இந்திய பிரதமர் மோடியை பார்த்து கற்று கொள்ளுங்கள்.. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு அறிவுரை கூறிய தனியார் நிறுவன சி.இ.ஓ.. 10 வருட வெளிநாட்டு பயணத்திற்கு இப்போது கிடைக்கும் பலன்கள்.. இந்தியா தான் இனி டாப் நாடு..!

  இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியாவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர்…

modi 1

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியாவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆரம்பம் முதலே எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வந்தாலும், மோடியின் இந்த அணுகுமுறைக்கு தற்போது சர்வதேச அரங்கில் இருந்தே பாராட்டு கிடைத்துள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த ஏஎஸ்எம்எல் (ASML) நிறுவனம், செமிகண்டக்டர் உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். கடந்த மாதம் டெல்லியில் நடந்த உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியாளர்கள் மாநாட்டில், ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டோப் பக்கியட் உட்பட பல நாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின்போது, பிரதமர் மோடி, கிறிஸ்டோப் பக்கியட்டுடன் சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

சமீபத்தில், பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் நடந்த வர்த்தக மாநாடு ஒன்றில், ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஃப்ராங்க் ஹிம்ஸ்கர் பங்கேற்றார். அப்போது அவரிடம், “ஐரோப்பிய யூனியன் தலைவர்களை உங்கள் நிறுவனத்தால் எளிதில் அணுக முடிகிறதா?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு ஃப்ராங்க் ஹிம்ஸ்கர் பதிலளித்தபோது, பிரதமர் மோடியின் அணுகுமுறையை புகழ்ந்து பேசினார்.

“ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திப்பது எப்போதும் எளிதாக இருந்ததில்லை. அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் ஒரு மூத்த அதிகாரியைக்கூட எளிதாக சந்தித்துவிடலாம். ஆனால், ஐரோப்பிய யூனியன் கமிஷனரை சந்திப்பது மிகவும் கஷ்டமான காரியம்.”

“எங்கள் நிறுவன சிஇஓ கிறிஸ்டோப் பக்கியட் டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கிறிஸ்டோப் சொன்ன விஷயங்களை பிரதமர் மோடி மிகுந்த கவனத்துடன் கேட்டார். ‘நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாகப் பேசுகிறீர்கள். இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்த நாம் இன்னும் எப்படி எல்லாம் சிறப்பாக செயல்பட முடியும், சொல்லுங்கள்’ என்று கிறிஸ்டோப்பிடம் மோடி ஆர்வத்துடன் கேட்டார்.”

முதலீடுகளைச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அரசியல் தலைவர்கள் உட்கார்ந்து பேச வேண்டும் என்றும், முதலீட்டாளர்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பதை பிரதமர் மோடியிடம் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஃப்ராங்க் ஹிம்ஸ்கர் வெளிப்படையாக அறிவுரை கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திலேயே, அதன் தலைவர்களை பார்த்து மோடியை பின்பற்றுங்கள் என்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரி அறிவுரை கூறியது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

செமிகண்டக்டர்கள் கார் உற்பத்தி, மின்னணு சாதனங்கள், கணினிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் இன்றியமையாதவை. இந்தியா தற்போது சிப்களை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. அதனால் தான் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகுந்த முனைப்புடன் செயல்பட்டார். அதன்படி, 2021 ஆம் ஆண்டில் ரூ.76,000 கோடி நிதியுடன், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்புகள் சந்தைக்கு வரும் என்று சுதந்திர தினத்தன்று மோடி அறிவித்திருந்தார். அதன்படி, இஸ்ரோவின் செமிகண்டக்டர் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ‘விக்ரம்’ என்னும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் பிரதமரிடம் வழங்கினார்.

இந்தச் சூழலில், செமிகண்டக்டர் உற்பத்தியில் உலக தலைவரான ஏஎஸ்எம்எல் நிறுவனம் பிரதமர் மோடியை வெளிப்படையாக பாராட்டியிருப்பது, இந்தியாவின் முதலீட்டு ஈர்ப்பு முயற்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.