விஜய்யை சுற்றி இருக்கும் சுயநலவாதிகள்.. ஒரு தலைவனை பார்க்க வந்த மக்களை பாதுகாக்க தெரியாதவர்களுக்கு எதற்கு பதவி? விஜயகாந்துக்கு அவரது கட்சியில் இருந்த எம்.எல்.ஏக்களே துரோகம் செய்தார்கள்.. விஜய்யும் துரோகிகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.. முகில் அறிவுரை..!

கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவத்தையடுத்து, தவெக தலைவர் விஜய் பல்வேறு தரப்புகளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், அவர் தனது அரசியல் பயணத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும்,…

vijay tvk

கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவத்தையடுத்து, தவெக தலைவர் விஜய் பல்வேறு தரப்புகளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், அவர் தனது அரசியல் பயணத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும், என்னென்ன சவால்களை சமாளிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ் தேசிய ஆதரவாளர் முகில் என்பவர் தனது ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதை தற்போது பார்ப்போம்.

விஜய் இந்த விவகாரத்தால் முடங்கி விடக்கூடாது, மக்கள் சந்திப்பை தொடர வேண்டும்: மக்கள் சந்திப்பை நிறுத்தவே கூடாது. ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற கூட்டங்களை திறந்தவெளி மைதானங்களில் நடத்த வேண்டும். மக்களை தன்னிடமிருந்து விலக்கி வைக்கும் ‘பில்டப்’ அரசியலை விஜய் தவிர்க்க வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் போல, எளிய மக்களுடன் மக்களாக பழகும் பண்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

விஜய்யை சுற்றி இருக்கும் ‘அயோக்கியத்தனமான’ அரசியல் மேதாவிகள் அனைவரும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். “ஒரு தலைவனை பார்க்க வந்த பொதுமக்களை பாதுகாக்கத் துப்பில்லை என்றால், உங்களுக்குப் பதவி எதற்கு?” என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்த சுயநலவாதிகள் விஜய்யை படுகுழியில் தள்ள மட்டுமே முயற்சிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

கரூர் விபத்தில் விஜய் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதத்தில் முகில், தி.மு.க.வின் விமர்சனங்களை மறுத்தார். 41 பேர் உயிரிழந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்துதான். விஜய் வேண்டுமென்றே கூட்டத்தை நெரித்துவிடவில்லை. மின்சாரம் ஏன் துண்டிக்கப்பட்டது? ஆம்புலன்ஸ் செல்ல ஏன் வழி ஏற்படுத்தப்படவில்லை? 10,000 பேர் திரண்ட கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் சென்று என்ன செய்ய முடியும்? ஆளுங்கட்சியின் நோக்கம், கூட்டத்தை சிதைப்பதாக இருக்கலாம் என்றும், எடப்பாடி பழனிசாமியின் கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்கள் திருப்பி விடப்பட்ட சம்பவங்கள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், எத்தியார் குப்பம் மரணங்கள் போன்ற சம்பவங்களின்போது முதலமைச்சர் இரவோடு இரவாக செல்லாத நிலையில், இந்த விபத்திற்கு மட்டும் அவசரமாக வருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. 23 பேர் இறந்த சாராய விவகாரத்தில் அரசு மௌனம் காத்தது ஏன்? மலத்தண்ணீர் குடித்தவனையே குற்றவாளியாக்கிய கொடுமையான அரசு இது என்றும் முகில் சாடினார்.

விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த முகில், ‘விஜய்யை கைது செய்ய முடியாது. முதலமைச்சர் கலந்து கொண்ட சாகச நிகழ்ச்சியில் 5 தமிழர்கள் பலியானதற்கு கூட அவரை கைது செய்ய முடியாதபோது, விஜய்யை எப்படி கைது செய்ய முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஒருவேளை திமுக அரசு விஜய்யை கைது செய்யுமேயானால், அவர் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல காத்திருக்கிறார் என்று அர்த்தம். அவர் சிறை பக்குவத்தையும் படித்துவிட்டு வருவார். சில தற்குறி தலைவர்கள் 18 நாள் சிறையில் இருந்துவிட்டு வந்து தமிழர்களுக்கு தலைவன் என்கிறார்கள். அதனால், சிறை செல்வது ஒரு தலைவனுக்கு அச்சம் தரும் விஷயம் அல்ல,” என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டு மக்கள் சினிமா நடிகர்கள் பின்னால் போவதற்கு காரணம், “அரசியல்வாதிகள் செய்யாததை சினிமாக்காரர்கள் செய்ய நினைக்கிறார்கள், செய்திருக்கிறார்கள்.” விஜய் மக்கள் இயக்கம் மூலம் செய்யப்பட்ட நற்பணிகளால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள்.

விஜய் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என்று கூறிய முகில், விஜயகாந்தின் நிலைமை விஜய்க்கு வரக்கூடாது என்று எச்சரித்தார். விஜயகாந்தின் எம்.எல்.ஏ.க்கள் அவர் உயிரோடு இருந்தபோதே எங்கேயோ கரைந்து போனது போல, விஜய்யின் ஆதரவாளர்கள் ஆகிவிடக் கூடாது.

மேலும், கரூர் சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக இருப்பதால், உடனடியாக அந்தப் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், விஜய்யை சுற்றி இருக்கும் சுயநலவாதிக்ள் அவற்றை அழித்துவிட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

“விஜய் அவர்களே! உங்களை சுற்றி இருக்கும் கோமாளிகளையும், புல்லுருவிகளையும், சுயநலவாதிகளையும் உடனடியாக அப்புறப்படுத்துங்கள்,” என்ற அறிவுரையுடன் அவர் தனது அறிவுரையாக கூறினார்.