தனுஷின் ‘இட்லி கடை’யின் சுவை மக்களை கவர்ந்ததா? திரைவிமர்சனம்..!

தனுஷ் நடித்து இயக்கியுள்ள ‘இட்லிக் கடை’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அதன் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம். தனுஷ் இயக்கிய முந்தைய திரைப்படமான ’ராயன்’ முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் படமாகவும்,…

idli kadai

தனுஷ் நடித்து இயக்கியுள்ள ‘இட்லிக் கடை’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அதன் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்.

தனுஷ் இயக்கிய முந்தைய திரைப்படமான ’ராயன்’ முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் படமாகவும், பழிவாங்கும் கதையம்சம் கொண்டதாகவும் இருந்த நிலையில், அதற்கு நேர் மாறாக இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்டதாக இருப்பது ஒரு திருப்தியை கொடுக்கிறது. ஆனால், அதே சமயம், இரண்டாம் பாதியில் ஏற்படும் திருப்பங்களால் முழு திருப்தியை தர முடியவில்லை என்பதுதான் இந்த படத்தின் பெரிய குறையாக உள்ளது.

கிராமத்தில் ராஜ்கிரண் ஒரு சிறிய இட்லி கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவருடைய மகன் தனுஷ், கேட்டரிங் படித்து வெளிநாட்டில் பெரிய ஹோட்டலில் வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார். அதன்படி, அவர் தாய்லாந்தில் உள்ள சத்யராஜின் உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார்.

தனுஷின் திறமையை பார்த்து சத்யராஜ் அவரை பாராட்டுகிறார், பதவி உயர்வும் கொடுக்கிறார். தனுஷுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் பாராட்டு சத்யராஜின் மகன் அருண் விஜய்க்கு கோபத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமின்றி, அருண் விஜய்யின் தங்கை ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்க, சத்யராஜும் இருவரது திருமணத்திற்கு சம்மதிப்பது அருண்விஜய்க்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் தான், ஒரு எதிர்பாராத நிகழ்வு தனுஷுக்கும் சத்யராஜ் குடும்பத்திற்கும் இடையே பகையை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு மீண்டும் கிராமத்துக்கு வரும் தனுஷ், ஷாலினி பாண்டேயை திருமணம் செய்தாரா? அந்த எதிர்பாராத நிகழ்வுக்கு தீர்வு கிடைத்ததா? என்பதுதான் மீதி கதை.

முதல் பாதியில் தந்தை-மகனாக வரும் ராஜ்கிரண் மற்றும் தனுஷின் நடிப்பு படத்துக்கு பெரிய பலம். ராஜ்கிரண் நடிப்பு வழக்கம்போல் இயல்பாகவும் மனதில் பதியும் வகையிலும் உள்ளது. ஆனால், அதே நேரத்தில், ராஜ்கிரண் பேசும் சில வசனங்கள் பிற்போக்குத்தனமாக உள்ளது. குறிப்பாக, கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்பவர்களை குற்ற உணர்ச்சியாக்குவது போன்ற சில கருத்துக்கள் படத்திற்கு குறையாக உள்ளது.

முதல் பாதி தந்தை-மகன் சென்டிமென்ட் என்றால், இரண்டாவது பாதியில் ஹீரோ-வில்லன் கதையாக மாறுகிறது. தனுஷுக்கும் அருண் விஜய்க்கும் ஏற்படும் மோதல், ஷாலினி பாண்டேயுடனான காதல் என சென்டிமென்ட் காட்சிகள் மிகவும் குறைவாக இருந்து ஆக்‌ஷனுக்குக் கதை மாறுகிறது. அதில் தான் இயக்குநராக தனுஷ் தடம் புரண்டு விட்டதாக தெரிகிறது.

நடிப்பை பொறுத்தவரை தனுஷ் அசத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்த ஷாலினி பாண்டேவும் மிகவும் க்யூட்டாக இருக்கிறார். சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி, கீதா கைலாசம் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகச் செய்துள்ளனர். சில நிமிடங்களே வந்தாலும் நித்யா மேனன் மனதில் பதிகிறார்; குறிப்பாக, ஷாலின் பாண்டேவிடம் அவர் பேசும் காட்சி அவருடைய நடிப்புக்கு ஒரு மகுடம்.

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசை பட்டையை கிளப்பியிருக்கிறது. கிராமத்து பின்னணியுடன் கூடிய குடும்ப சென்டிமென்ட் கதை என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இரண்டாம் பாதியில் படத்தின் கதை தடம் மாறுவதால் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது முழு திருப்தி இல்லை.