பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 20 போட்டியாளர்கள் மற்றும் அவர்களை பற்றிய சுருக்கமான விவரங்களை பார்ப்போம்:
1. வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்: நிகழ்ச்சியின் முதல் அதிரடி போட்டியாளர். தன்னை தானே ‘நடிப்பின் அரக்கன்’ என பிரகடனப்படுத்திக் கொண்ட பிசியோதெரபிஸ்ட்.
2. அரோரா சின்க்ளேர்: ‘பலூன் அக்கா’ என அறியப்படும் சமூக ஊடக பிரபலம். முதுகலை தாவரவியல் பட்டம் பெற்ற இவர், 21 வயதில் மாடலிங் துறைக்குள் நுழைந்த புதுச்சேரி பெண்.
3. எஃப்.ஜே: ராப் மற்றும் பீட் பாக்ஸ் கலைஞர். விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்களை எழுதி பாடுவதை தனித்துவமாக கொண்டவர்.
4. வி.ஜே. பார்வதி: யூடியூப் பிராங்க் ஷோக்கள் மூலம் பிரபலமானவர். தனது துணிச்சலான ஆடை தேர்வுகள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் பாணிக்காக அறியப்படுபவர்.
5. துஷார் ஜெயபிரகாஷ்: தோற்றத்தில் கொரியன் பையன் போலிருந்தாலும், இவர் ஒரு சுத்த தமிழன். பிஸ்னஸ் மார்கெட்டிங் முடித்த சிம்பு, சிவகார்த்திகேயன் ரசிகர். நடிகராகும் ஆசையுடன் உள்ளே நுழைந்துள்ளார்.
6. கனி: இயக்குநர் அகத்தியனின் மகள். ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 டைட்டில் வின்னர். நடிகையாகவும் தொலைக்காட்சி ஆளுமையாகவும் அறியப்படுபவர்.
7. சபரி விஜய் டி.வி-யின் ‘வேலைக்காரன்’ சீரியலில் ‘வேலன்’ பாத்திரம் மூலம் பிரபலமானவர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ளார்.
8. பிரவீன் காந்தி: 1997-ல் ‘ரட்சகன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின்னர் ‘ஜோடி’ உள்பட சில படங்களை இயக்கியவர். ரஜினியின் ஆதரவாளர். டிவி விவாதங்களில் பங்கு கொள்பவர்.
9. கெமி: இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற பாஸ்கெட்பால் வீராங்கனை. விஜய் டி.வி-யில் தொகுப்பாளராக உயர்ந்தவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.
10. ஆதிரை: நடிகர் விஜயின் ‘பிகில்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். கொரோனா காரணமாக சினிமா வாய்ப்புகள் குறையவே, விஜய் டி.வி-யின் ‘மகாநதி’ சீரியலில் நடித்தவர்.
11. ரம்யா ஜோ: ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்தவர். பொருளாதார சூழலுக்காக மேடைகளில் நடனமாடும் கலைஞர். குடும்பத்துடன் வாழும் கனவுடன் பங்கேற்றுள்ளார்.
12: வினோத் குமார்: சென்னை ராயபுரத்தை சேர்ந்த பிரபல கானா இசை கலைஞர்.
13. வியானா: ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றி மாடலிங் துறைக்குள் வந்தவர். கியூட்டான இவரின் ஆரம்ப பேச்சுகள் விமர்சனங்களை சந்தித்துள்ளன.
14. பிரவீன்: நடிகர், பாடகர் என பன்முகத் திறமைகள் கொண்டவர். 7 மொழிகள் பேசக்கூடியவர். சின்ன மருமகள், சிந்து பைரவி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
15: சுபிக்ஷா: தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் மற்றும் விலாகர் (Vlogger). கடலுணவு சார்ந்த வீடியோக்களால் பிரபலமானவர். மீனவ சமுதாயத்தின் குரலாக ஒலிக்க வந்துள்ளார்.
16. அப்சரா சி.ஜே: கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல திருநங்கை மாடல். 2013-ல் ‘மிஸ் இன்டர்நேஷனல் குயின்’ பட்டம் வென்றவர். மாற்று பாலினத்தவர் உரிமைக்காக செயல்படுகிறார்.
17. நந்தினி: விபத்தில் தந்தையை இழந்தும், புற்றுநோயால் தாயை இழந்தும் மன உளைச்சலில் இருந்து யோகா மூலம் மீண்டு வந்தவர். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார்.
18. விக்கல்ஸ் விக்ரம்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடியில் பிரபலமானவர். ஏ.ஆர். ரஹ்மான் இவரின் ரீல்ஸை பகிரும் அளவுக்கு புகழ் பெற்றவர்.
19. கமருதின்: ஐடி வேலையை விட்டுவிட்டு சீரியலில் நடிக்க வந்தவர். மலையாளத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘டியர் ஸ்டுடண்ட்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.
20. கலையரசன்: தேனியை சேர்ந்த ‘அகோரி கலையரசன்’ என அறியப்படும் நாட்டுப்புற கலைஞர். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சோகங்களால் அகோரியாக இருந்து, பின்னர் மீண்டு வந்து மனைவியுடன் இணைந்து வாழ்கிறார். குழந்தைகளுக்கு இலவசமாக நாட்டுப்புற கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அறிமுக நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக இருந்தது என்பதை நேற்று நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். கடந்த சீசன் போலவே இந்த சீசனிலும் விஜய் சேதுபதியின் பாணி தொடர்வதும், செட் அமைப்பும் கிராண்ட் தான். ஆனால், இந்த சீசனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போட்டியாளர்களின் தரம் மற்றும் ஆளுமை போக போக தான் தெரியும். சரி இப்போது போட்டியாளர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
பிக் பாஸ் வீட்டினுள் முதல் ஆளாக நுழைந்த வாட்டர்மெலான் ஸ்டார் டி. திவாகர், விமர்சகர்களின் முழு கவனத்தையும் பெற்றுள்ளார். ‘அடுத்த சிவாஜி’ என்று இவர் தன்னைத்தானே கூறிக்கொள்வது அதிர்ச்சி கலந்த நகைச்சுவையாகவே பார்க்கப்படுகிறது. முதல் நாளே இவரது ஓவர்-ஆக்ட்டிங் ஆளுமையை குறிக்கிறது. போக போக காமெடியாக இல்லாமல் இருந்தால் சரிதான். பிக் பாஸ் தளத்தை இவர் தன் தனிப்பட்ட அடையாளத்தை நிலைநாட்ட முயற்சிப்பார் என தெரிகிறது. குறிப்பாக சக போட்டியாளரான பிரவீண் காந்தியை, ‘தலையாட்டி என்ன கை பிடிச்சு இழுத்தியா?’ என்ற ஒற்றை வார்த்தை மூலம் அடக்க முயன்றது, இவரின் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமையின் ஆரம்பம். இவர் வீட்டின் ‘கண்டென்ட் மெஷின்’-ஆக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசன் தொடக்கத்தில், விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடம் “உங்களின் இன்டர்வியூ அனுபவம் எப்படி இருந்தது?” என்று தொடர்ந்து வலியுறுத்தி கேட்டது ஒரு வியூகமாக பார்க்கப்படுகிறது. விஜய் டி.வி. ஸ்டார்களை மட்டுமே திரும்ப திரும்ப போட்டியாளர்களாக போடுகிறார்கள் என்று எழுப்பும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “இவர்கள் அனைவரும் முறையான ஆடிஷன் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று நிரூபிக்க, நிகழ்ச்சி குழுவால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு ஸ்கிரிப்ட் செட்டிங் ஆக இது இருக்கலாம். ‘விஜய் டி.வி ஆட்கள் அல்ல’ என்ற பிம்பத்தை உருவாக்கவே இந்த அதிகப்படியான அழுத்தம் என்றும் கூறப்படுகிறது.
வி.ஜே. பார்வதி & சபரி உள்ளே நுழைந்ததுமே இருவரும் ஆளுமை மோதலை தொடங்கிவிட்டனர். பார்வதி, ‘ஃபெமினிஸம்’ என்ற பெயரில் பல விவாதங்களை எழுப்ப தயாராக இருக்கிறார். சபரி, கூட்டு உணர்வுடன் செயல்பட முனைகிறார். இவர்களது மோதல், சீசனுக்கு தேவையான காரசாரத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி சமையலுக்காகவே உள்ளே கொண்டுவரப்பட்டதாக மற்ற போட்டியாளர்கள் கருதுகிறார்கள். கனி அக்கா மீதான இந்த சமையல் சுமையை பார்வதி கேள்விக்கு உள்ளாக்கியது முதல் நாள் மோதல் என்றே சொல்லலாம்!
அரோரா சின்லர் தனது புனைப்பெயரை மாற்றிக்கொள்ளும் குறிக்கோளுடன் வந்திருப்பது, இவரின் தனிப்பட்ட பயணமாக இருக்கும். துஷார் கொரியன் பாப் பாணியில் இருந்தாலும், இவருக்கு சமூக ஊடகங்களில் ஒரு கூட்டமே உருவாகியுள்ளது. இவரின் வாய்ஸ் ஓவர் ஆளுமை பார்வதியை விஞ்சும் வகையில் இருக்க வாய்ப்பு அதிகம்.
இன்னொரு போட்டியாளரான ரம்யா ஜோ உருக்கமான குடும்பப் பின்னணியும், ஃபேமிலி சென்டிமென்ட்டும் கொண்டவர் என்பதே இவரது பலம். இவர் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிப்பூர்வமாக பேசினால் மக்களின் ஆதரவு கூடும்.
சுபிக்ஷா மீனவ சமுதாயத்தில் இருந்தும், மற்றும் அப்சரா சிஜே என்ற வலுவான சமூக பின்னணியுடனும் வந்துள்ளனர். இவர்கள் குரல் தங்கள் சமுதாய குரலாக ஒலித்தால், அதிக கவனம் பெறுவார்கள்.
மொத்தத்தில் பிக் பாஸ் சீசன் 9-ன் தொடக்கம், கான்ட்ரவர்ஸிக்கும் ஆளுமை மோதல்களுக்கும் பஞ்சம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டது. குறிப்பாக, ‘வாட்டர்மெலான் ஸ்டார்’ மற்றும் வி.ஜே-க்களின் ஆதிக்க போட்டி ஆகியவை இந்த சீசனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வாய்ப்புள்ளது. ‘ஒண்ணுமே புரியலையே’ என்று கூறும் ஆடியன்ஸுக்கு, போகப் போக எல்லாம் புரிய வைக்கும் உத்தியை விஜய் டி.வி கையில் எடுத்திருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
