அமெரிக்காவின் அதிரடியான வர்த்தக முடிவுகள், உக்ரைன் போர் பற்றிய வதந்திகள் மற்றும் உலக அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நீண்டகால நட்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. சமீபத்திய நிகழ்வுகள் மூலம் இந்த பிணைப்பு மேலும் வலுப்பெற்றிருப்பதற்கான சான்றுகளை பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து வர்த்தக தடைகளை விதிக்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக 50% வரி விதித்தது போதாதென்று, தற்போது இந்திய மருந்துகளுக்கு 100% வரி விதிக்கும் திட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து புதியதொரு வர்த்தக திட்டத்தை பற்றி பேசியுள்ளனர். இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து ‘பிரிக்ஸ் தானிய ஒப்பந்தம்’ என்ற ஒரு வரலாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்ற உள்ளனர். இந்த திட்டத்தின்படி, ரஷ்யாவின் விளைபொருட்களையும், இந்தியாவில் விளையும் பயிர்களையும் இரு நாடுகளும் மாற்றி மாற்றி ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.
இந்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் அவர்களும், ரஷ்யாவின் துணை பிரதமர் திமித்ரி பட்ரோசோவ் அவர்களும் இணைந்து இந்த கூட்டு முடிவை எடுத்துள்ளனர். இது இந்தியா-ரஷ்யா உறவில் அடுத்த ஒரு மைல்கல் என்று கூறப்படுகிறது. ஆயுதங்கள், எண்ணெய் வாங்குவது ஒருபுறம் இருக்க, இப்போது விவசாய பொருட்களையும் வாங்க போகிறார்கள்.
உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் உள்பட எந்த பொருளையும் வாங்க கூடாது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுக்கும்போது, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மட்டுமின்றி தற்போது விவசாய பொருட்களையும் வாங்க இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம் செய்திருப்பது அமெரிக்காவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விளையும் விளை பொருட்களை வாங்க இந்தியா மறுத்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து மட்டும் விளை பொருட்களை இந்தியா வாங்குகிறதே என்ற கோபம் தான் டொனால்ட் டிரம்பின் மனதில் எழுந்துள்ளது.
அந்த கோபத்தில்தான், அவர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 100% வரி என்பது அமெரிக்க மக்களுக்கு தான் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாமல் டிரம்ப் செயல்படுகிறார் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியா மீது இப்படி வரி விதித்துக் கொண்டே போனால், அமெரிக்காவுக்கு எதிரான அனைத்து நாடுகளுடனும் இந்தியா கைகோர்த்து, அமெரிக்காவை டம்மி ஆக்கிவிடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு பக்கம் அமெரிக்காவின் கோபத்தையோ, அந்நாடு விதிக்கும் வரி விதிப்பையோ இந்தியா கண்டுகொள்ளாமல், தன்னுடைய நாட்டின் முன்னேற்றத்துக்காக மட்டும் பிற நாடுகளுடன் கைகோர்த்து காய் நகர்த்தி வருவது, இந்திய பிரதமரின் ராஜதந்திரத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள இந்த விவசாய ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
