சர்வதேச மென்பொருள் ஜாம்பவான்களுக்கு போட்டியாக, உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட புதிய மென்பொருட்களுடன் களமிறங்கி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், ஜோஹோவின் ‘அரட்டை’ (Arattai) செயலி, வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக கருதப்பட்டு ஆப்பிள் மற்றும் கூகிள் ஆப் ஸ்டோர் தரவரிசைகளில் முதலிடம் பிடித்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து, சில நாட்களிலேயே ஜோஹோ நிறுவனத்தின் மற்றொரு புதிய செயலியான ‘உலா’ (Ulaa) பிரவுசர் தரவரிசைகளில் இடம்பிடித்து பரபரப்பை கிளப்பியுள்ளது. அரட்டை செயலி பொதுமக்களுக்கான வாட்ஸ்அப் மாற்றாக கருதப்பட்ட நிலையில், இந்த உலா பிரவுசர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் கூகுள் குரோமுக்கு சவால் விடும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.
உலா பிரவுசர் கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சஃபாரி உள்ளிட்ட பிற முன்னணி பிரவுசர்களுக்கு நேரடியாக போட்டியாக களம் காண்கிறது. இந்த பிரவுசர் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் போன்ற அனைத்து முன்னணி இயங்குதளங்களிலும் கிடைக்கிறது. இதன் முக்கியக் குறிக்கோள், பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும்.
கூகுள் குரோம் போலவே, உலா பிரவுசரும் குரோமியம் (Chromium) தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இது பயனர்களின் தரவுகளை சேகரிக்கவோ, சேமிக்கவோ, விற்கவோ இல்லை என்று ஜோஹோ உறுதியளிக்கிறது. இதற்கு மாறாக, கூகுள் குரோம் பயனர்களின் தரவுகளை விளம்பரதாரர்களுக்கு விற்காவிட்டாலும், தனிப்பட்ட விளம்பரங்களை காட்ட தரவுகளை சேகரிக்கிறது.
இந்த புதிய பிரவுசர், பயனர்களின் தேவைக்கேற்ப பல்வேறு பயன்முறைகளுடன் வருகிறது: பணி, தனிப்பட்டது , குழந்தைகள் , டெவலப்பர் மற்றும் ஓப்பன் சீசன் ஆகிய வகைகளில் உள்ளது. இதில் பணி பயன்முறை கார்ப்பரேட் பயனர்களுக்காகவும், டெவலப்பர் பயன்முறை தொழில்முறை வெப் டெவலப்பர்களுக்காகவும், தனிப்பட்ட பயன்முறை சாதாரண பயனர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக ஒரு அரட்டை வந்து பயனர்களின் அமோக ஆதரவை பெற்றது போல் கூகுள் குரோம், எட்ஜ் போன்ற பிரவுசர்களுக்கு சவாலாக இந்த உலா அமையும் என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
