கரூர் கூட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்தின் தாக்கம், தமிழக வெற்றி கழகத்தின் எதிர்கால அரசியலிலும், நிர்வாகிகளின் மன உறுதியிலும் ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவேளை, கரூர் போன்ற ஒரு துயர சம்பவம் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வின் கூட்டங்களில் நடந்திருந்தால், அந்த இரண்டு கட்சிகளுக்குமே அந்த சம்பவத்தின் தாக்கத்தை எதிர்கொள்வது கடினமானதாகத்தான் இருந்திருக்கும். இருப்பினும், அக்கட்சிகளுக்கு இருக்கும் நீண்டகால அனுபவம் மற்றும் அதிக அளவிலான பொருளாதார நிதி பலத்தின் காரணமாக, அவை ஓரளவுக்கு பிரச்சனைகளை சமாளித்து, சவால்களில் இருந்து மீண்டு வந்திருக்கக்கூடும்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. தமிழக வெற்றி கழகம் இப்போதுதான் தொடங்கப்பட்ட ஒரு புதிய கட்சி. அந்த கட்சியில் உள்ள நிர்வாகிகள் ஒரு சிலரை தவிர, மற்ற யாரும் லட்சாதிபதிகளோ அல்லது கோடீஸ்வரர்களோ கிடையாது. மாறாக, அவர்கள் அன்றாடம் வேலை செய்து வருமானம் ஈட்டக்கூடிய சாமானிய மக்கள் தான் நிர்வாகிகளாக உள்ளனர்.
கரூர் போன்ற சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு, நீதிமன்றம் என்று பிரச்சனை வந்தால், அவர்களால் தங்களுடைய சொந்த பணத்தை போட்டு செலவு செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், அவர்கள் பார்க்கும் வேலைக்கும் ஆபத்து வரக்கூடும். இத்தகைய நெருக்கடிகள் காரணமாகத்தான், பல நிர்வாகிகள் கட்சியின் நிர்வாகிகளாக தொடரலாமா அல்லது வெளியேறிவிடலாமா? என்ற யோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், கட்சியின் தலைமையோ இதுவரை நிர்வாகிகளை காப்பாற்றுவதற்கு எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. ஒரு அரசியல் கட்சி நடத்துவது என்பது இன்றைய நிலையில் சாதாரணமல்ல. கட்சியின் நிர்வாகிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், உடனே வழக்கறிஞர்கள் அவருக்காக ஆஜராக வேண்டும்; தேவைப்பட்டால் பணத்தை செலவு செய்ய தயங்கக் கூடாது. இவையெல்லாம் நடிகர் விஜய் செய்வாரா? என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஒருவேளை கட்சித் தலைமை இந்த சாமானிய நிர்வாகிகளை கைவிட்டால், அவர்கள் அரசியலிலிருந்தே ஒதுங்க வாய்ப்புள்ளது. இதனால், கீழ்க்கட்டமைப்பு சிதற தொடங்கி, ஒட்டுமொத்த கட்சியே சிதற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விஜய்யின் கட்சியில் வழக்கறிஞர் அணி என்று ஒன்று இருந்தாலும், அது என்ன செய்கிறது? கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் வழக்குகளை எதிர்கொள்ளும் நிர்வாகிகளை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை. ஒரு அரசியல் கட்சிக்கு உயிர்நாடியாக இருப்பது, களத்தில் இறங்கி வேலை செய்யும் நிர்வாகிகளும், கீழ்மட்ட தொண்டர்களும்தான். அவர்கள் இல்லை என்றால், கட்சியை வளர்க்கவும் முடியாது, ஆளுங்கட்சியாக மாற்றவும் முடியாது.
கரூர் சம்பவம் ஒரு பெரிய சோகமாக முடிந்துவிட்ட நிலையில், விஜய் உடனடியாக இதற்கெல்லாம் ஒரு தீர்வு கண்டு, கட்சி நிர்வாகிகளை காப்பாற்றி, அவர்களுக்கு தேவையான சட்ட மற்றும் பொருளாதார ஆதரவை வழங்க முடிவெடுக்க வேண்டும். இதுவே கட்சி தலைமையின் மீது நிர்வாகிகள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வழியாகும்.
விஜய், இந்த கடினமான தருணத்தில் ஒரு தலைவராக சரியான முடிவை எடுத்து, தனது சாமானிய நிர்வாகிகளை காப்பாற்றுவாரா? அல்லது, ஒரு பெரிய கட்சியாக வளர தொடங்கும் முன்னரே தமிழக வெற்றிக் கழகம் பலவீனமடைந்து சிதறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
