சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட் மற்றும் அதுகுறித்த அரசியலின் போக்கு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட ட்வீட் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, அந்த ட்வீட் “அபத்தமானது, அதிர்ச்சி தரத்தக்கது” என்று விவரித்தார். அந்த ட்வீட்டில் “புரட்சி வெடிக்க வேண்டும், எழுச்சி மலர வேண்டும், நேபாளம், இலங்கை போல…” என்ற வாசகங்கள் இருந்ததை குறிப்பிட்டு, ஒரு துயர சம்பவத்தின் மத்தியில் இதுபோன்ற வன்முறையைத்தூண்டும் வகையில் பேசுவது மிகவும் ஆபத்தானது என்று விமர்சித்தார்.
41 பேர் உயிரிழந்த சோகத்தின் போது, புரட்சி வெடிபப்தால் இன்னொரு சில பேர் இறந்தால் பரவாயில்லையா என்ற ரீதியில் ஒரு முயற்சி எடுக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. புரட்சி, எழுச்சி என்ற பெயரில் வன்முறையை கட்டமைக்கிறார்களா? என்று பாண்டே கேள்வி எழுப்பினார்.
ட்வீட் வெளியான சில மணி நேரத்திலேயே அவர் அதை நீக்கியதால், அது தவறு என்று அவருக்கே அல்லது அவருடைய நலம் விரும்பிகளுக்கோ தெரிந்திருக்கிறது என்று தெளிவானது. ஒரு அரசியல் தலைவர் பின்விளைவுகளை அறியாமல் முடிவெடுப்பது, நாளைக்கு அமைச்சராகும் வாய்ப்புள்ள சரியான அரசியல் தகுதி இல்லை என்பதை இந்த ஒரு ட்வீட் காட்டுகிறது.
வன்முறை மூலமான ஆட்சி மாற்றத்தை அவர் விரும்புகிறாரா என்றும், ஜனநாயக ரீதியான தேர்தல் மூலம் 2026-ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றும், நேபாளம், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் மாற்றங்கள் வன்முறையால் ஏற்பட்டது என்றும் இந்த வித்தியாசம் கூட ஆதவ் அர்ஜூனாவுக்கு தெரியவில்லை என்றும் ரங்கராஜ் பாண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
