்து கொண்டார். இதன் மூலம், தனது அரசியல் பாதையில் நேரிடையாக எதிர்த்து போராடுவது எவ்வளவு கடினம் என்பதை அவர் உணர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அனுபவத்துக்கு பிறகும், விஜய் இன்னும் ஒரு ‘சரியான’ அரசியல் முடிவை எடுக்க முடியாமல் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அவர் இன்னும் திரைப்பட உலகின் சாயல் கொண்ட விளம்பர ஆலோசகர்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து, அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக அமைதி காக்கும் முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. விஜய்யின் இந்த அமைதி காக்கும் நிலைப்பாடு அவரது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

நீங்கள் அமைதியாக இருக்க இருக்க, உங்கள் எதிரிகள் வலுவடைந்து வருகின்றனர் என்பதே கள நிலவரமாக உள்ளது. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தினமும் ஏதாவது ஒரு அரசியல் விவகாரத்தை மையப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டு, தனது தொண்டர்களுக்கு அரசியல் ‘லீட்’ கொடுத்து கொண்டே இருக்கிறார்.

அண்ணாமலை தினமும் மாநில அரசு செய்யும் தவறுகள், மாநிலத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து விரிவாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்.

ஆனால், விஜய்யின் அமைதி காரணமாக, த.வெ.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் சமூக ஊடக தொண்டர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தலைவனிடமிருந்து சரியான வழிகாட்டுதல் அல்லது ‘டேட்டா’ இல்லாததால், அவர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் முடக்கப்பட்டுள்ளனர். அமைதி காப்பது என்பது, களத்தில் பலவீனமடைந்து வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள அரசியல் சூழலில், விஜய்யின் தனிப்பட்ட இமேஜ் கவலைகளை விட, அவரது அரசியல் இருப்பும் எதிர்காலமுமே மிக முக்கியம் என்று அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர். அரசியலில் இருப்பு முக்கியமா? இமேஜ் முக்கியமா?” என்ற கேள்வியை விஜய் தனக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும். இமேஜை பாதுகாப்பதற்காக தனித்து போட்டியிட்டு தோல்வியடைவதை காட்டிலும், ஒரு வலுவான கூட்டணியில் இணைந்து, அரசியல் களத்தில் நிலைத்திருப்பது மிக முக்கியம்.

தற்போதுள்ள நெருக்கடிகளை சமாளிக்கவும், தனது அரசியல் பயணத்தை தொடரவும், ஒரு வலுவான கூட்டணியை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். இல்லாவிட்டால், 2026 தேர்தலுடன் அவரது அரசியல் ஆட்டம் முடிவுக்கு வரக்கூடிய அபாயம் உள்ளது.

விஜய் உடனடியாக தனது அரசியல் ஆலோசகர்கள் குழுவை மறுசீரமைத்து, கள யதார்த்தத்தை புரிந்துகொண்டு, அனுபவமுள்ள மூத்த பத்திரிகையாளர்களிடம் ஆலோசனை கேட்டு, சமரசமற்ற, துணிச்சலான ஒரு கூட்டணி முடிவை டிசம்பர் மாதத்திற்குள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.