தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் வியத்தகு சகாப்தம் தற்போது தொடங்கியுள்ளது. சினிமா நட்சத்திரமாக இருந்து அரசியல் களத்தில் கால் பதித்திருக்கும் நடிகர் விஜய்க்கு, ஆரம்ப நாட்களிலேயே அபரிமிதமான ஆதரவும், அதே சமயம் தீவிரமான எதிர்ப்பும் ஒருசேர குவிவது முன்னெப்போதும் கண்டிராத ஒரு நிகழ்வாகும். குறிப்பாக, சமீபத்தில் கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகும், அவருக்கு எதிரான அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு அலை வலுப்பெறுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எப்படி இந்த ‘அரசியல் மேஜிக்’ நிகழ்கிறது? தீவிரமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் விஜய் மக்கள் ஆதரவை தக்கவைத்துக் கொள்வது எப்படி?
முக்கிய அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகள் ஏன் விஜய்யை குறிவைக்கிறார்கள்? என்று ஆய்வு செய்து பார்த்தால் விஜய் அரசியல் களத்தில் இறங்கியதால் கிட்டத்தட்ட அனைத்து கட்சி வாக்குகளும் சிதறுகிறது. வி.சி.க. தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, பா.ஜ.க.வின் கைக்கூலியாக விஜய் செயல்படுகிறார் என்ற கருத்தை விதைக்கின்றனர்.
ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஐ.டி. விங் நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவரது அரசியல் நகர்வுகள், பிரசார உத்திகள் மற்றும் கட்சி அறிவிப்புகள் யாவும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
கரூரில் நடந்த மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், அவருக்கு எதிரான விமர்சனத்தீயை மேலும் தூண்டியுள்ளது. இந்த சம்பவம், அவரது அரசியல் முதிர்ச்சியின்மைக்கான சான்றாக ஆளும் தரப்பால் முன்னிறுத்தப்படுகிறது.
இந்த தீவிரமான எதிர்ப்புக்குக்காரணம், விஜய் ஒரு ‘அச்சுறுத்தும் சக்தி’யாக உருவெடுத்து வருகிறார் என்ற அச்சமேயாகும். அவர் பிரிக்கும் வாக்குகள், ஆளுங்கட்சியின் வெற்றியை கடுமையாக பாதிக்கலாம் என்பதால், அவரை ஆரம்பத்திலேயே முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் விமர்சனங்கள் குவிக்கப்படுகின்றன.
கடுமையான எதிர்ப்புகள் நிலவும் போதும், விஜய் மீது மக்கள் தொடர்ந்து ஆதரவு காட்டுவதற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். முதலாவது தமிழ்நாட்டு மக்கள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது ஒருவித சலிப்படைந்த நிலையில் உள்ளனர். புதிய தலைவர்கள் அல்லது ‘மாற்றம்’ குறித்த எந்தவொரு குரலுக்கும் மக்கள் செவி சாய்க்க தயாராக இருக்கின்றனர். விஜய்யின் அரசியல் நுழைவு, இந்த மாற்றுக்கான நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
முக்கிய அரசியல்வாதிகள் விஜய்யை கடுமையாக விமர்சிக்கும்போது, அது அவருடைய ஆதரவாளர்களை எதிர்வினை ஆற்ற தூண்டுகிறது. இந்த தலைவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய தலைவரை எதிர்ப்பது, “அவருக்குப் பின்னால் ஏதோ ஒரு உண்மை இருக்கக்கூடும்” என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் உருவாக்குகிறது.
விஜய்யின் ரசிகர் மன்றங்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவு, வலிமையான இளைஞர் தளத்தை கொண்டது. இந்த தளம், விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், தங்கள் தலைவரின் நிலைப்பாட்டை உடனடியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஆதரித்து, எதிர்ப்பாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறது.
மக்களின் இந்த எதிர்பாராத ஆதரவைப்பயன்படுத்தி, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளை துணிச்சலுடன் முன்னெடுப்பாரா அல்லது சில சறுக்கல்களை கண்டு, முந்தைய நட்சத்திர அரசியல் தலைவர்களை போலப் பின்வாங்குவாரா என்பது தான் தமிழக அரசியலின் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த பின்னரும், பல்வேறு காரணங்களால் முடிவில் பின்வாங்கினார். விஜய்யும் அதே பாதையில் செல்வாரா என்ற சந்தேகம் அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் மத்தியில் உள்ளது.
அரசியல் களத்தில் ஏற்படும் சறுக்கல்களை விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார், தன் கட்சிக்கு ஒரு தெளிவான கொள்கை திட்டத்தை வகுத்து, அதை மக்களிடம் ஆழமாக எடுத்துச் செல்வாரா, அல்லது வெறுமனே சினிமா கவர்ச்சியுடன் மட்டுமே தேர்தலை சந்திப்பாரா என்பதை பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும்.
தற்போதுள்ள ஆதரவு அலையை தக்கவைத்து கொள்ள வேண்டுமென்றால், விஜய் தனது அரசியல் அமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும், கரூர் போன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும், மேலும் அரசியல் விமர்சனங்களை எதிர்கொண்டு, துணிச்சலுடன் அடுத்தடுத்த பிரசார முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
