ஒரு குடும்பத்தில் நீங்கள் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருந்தால், உங்களை தாண்டி உங்கள் குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்பை பற்றி யோசிப்பது அவசியம். இந்த நிதி பாதுகாப்பை உறுதி செய்வதில் டேர்ம் இன்சூரன்ஸ் கடந்த சில ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதில் பெரும்பாலும் இரண்டு பெரிய சவால்கள் உள்ளன
கல்விச் சான்றிதழ் : சில பெரிய கவரேஜ் திட்டங்களுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதி தேவைப்படும்.
முறையான வருமான சான்று : தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்படாத துறையில் உள்ளவர்களுக்கு சேலரி ஸ்லிப், ஃபார்ம் 16 போன்ற முறையான ஆவணங்கள் இருக்காது. இவர்கள் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சவால்களை எதிர்கொள்ளும், குறிப்பாக நடுத்தர வர்க்கம் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்காக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சில எளிய வழிகளை கட்டாயமாக்கியுள்ளது.
சரல் ஜீவன் பீமா (Saral Jeevan Bima)
காப்பீட்டுத் துறையில் உள்ள இந்த இடைவெளியை நிரப்ப, IRDAI ஆனது, அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் கட்டாயம் வழங்க வேண்டிய ‘சரல் ஜீவன் பீமா’ என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இது அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பொதுவான, அடிப்படை பாதுகாப்பை வழங்கும் ஒரு கட்டாய திட்டமாகும்.
இந்தத் திட்டம், தனிநபரின் கல்வித்தகுதி மற்றும் வருமான பின்னணியை பொருட்படுத்தாமல் ஒரு நிலையான, அடிப்படை பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
குறைந்த வருமானம் உள்ளவர்கள், தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் ஃப்ரீலான்சர்கள் போன்ற முறையான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்கான நடைமுறை மற்றும் முக்கிய அம்சங்கள்
பெரும்பாலான நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு டேர்ம் இன்சூரன்ஸ் கிடைப்பதை எளிதாக்க, சில காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த கவரேஜுக்கு முறையான வருமான சான்றை தளர்த்துகின்றன.
கவரேஜ் தொகை குறைந்தபட்சம் ₹5 லட்சம் முதல் ₹25 லட்சம் அல்லது ₹50 லட்சம் வரை இருக்கும். கவரேஜ் குறைவாக இருப்பதால், வருமான சான்றுக்கான தேவை குறைகிறது.
பிரீமியம் செலுத்தும் முறை மாதாந்திர பிரீமியம், காலாண்டு அல்லது வருடாந்திர பிரீமியமாக செலுத்தலாம். தினக்கூலி பெறுபவர்கள் மாதாந்திர முறையை தேர்ந்தெடுக்கலாம்.
அடையாள அட்டை, முகவரி சான்று மட்டுமே போதுமானதாக இருக்கலாம். முறையான சம்பளச் சீட்டு இல்லையெனில், கடந்த 6 முதல் 12 மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மெண்ட் ஒரு நிலையான வருமானத்தின் ஆதாரமாக கருதப்படுகிறது.
காத்திருப்பு காலம் : சரல் ஜீவன் பீமா போன்ற திட்டங்களில், பாலிசி எடுத்த பிறகு ஆரம்பத்தில் 45 முதல் 90 நாட்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கலாம். இந்த காலத்திற்குள் விபத்து அல்லாத காரணங்களால் பாலிசிதாரருக்கு ஏதேனும் நேர்ந்தால், காப்பீட்டு தொகை கிடைக்காது.
ஃப்ரீ லுக் காலம் : இன்சூரன்ஸ் பாலிசி கையில் கிடைத்த பிறகு, 15 நாட்களுக்குள் பாலிசி விதிமுறைகளை ஆராய்ந்து, திருப்தி இல்லையென்றால், அபராதம் இல்லாமல் அதை திரும்ப ஒப்படைத்து முழு பணத்தையும் திரும்ப பெறலாம்.
சாதாரண டேர்ம் இன்சூரன்ஸை தாண்டி, நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனுள்ள வேறு சில திட்டங்களும் உள்ளன:
சிறப்பு எக்ஸிட் மதிப்புள்ள திட்டங்கள்: சில நிறுவனங்கள் ‘சிறப்பு எக்ஸிட் மதிப்பு போன்ற அம்சங்களை வழங்குகின்றன. இது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாலிசியில் இருந்து வெளியேறும்போது, ஒரு தொகையை திரும்ப பெற உதவுகிறது.
கடன் காப்பீடு : வீடு அல்லது தொழில் கடன் வாங்கியிருந்தால், அதற்கு சமமான டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது, கடன் வாங்கியவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அவரது குடும்பம் கடனை செலுத்த வேண்டிய சுமையை தவிர்க்கும்.
SBI Life, LIC, HDFC Life, ICICI Pru Life போன்ற அனைத்து முன்னணி காப்பீட்டு நிறுவனங்களும் சரல் ஜீவன் பீமா திட்டத்தை வழங்குகின்றன. முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிப்பதை விட, நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு முகவர்கள் மூலம் விண்ணப்பிப்பது நல்லது. அவர்கள் உங்கள் வருமான ஆதாரமாக என்ன ஆவணங்களை கொடுக்கலாம் என்று வழிகாட்டுவார்கள்.
ஆரம்பத்தில் குறைந்த கவரேஜை தேர்ந்தெடுங்கள். ஒப்புதல் பெற்ற பிறகு, எதிர்காலத்தில் உங்கள் வருமானம் உயரும்போது கவரேஜை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்புக்கான பொறுப்பை உணர்ந்து, தாமதிக்காமல் இன்றே ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை எடுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோதும் உங்கள் குடும்பம் நிதி ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
