இந்தியாவுக்கும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பிற்கும் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கூட்டமைப்பிற்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் அமலுக்கு வந்திருப்பது, இருதரப்பு உறவுகளிலும் வர்த்தகத்திலும் ஒரு பொன்னான நாளாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8.87 லட்சம் கோடி முதலீடு மற்றும் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது குறித்து பேசிய நார்வேயின் பிரதிநிதி, இது நார்வே-இந்திய உறவுகளுக்கு மிகவும் சிறப்பான நாள் என்று குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் நார்வே நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஆகியவை இரு மடங்கு அதிகரித்துள்ளன என்றும், இந்த ஒப்பந்தம் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் வர்த்தகம் மீண்டும் இரு மடங்குக்கும் அதிகமாக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் காரணமாக நார்வே நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன. குறிப்பாக, எனர்ஜி துறை மற்றும் கடல்சார் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளன.
மேலும் இந்த மாதம் முதல், நார்வேயிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சால்மன் மீன் மீதான சுங்க வரி பூஜ்ஜியமாக குறைக்கப்படும் என்றும், இதன் மூலம் இந்தியர்கள் அதிக அளவில் சால்மன் மீனை உட்கொள்வார்கள் என்றும் நார்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதேபோல் இந்த ஒப்பந்தம் குறித்து சுவிட்சர்லாந்தின் தூதுவர், இந்தியா-EFTA ஒப்பந்தம் அமலுக்கு வந்தது ஒரு நல்ல சகுனம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகவும், அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாகவும் உள்ளது. 2047-க்குள் வளர்ந்த நாடாக மாறும் பயணத்தில் நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட EFTA நாடுகள் பங்கேற்க விரும்புகின்றன என்று தெரிவித்தார். இந்தியா உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் என்றும், 140 கோடி மக்கள்தொகை, வேகமாக வளரும் பொருளாதாரம் மற்றும் உலகிலேயே அதிக இளம் வயதினரை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், EFTA நாடுகளுக்கு நன்மை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கு நன்மை கிடைப்பதை உறுதிப்படுத்த, EFTA நாடுகள் இணைந்து அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும், 1 மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உறுதியளித்துள்ளன. இது இளம் இந்தியர்களுக்கு தேவையான தொழில் நடவடிக்கைகளை வழங்க உதவும்.
மொத்தத்தில் இந்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் சமநிலையான, நியாயமான மற்றும் ஆழமான உறவை வழங்குகிறது. முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் சுங்க வரி குறைப்புகள் மூலம் பரஸ்பர சந்தை அணுகலை மேம்படுத்துவது இதன் சிறப்பம்சமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
