பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும்போது, பங்குச்சந்தை மட்டும் ஏன் இவ்வளவு உயரத்தில் இருக்கிறது? இது நியாயமான கேள்விதான். நவீன வரலாற்றின் பெரும்பகுதிக்கு, மக்கள் பங்குச்சந்தையை ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகவே பார்த்தனர். ஆனால், இப்போது அந்த கண்ணாடி உடைந்திருக்கிறது.
உலக நிதிச் சந்தைகளில், குறிப்பாக அமெரிக்காவில் நாம் பார்ப்பது பொருளாதார வலிமையின் பிம்பம் அல்ல; மாறாக, பல ஆண்டுகளாக பணம் குவித்தல், நிதிச் சீரமைப்பு மற்றும் சீர்குலைந்த சந்தை சக்திகளால் உருவான ஒரு திரிபு ஆகும்.
என்விடியா (Nvidia) நிறுவனத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஒரே ஒரு அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் சந்தை மூலதன மதிப்பு சுமார் $4.4 டிரில்லியன் டாலரை எட்டியது. இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும், இந்தியாவின் பொருளாதாரத்தை விடவும் பெரியது. அமெரிக்காவில் உள்ள மொத்த விவசாய நிலங்களின் மதிப்பை விடவும் இது அதிகம்!
ஆனால், என்விடியா மக்களுக்கு உணவளிக்கவில்லை; கோதுமை உற்பத்தி செய்யவில்லை; இது சிப் தயாரிக்கும் ஒரு நிறுவனம் மட்டுமே. ஒரு நாட்டின் மொத்த பொருளாதாரத்துடன் போட்டியிடும் அளவுக்கு அதன் மதிப்பு உயர்ந்துதாலும் அது ஒரு அபத்தமாக பார்க்கப்படுகிறது.
என்விடியா மட்டும் இல்லை. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆல்பபெட், மெட்டா, டெஸ்லா மற்றும் என்விடியா உள்ளிட்ட ஏழு நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு $19 டிரில்லியனை தாண்டியுள்ளது. இந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.168.66 லட்சம் கோடி. இது ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற பெரிய பொருளாதாரங்களின் மொத்த ஜிடிபியை விட அதிகமாகும்.
இந்த இடத்தில் தான் நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். பங்குச் சந்தை இன்று நிஜத்தை பிரதிபலிக்கவில்லை. அது குறைந்த வட்டிக்கு கிடைத்த பணம், ஊக வணிக வெறி மற்றும் நிதியை குறியீட்டு உலகமாக மாற்றிய அரசாங்க கொள்கைகளின் திரிபை பிரதிபலிக்கிறது. இந்த சிக்கலின் ஆழமான வேர்கள் பல ஆண்டுகளுக்கு முன் சென்றாலும், 2008 நிதி நெருக்கடிக்கு பிறகே உண்மையான திருப்புமுனை ஏற்பட்டது.
பொருளாதாரங்களை காப்பாற்ற விரும்பிய மத்திய வங்கிகள், வட்டி விகிதங்களில் மாற்றம் மற்றும் வரலாறு காணாத அளவில் அரசு கடன்கள் போன்ற அசாதாரண நடவடிக்கைகளை எடுத்தன. இதனால், டிரில்லியன் கணக்கான டாலர்கள் புழக்கத்திற்கு வந்தன. இந்த புதிய பணம் நிதி நிறுவனங்கள், ஹெட்ஜ் ஃபண்டுகள் மற்றும் பெருநிறுவனங்கள் போன்ற ஆதாரத்திற்கு நெருக்கமானவர்களிடம் முதலில் சென்றது.
பொருளாதார வல்லுநர்கள் இதை கேண்டிலோன் விளைவு என்று அழைக்கின்றனர். புதிய பணம் முதலில் யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் பொருட்களின் விலை உயர்வதற்கு முன்பே அதை பயன்படுத்தி லாபம் அடைகிறார்கள். சாதாரண தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோரிடம் இந்த பணம் சென்றடையும்போது, வாழ்க்கை செலவு ஏற்கனவே அதிகரித்துவிடுகிறது.
செல்வந்தர்கள் பங்கு பத்திரங்கள், ரியல் எஸ்டேட் போன்ற சொத்துக்களின் விலை உயர்வதன் மூலம் மேலும் செல்வந்தர்கள் ஆகின்றனர். அதே சமயம், மற்றவர்கள் உணவு, எரிசக்தி மற்றும் வீட்டுச் செலவுகளுக்காக அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த இரட்டை பணவீக்கத்தால், பணம் படைத்தவர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சேமிக்க முடியாமல், கடனில் சிக்கி தவிக்கின்றனர்.
பல நிறுவனங்கள் உண்மையான கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக, பணத்தை கடனாகப் பெற்று தங்கள் நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்கின. இதனை ஆங்கிலத்த்ஹில் Share Buybacks என்று சொல்வார்கள். இதனால் சந்தையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை குறைந்து, அவற்றின் விலை செயற்கையாக உயர்ந்தது. இது நிறுவனங்களை உண்மையில் பலப்படுத்தவில்லை, ஆனால் காகிதத்தில் பணக்காரர்களாக காட்டியது. இந்த மாயத்தோற்ற வளர்ச்சிதான் இன்றைய நிதி குமிழியை உருவாக்கியுள்ளது.
பங்குச் சந்தையின் விலைக்கும் நிறுவனத்தின் உண்மையான மதிப்புக்கும் இடையிலான இந்த தொடர்பு அறுந்துபோனால் பல அபாயங்களை உருவாக்கும். சொத்து வைத்திருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து, வீடுகள் வாங்குதல், ஓய்வூதிய சேமிப்பு போன்ற இலக்குகள் எட்ட முடியாத கனவுகளாக மாறியுள்ளன.
செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிவதால், ஜனநாயக நிலைத்தன்மைக்கான அடித்தளமான நடுத்தர வர்க்கம் பாதிக்கப்பட்டு, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைகிறது. இது ஒரு அரசியல் நேர வெடிகுண்டாக மாறக்கூடும்.
பங்குச் சந்தை தினந்தோறும் புதிய உச்சங்களை தொட்டாலும், உண்மையான உற்பத்தி திறனை விட காகிதச் செல்வம் வேகமாக வளரும் இந்த அமைப்பு, மிக அபாயகரமாக உள்ளது. ஒரு சிறிய அதிர்ச்சி, உதாரணமாக ஒரு கடுமையான வட்டி விகித உயர்வு அல்லது கடன் நெருக்கடி எந்த நேரத்திலும் இந்த ட்ரில்லியன் கணக்கிலான காகித செல்வத்தை அழித்து, இந்த அடித்தளம் எவ்வளவு பொய்யானது என்பதை காட்டக்கூடும்.
நிதி அமைப்பு தனது நோக்கத்தை மறந்து, ஒரு சிலருக்கு மட்டுமே லாபம் ஈட்டும் வகையில் செயல்படுகிறது. நிதியியல் மீண்டும் நிஜத்தில் வேரூன்றப்படாவிட்டால், அடுத்த வீழ்ச்சி வெறும் சந்தை திருத்தம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த அமைப்பின் மீதான நம்பிக்கையையே அசைத்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
