தமிழக அரசியல் களம் தற்போது எதிர்பாராத திருப்பங்களையும், வியத்தகு கூட்டணி நகர்வுகளையும் நோக்கி சுழன்று கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அவரை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. மேற்கொள்ளும் அண்மைக்கால முயற்சிகள், காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பெரிய உலுக்கலை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் அரசியல் வலையில் விஜய் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, ராகுல் காந்தியின் நேரடி ஒப்புதலுடன் காங்கிரஸ் கட்சி அவசர அவசரமாக திரைமறைவு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் கரூரில் விஜய்யின் பிரசார நிகழ்வில் ஏற்பட்ட துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வலிய சென்று விஜய்க்கு ஆதரவுக் குரல் கொடுத்தனர். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்குள் விஜய் கட்சி சேர்ந்தால், அந்த கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு செல்வாக்கு பெற்றுவிடும் என்று டெல்லி பா.ஜ.க. தலைமை கருதுகிறது. இது எதிர்காலத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும்.
இந்த ஆபத்தை உணர்ந்த ராகுல் காந்தி தற்போது சுறுசுறுப்படைந்துள்ளார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து காங்கிரஸை மீட்டு, ஒரு வலுவான சக்தியாக நிலைநிறுத்த வேண்டுமானால், விஜய்யின் கூட்டணி அவசியம் என்று அவர் உணர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக உருவாகியிருக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியை அடுத்து திமுக தான் உள்ளது. தற்போதைய கூட்டணி தொடர்ந்தால் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தயவால் குறைந்தது 10 எம்.பி. தொகுதிகளையாவது காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போதைய கள யதார்த்தம் காங்கிரஸின் நீண்டகால உத்தியை மாற்றியமைக்க தூண்டியுள்ளது.
2029ல் கிடைக்கவிருக்கும் 10 எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை விட 2026-ல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று அமைச்சர் பதவிகளை தவறவிட காங்கிரஸ் விரும்பவில்லை. 1967க்கு பின் அமைச்சரவையில் இடம் பெற காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதை மிஸ் செய்ய காங்கிரஸ் விரும்பவில்லை.
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தமிழகத்தில் காங்கிரஸுக்கென ஒரு தனித்த அடையாளம் மற்றும் அரசியல் வலிமையை உருவாக்க வேண்டும் என்றால், மக்கள் செல்வாக்குள்ள ஒரு புதுமுகத்துடன் கைகோர்ப்பது அவசியம் என தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியுள்ளனர். பா.ஜ.க. பக்கம் விஜய் செல்வதை தடுக்கும் ஒரே வழி, காங்கிரஸ் நேரடியாக விஜய்யுடன் கூட்டணி அமைப்பதே என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பிரமுகர்கள் ராகுல் காந்தியிடம் வலுவாக எடுத்துரைத்ததாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாதத்திற்கு ராகுல் காந்தி உடனடியாக ஒப்புதல் அளித்ததாகவும், தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்த இது சரியான நேரம் என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர அவசரமாக திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர். தொகுதிகளின் எண்ணிக்கைகள், தொகுதி பங்கீடுகள், துணை முதல்வர் பதவி உள்ளிட்டவை குறித்து இந்த ரகசிய பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ்-விஜய் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இது தமிழக அரசியல் அரங்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
