இந்திய அரசுடன் நெட்பிளிக்ஸ் போட்ட ஒப்பந்தம்.. உலகமே இனி இந்தியாவை திரும்பி பார்க்கும்.. சுற்றுலா தளங்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. இனி நெட்பிளிக்ஸின் தொடர்களில் தாஜ்மஹாலும் வரும்.. மீனாட்சி அம்மன் கோவிலும் வரும்..

உலக அரங்கில் இந்தியாவின் சாப்ட்வேர் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு வியூகமாக, நெட்ஃபிளிக்ஸ் இந்தியா, மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த கூட்டணியின்…

உலக அரங்கில் இந்தியாவின் சாப்ட்வேர் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு வியூகமாக, நெட்ஃபிளிக்ஸ் இந்தியா, மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த கூட்டணியின் இலக்கு எளிமையானது, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது: உலகம் இந்தியாவை கண்டறியும் முறையை மாற்றுவது என்பது தான் ஆச்சரியம்.

நெட்ஃபிளிக்ஸின் உலகளாவிய ஆற்றலையும், இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் பிரபலமான “இன்கிரிடிபிள் இந்தியா” பிரச்சாரத்தையும் இணைப்பதே இந்த கூட்டணியின் அடிப்படை நோக்கம். அதாவது, இந்தியாவின் வளமான நிலப்பரப்புகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை இனி நெட்ஃபிளிக்ஸின் கதைக்களங்களில் நேரடியாகவும், ஆழமாகவும் பின்னி பிணைக்கப்படும். இதன் மூலம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவை கை கோர்த்து செல்லும்.

நெட்ஃபிளிக்ஸ் இந்தியா கன்டென்ட் பிரிவின் துணைத் தலைவர் மோனிகா ஷீகல் இது குறித்துப் பேசும்போது, “இந்தியாவின் கதைகள் அதன் நிலப்பரப்புகளை போலவே பரந்த மற்றும் மாறுபட்டவை. இந்த கூட்டு முயற்சி, உள்ளூர் கலைஞர்களுக்கும் சமூகங்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், மிக முக்கியமாக, இந்தியா தன் கலாச்சாரத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திரைப்படங்களில் பார்க்கப்பட்ட இடங்களை பார்வையிட ரசிகர்கள் விருப்பப்பட்டு அந்த இடங்களை நோக்கி பயணிக்கும் போக்கிற்கு ‘செட் ஜெட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் சுற்றுலா பொருளாதாரத்தை மாற்றியமைத்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஏற்கெனவே பல்வேறு பிராந்தியங்களில் இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது:

HBO-வின் பிரபலமான தொடரான ‘தி ஒயிட் லோட்டஸ்’ வெளியான பிறகு, முதல் சீசன் படமாக்கப்பட்ட மௌய், ஹவாயில் உள்ள ஹோட்டல் இணையதள போக்குவரத்து 425% அதிகரித்தது. இரண்டாவது சீசன் வெளியானதும், இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள ஆடம்பர தங்குமிடங்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

நெட்ஃபிளிக்ஸின் ‘பிரிட்ஜெர்டன்’ தொடர், பாத் நகரின் உள்ளூர் பொருளாதாரத்திற்கு €1.5 மில்லியன் ஊக்கத்தை அளித்தது. ‘எமிலி இன் பாரிஸ்’ தொடர், பாரிஸ் நகர வீதிகளுக்கு ரசிகர்களை ஈர்த்தது.

கொரிய நாடகங்களான ‘க்ராஷ் லேண்டிங் ஆன் யூ’ மற்றும் ‘வென் லைஃப் கிவ்ஸ் யூ டேன்ஜெரின்ஸ்’ ஆகியவை சியோல் மற்றும் ஜெஜு தீவுகளுக்கு சர்வதேச பயணிகளின் அலையைத் தூண்டியுள்ளன.

சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 78% பேர் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தங்கள் பயண திட்டங்களை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் நெட்ஃபிளிக்ஸ் ஏற்கெனவே அதன் அசல் படைப்புகள் மூலம் இந்தியாவின் அழகை வெளிப்படுத்தியுள்ளது:

‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ – நீலகிரி காடுகள்

‘காலபாணி’ – அந்தமான் தீவுகள்

‘அமர் சிங் சாமிலா’ – பஞ்சாபின் துடிப்பான வயல்வெளிகள்

‘மிஸ்மேட்ச்ட்’ – இராஜஸ்தானின் பரபரப்பான வீதிகள்

‘ஜாஞ்ரா’ – கலம்புங்கின் பனிமூட்டம் சூழ்ந்த மலைகள்

இந்தியா முழுவதும் 23 மாநிலங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகரங்களில் நெட்ஃபிளிக்ஸ் படப்பிடிப்புகளை நடத்தி, உள்ளூர் சமூகங்களையும் பொருளாதாரத்தையும் ஆதரிக்கும் சூழலமைப்பை உருவாக்கியுள்ளது. இப்போது சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவுடன், இந்த தாக்கம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுடனான இந்த கூட்டணி, தெற்காசியாவில் ஒரு சுற்றுலா நிறுவனத்துடன் நெட்ஃபிளிக்ஸ் மேற்கொள்ளும் முதல் கூட்டணி ஆகும். இதற்கு முன்னர் நெட்ஃபிளிக்ஸ் பிரான்ஸ், இந்தோனேசியா, தென் கொரியா, தாய்லாந்து, ஸ்பெயின், பிரேசில் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளின் அரசாங்கங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களை செய்துள்ளது.

இந்தியாவின் நிலப்பரப்புகள் எப்போதும் ஆச்சரியமான, அதிசயத்தக்க அழகை கொண்டவை. அந்தமான், லட்சத்தீவுகளின் கடல் பகுதி, ஓங்கி உயர்ந்த கோட்டைகள், உலக அதிசயம் தாஜ்மஹால், மீனாட்சி அம்மன் கோவில் போன்ற பாரம்பரிய மிக்க கோவில்கள், பாம்பன் பாலம் போன்றவை இனி நெட்பிளிக்ஸ் வெப்தொடர்களில் இடம்பெறும். நெட்ஃபிளிக்ஸை ஒரு கூட்டாளியாக கொண்டு, இந்த பகுதிகள் உலகளாவிய ரசிகர்களுக்கு அடுத்த பெரிய பயண உத்வேகமாக மாற வாய்ப்புள்ளது. இந்தியாவின் கலாச்சார செல்வத்தை இராஜதந்திர முறையில் உலகிற்கு எடுத்துச் செல்லும் இந்த யுக்தி, இந்திய பொருளாதாரத்திற்கும் சுற்றுலா துறைக்கும் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.