இந்தியா தனது எரிசக்தி ஆய்வு பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இது நாட்டின் எரிசக்தி திசையையே மாற்றி அமைக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அந்தமான் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பதை உறுதிப்படுத்தினார். இயற்கை கொடுத்த இந்த புதையல் இந்தியாவை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம், அந்தமான் கடல் பகுதியில் உள்ள ஆய்வு கிணறு ஒன்றில் இயற்கை எரிவாயு இருப்பதை கண்டறிந்தது. அந்தமான் கடற்கரையில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில், 295 மீட்டர் ஆழமுள்ள கடற்பகுதியில், ஸ்ரீ விஜயபுரா-2 என்ற கிணறு 2,650 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டது. ஆரம்பகட்ட உற்பத்தி சோதனையின்போது, 2,212 முதல் 2,250 மீட்டர் இடைப்பட்ட ஆழத்தில், இயற்கை எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சோதனைக்காக காக்கிநாடாவிற்கு அனுப்பப்பட்ட எரிவாயு மாதிரிகளில் 87% மீத்தேன் இருப்பது கண்டறியப்பட்டது. மீத்தேன் என்பது மிகவும் தூய்மையாக எரியும் எரிபொருள் என்பதால், இது இந்தியாவின் பசுமை எரிசக்தி மாற்றத்திற்கு பேருதவியாக இருக்கும்.
பல ஆண்டுகளாக, மியான்மர் மற்றும் இந்தோனேசியாவின் புவியியல் அமைப்புகளை போலவே, அந்தமான் படுகையிலும் இயற்கை எரிவாயு வளம் நிறைந்திருக்கும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் பூரி, அந்தமானில் ஒரு பெரிய அளவிலான’ எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகள் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்த தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் லட்சியங்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. எரிசக்தி சுயசார்பை நோக்கி நாட்டை விரைவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவிற்கு ஏற்படும் தாக்கங்கள் மகத்தானவை:
1. எரிசக்திப் பாதுகாப்பு:
இந்தியா தனது இயற்கை எரிவாயுவில் கிட்டத்தட்ட 44% திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வடிவத்தில் இறக்குமதி செய்கிறது. இது போன்ற உள்நாட்டு கண்டுபிடிப்புகள் இறக்குமதி செலவை குறைத்து, எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி, விலைகளை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
2. சுற்றுச்சூழல் இலக்குகள்:
நிலக்கரி மற்றும் எண்ணெயை விட மீத்தேன் மிகவும் சுத்தமான எரிபொருள். இதன் மூலம், இந்தியா தனது பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை குறைக்க, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மற்றும் பசுமை எரிசக்தி இலக்குகளை அடைய முடியும்.
3. உலகளாவிய ஒத்துழைப்பு:
இந்த கண்டுபிடிப்பு, பெட்ரோராஸ்ட், பிபி இந்தியா, ஷெல், எக்ஸான் மொபைல் போன்ற உலகளாவிய ஆழ்கடல் ஆய்வு துறை தலைவர்களுடன் இந்தியா இணைந்து செயல்பட ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
4. வேலைவாய்ப்புகள்:
இந்த கண்டுபிடிப்பால் மீத்தேன் தொடர்பான உள்கட்டமைப்பை உருவாக்குவது, எரிவாயு பிரித்தெடுத்தல், போக்குவரத்து மற்றும் விநியோகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அப்பகுதிக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஆயில் இந்தியா நிறுவனப் பங்குகள் உடனடியாக 3% க்கும் அதிகமாக உயர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் எரிவாயுவை வெளியே எடுத்து முழு அளவிலான வணிக உற்பத்திக்கு இன்னும் சில காலம் ஆகும் என்றாலும் இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் எரிவாயு தன்னிறைவு அடைய வாய்ப்பு உள்ளதோடு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
