நாம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை வல்லமை என்பது பெரிய சக்திமிக்கவர்களிடம் மட்டுமே இருக்கும் என்று நினைத்தோம். அமெரிக்கா, சீனா, ஒருவேளை ஐரோப்பா. ஆனால், வாழ்க்கையும், வியாபாரமும் முற்றிலும் மாறுபட்ட பாடத்தைகற்றுக்கொடுத்தன. நீங்கள் யாரை குறைவாக மதிப்பிடுகிறீர்களோ, யார் மீது நீங்கள் கவனம் செலுத்தவில்லையோ, அவர்கள்தான் ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றுவார்கள்.
இன்று உலகம் 21-ம் நூற்றாண்டுப் போட்டியில் யார் வெல்கிறார்கள் என்று பார்க்கும்போது, அமெரிக்காவின் ராணுவம், வால் ஸ்ட்ரீட், சிலிக்கான் வேலி பக்கம் பார்க்கிறார்கள். அல்லது சீனாவின் தொழிற்சாலைகள், கண்டுபிடிப்புகள், பெல்ட் மற்றும் சாலை திட்டத்தை பார்க்கிறார்கள். இந்த இரண்டு ராட்சதர்களையும் பார்த்து கொண்டே, மத்தியில் இருக்கும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவை கவனிக்க தவறிவிடுகிறார்கள். இந்தியா இந்த ராட்சதர்களுக்கு இடையில் மெதுவாக, வியூகமாக, மேற்குலகம் புரிந்துகொள்ள முடியாத பொறுமையுடன் அவர்களை விஞ்சி கொண்டிருக்கிறது
அமெரிக்கா தனது அதிகாரத்தை ’நான் தான் முதல்’ என்பதன் மூலம் கட்டமைத்தது. தொழில்நுட்பத்தில் முதலில், செல்வத்தில் முதலில், ஆளுமையில் முதலில் என கூறிக்கொண்டு இருக்கிறது. சீனா தனது அதிகாரத்தை வேகத்தின் மூலம் கட்டமைத்தது. வேகமாக உற்பத்தி, வேகமாக கட்டுமானம், வேகமாக விரிவாக்கம்.
ஆனால், இந்தியா… தனது அதிகாரத்தை ‘விவேகத்தின்’ அடிப்படையில் கட்டமைக்கிறது. வேகத்தை விடவும், அளவை விடவும் விவேகம் நீண்ட காலம் நீடிக்கும். பல ஆண்டுகளாக இந்தியா ‘உறங்கிக் கொண்டிருக்கும் ராட்சதன்’ என்று அழைக்கப்பட்டது. திறமை இருக்கிறது, ஆனால் செயல்பாடு இல்லை என்று உலகம் சிரித்தது. ஆனால், உலகம் தவறவிட்ட விஷயம் என்னவென்றால் அந்த ராட்சதர்கள் ஆதிக்கத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, இந்தியா கற்று கொண்டிருந்தது, கவனித்து கொண்டிருந்தது, உள்ளிழுத்து கொண்டிருந்தது. இப்போது, அது அமெரிக்காவும் சீனாவும் எதிர்பார்க்காத ஒரு வழியில் அமைதியாக ஆட்டத்தை விளையாடுகிறது.
டிஜிட்டல் உலகில், அமெரிக்கா இணைய புரட்சியை உருவாக்கியது, சீனா அதை காப்பி அடித்து விரிவுபடுத்தியது. ஆனால், இந்தியா அதை உள்ளூர்மயமாக்கியது . ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் மூலம் மலிவான விலையில் டேட்டாவை அறிமுகப்படுத்தி, இந்தியா ஒரே இரவில் அரை பில்லியன் மக்களை ஆன்லைனுக்குள் கொண்டு வந்தது. இந்த டிஜிட்டல் உள்ளடக்கத்தை அமெரிக்காவோ, சீனாவோ சாதிக்கவில்லை. இங்குதான் இந்தியா அமெரிக்காவை விஞ்சுகிறது.
அமெரிக்காவின் இணையம் லாபத்துக்காக கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் இணையம் மக்களுக்காக கட்டமைக்கப்படுகிறது. இது எல்லாவற்றையும் மாற்றுகிறது. ஏனெனில், நீங்கள் நிறுவனங்களுக்கு பதிலாக மக்களுக்கு அதிகாரம் அளிக்கும்போது, நீங்கள் கீழிருந்து மேல் நோக்கிய புரட்சியை உருவாக்குகிறீர்கள், மேலிருந்து கீழ் நோக்கியதல்ல. நீண்ட காலத்திற்கு இதுவே அதிக சக்தி வாய்ந்தது.
புவிசார் அரசியலை பார்த்தோம் என்றால் அமெரிக்காவின் வியூகம் ஆதிக்கம் மட்டுமே. கடல்களை கட்டுப்படுத்துவது, பணத்தை கட்டுப்படுத்துவது, கதைகளை கட்டுப்படுத்துவது. சீனாவின் வியூகம் விரிவாக்கம் மட்டுமே, சாலைகள் அமைப்பது, வர்த்தக பாதைகளை உருவாக்குவது, விநியோக சங்கிலிகளைக் கட்டமைப்பது.
ஆனால், இந்தியாவின் வியூகம் சமநிலை. இந்தியா தன்னை அதிகாரப் போராட்டங்களின் நடுவில் நிலைநிறுத்துகிறது. இது அமெரிக்காவுடன் நட்பு பாராட்டிய போதும், ரஷ்யாவை துண்டித்து கொள்ளவில்லை. சீனாவுடன் வர்த்தகம் செய்தாலும், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பாவுடனான உறவுகளை வலுப்படுத்துகிறது. இந்த சமநிலைப்படுத்தும் செயல் பலவீனம் அல்ல, இது தான் உண்மையான அரசியல் சதுரங்கம்.
அமெரிக்கா செக்கர்ஸ் (Checkers) விளையாடுவது போலவும், சீனா கோ (Go) விளையாடுவது போலவும் இல்லாமல், இந்தியா சதுரங்கம் விளையாடுகிறது. சதுரங்கத்தில் பொறுமையும், சரியான நிலைநிறுத்தமும் தான் எல்லாம்.
‘இந்தியா உண்மையிலேயே அமெரிக்காவை வெல்ல முடியுமா?’ என்று பலர் கேட்கிறார்கள். அதற்கான பதில் மிகவும் எளிமையானது: அமெரிக்காவை வெல்ல இந்தியா முயற்சிக்காது, ஆனால் அமெரிக்காவை விஞ்சுவதே இந்தியாவின் குறிக்கோள். இந்தியா அதை செய்து வருகிறது.
தொழில்நுட்ப அவுட்சோர்சிங்கில் அமெரிக்கா இன்று இந்தியாவின் பொறியாளர்களை நம்பி உள்ளது. அமெரிக்க மக்கள் உள்பட உலகம் இந்தியாவின் ஜெனரிக் மருந்துகளை நம்பி உள்ளது. கூகுள் முதல் மைக்ரோசாப்ட் வரை, இந்திய மூளைகள்தான் அமெரிக்க நிறுவனங்களை வழிநடத்துகின்றன. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது, இந்தியா பின்தங்கவில்லை; அமெரிக்கா இந்தியாவை நம்பித்தான் இருக்கிறது என்பது.
சீனாவுடன் போட்டி குறித்து சிந்திப்பதை விட, அமெரிக்கா மற்றும் சீனா இரண்டும் ஆதிக்கம் செலுத்த போட்டியிடும்போது, இந்தியா அமைதியாக பலன்களை அறுவடை செய்யுமா? என்பதே உண்மையான கேள்வி. ஏனெனில், இரண்டு ராட்சதர்களும் மோதும் ஒவ்வொரு முறையும், இந்தியா ஆதாயமடைகிறது. இதுதான் விவேகமான நகர்வு.
இந்தியாவுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. வறுமை, ஊழல், உள்கட்டமைப்பு என்று பலர் கூறுகின்றனர். ஆனால் இந்த பிரச்சினைகள் ஒரு காலத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் தன் இருந்தன. இப்போது இந்தியா தனது பலவீனங்களை சக்தியாக மாற்றுகிறது. மிகக் குறைந்த செலவில் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது. டிஜிட்டல் தேவையை உருவாக்குகிறது. ஊழலை குறைக்க வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆதார் அமைப்பு இதற்கு சான்று.
அமெரிக்கா நுகர்வுக்கும், சீனா உற்பத்திக்கும் அடிமையாகி உள்ளது. ஆனால், இந்தியா ஒரு வித்தியாசமான சூழலியல் அமைப்பை உருவாக்குகிறது. இந்தியாவில், யுபிஐ என்பது திறந்த, அணுகக்கூடிய, அரசாங்க ஆதரவுடைய ஒரு கட்டண முறை. அமெரிக்காவில் பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த, இந்தியாவில் தெருவோர வியாபாரியும் நொடியில் டிஜிட்டல் பணம் ஏற்க முடிகிறது.
உலகின் மிக ஏழ்மையானவர்களையும் டிஜிட்டல் பொருளாதாரத்துடன் இணைப்பதன் மூலம், இந்தியா ஒரு மறைக்கப்பட்ட வளர்ச்சி அலையை கட்டவிழ்த்து விடுகிறது. இதுதான் நிஜ வாழ்க்கையில் நடக்கும் விவேகம். இந்தியா அடித்தளத்தை உயர்த்த ஒரு அமைப்பை கட்டியமைத்துள்ளது.
அமெரிக்காவின் மக்கள்தொகை முதுமை அடைகிறது. சீனாவின் மக்கள்தொகை சுருங்குகிறது. ஆனால், இந்தியா இளமையாக இருக்கிறது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 30 வயதுக்கு கீழே உள்ளவர்கள். இதன் பொருள் என்ன? இந்தியாவிடம் சாதனை செய்ய தேவையான ஆற்றல், பசி, உந்துதல் உள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் பலம் ஒழுக்கம், சீனாவின் பலம் வேகம் என்றால், இந்தியாவின் பலம் தகவமைக்கும் திறன் மற்றும் தாக்குப் பிடிக்கும் திறன். புயல்கள் வரும்போது தாக்கு பிடிக்கும் திறனே வெற்றி பெறும். இதுதான் முதலீட்டாளர்கள் இன்று இந்தியாவை ஒரு புதிய பார்வையுடன் பார்க்கக் காரணம்.
மொத்தத்தில் 21-ம் நூற்றாண்டு என்பது பெரிய ராணுவத்தையோ, உயரமான கட்டிடத்தையோ பற்றியது அல்ல. யார் புத்திசாலிகள், யார் உலகை இணைப்பார்கள், யார் பன்முக குரல்களை ஒரே திசையில் ஒன்றிணைப்பார்கள் என்பதை பற்றியது. இந்த முன்னணியில், இந்தியாவுக்கு இருக்கும் ஜனநாயகம் ஒரு மறைமுகமான சக்தி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
