தமிழக அரசியல் களத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய்யின் அசுர வேகமான நகர்வுகள், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே சவால் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது அது பா.ம.க. , தே.மு.தி.க. , ம.தி.மு.க. போன்ற சிறு கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
ஒரு காலத்தில் பிரதான கட்சிகளின் கூட்டணியில் அசைக்க முடியாத சக்தியாக கருதப்பட்ட இந்த கட்சிகள், தற்போது விஜய்யின் பிரவேசத்தால், ‘யாராலும் கண்டுகொள்ளப்படாத’ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை, சட்டமன்ற தேர்தல்களின்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கூட்டணிகளிலுமே பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளின் வாக்கு வங்கியை தமதாக்கிக்கொள்ள கடும் போட்டி நிலவும். இந்த கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு அழைக்க இரு பிரதான கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அதிக இடங்களை ஒதுக்கும்.
ஆனால் இப்போது அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த கவனமும், த.வெ.க-வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவருவதில் மட்டுமே தீவிரமாக உள்ளது. “விஜய் என்கிற ஒற்றை தலைவரை மட்டும் கூட்டணிக்கு கொண்டுவந்தால் போதும்; மற்ற சிறு கட்சிகளின் ஆதரவு தேவையில்லை” என்ற முடிவுக்கு அ.தி.மு.க. வந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய்யின் பிரபலம் அ.தி.மு.க-வுக்கு தேவையான இளைஞர் வாக்குகளையும், புதிய வாக்குகளையும் கணிசமாக ஈர்க்கும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது.
அ.தி.மு.க., பாஜக மற்றும் த.வெ.க. கூட்டணி அமையும்பட்சத்தில், தமிழக அரசியல் இருமுனைப் போட்டியாக உருவெடுக்கும். இதன் விளைவு, சிறு கட்சிகளுக்குச் சாதகமாக இருக்காது.
பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வின் தனிப்பட்ட வாக்கு சதவீதம் இரண்டு பெரிய அணிகளுக்கும் இடையில் சிதறி போகும். ஒரு வலுவான இருமுனை போட்டியில், நடுநிலை வாக்காளர்கள் வெற்றி வாய்ப்பு உள்ள பெரிய கட்சிகள் பக்கம் சாய்வர்.
விஜய்யின் பிரபலம், இக்கட்சிகளின் வாக்கு வங்கியை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாக கருதப்படும் என்பதால், அதிமுக கூட்டணிக்கு இந்த சிறு கட்சிகள் மீதுள்ள ‘தேவை’ முற்றிலுமாக மறையும். இது இந்தக் கட்சிகளின் பேரம் பேசும் திறனை வெகுவாக குறைக்கும்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காத பட்சத்தில், பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தி.மு.க. கூட்டணியை மட்டுமே அடைக்கலமாக நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ம.தி.மு.க. (மதிமுக தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும்பட்சத்தில்) போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. புதிதாக வரும் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்வதில் தி.மு.க.வுக்கு சிக்கல் ஏற்படும். இதனால், தி.மு.க.வும் தற்போதுவரை இந்த கட்சிகள் மீது ஆர்வம் காட்டாமல், தனது தற்போதைய பலமான கூட்டணியை தக்கவைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படியே பா.ம.க. அல்லது தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைத்தாலும், அது மிக குறைவான தொகுதிகளாகவே இருக்கும். இது அவர்களின் அரசியல் பலத்தை மேலும் குறைக்கும்.
மொத்தத்தில் விஜய்யின் வருகை, தமிழக அரசியலில் ஒரு புதிய வாசலை திறப்பதுடன், இதுவரை கூட்டணி அரசியலில் லாபமடைந்து வந்த சிறு கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியையும் அளித்துள்ளது என்பது நிதர்சனம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
