கரூரில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பான வழக்கில், த.வெ.க. பொதுச்செயலாளர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இன்று அனல் பறந்த வாதங்கள் நடைபெற்றன.
நீதிபதி ஜோதிராமன் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் விவரம் பின்வருமாறு:
புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு தமிழக அரசு தரப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த முக்கிய வாதங்கள்:
புஸ்ஸி ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதால், இவ்வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த முன்ஜாமீன் மனுவை சிறப்பு அமர்வுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வலியுறுத்தியது.
இவ்வழக்கின் ஆழம் மற்றும் 41 உயிர்கள் பலியானதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சாதாரண அமர்வில் விசாரிப்பதற்கு பதிலாக, முறையான மற்றும் விரிவான விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் வழக்குப் திவு ஆகியவற்றின் உண்மை தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பி, தங்களின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆனந்த் தரப்பு குற்றம் சாட்டியது.
நாங்கள் எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை; உயிரிழந்தவர்கள் அனைவரும் எங்கள் கட்சியின் தொண்டர்கள்” என்றும், இச்சம்பவத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் வாதிடப்பட்டது.
கூட்டம் நடந்த இடத்திற்கு தாமதமாக வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தங்கள் தரப்பில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியபோது, குறிப்பிட்ட இடமான வேலுச்சாமிபுரத்தில் அனுமதி வழங்க காவல்துறை மறுத்திருக்கலாம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதற்கான முறையான காரணம் எதுவும் தெளிவாக இல்லை.
கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல என்றும், அது எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு விபத்து மட்டுமே என்றும், எனவே, த.வெ.க. நிர்வாகிகளை சதித் திட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யக் கூடாது என்றும் வாதம் வைக்கப்பட்டது.
கூட்டத்தை கலைக்கும் முயற்சியாக காவல்துறை தடியடி நடத்தியிருக்கலாம் என்றும், இதுவே நெரிசல் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் மனுதாரர்கள் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜோதிராமன், இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைப்பதாக தெரிவித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான வழக்காக இருப்பதால், மனுவை சிறப்பு அமர்வுக்கு மாற்றுவது குறித்தும், முன்ஜாமீன் வழங்குவது குறித்தும் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நான் கண்டிப்பாக கரூர் செல்ல வேண்டும், கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நான் விரைவில் சந்திக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய தவெக சார்பில் 20 பேர் கொண்ட குழுவை நியமித்து விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
