கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை மிரட்டுகிறதா பாஜக? நிர்மலா சீதாராமன், ஹேமாமாலினி திடீர் வருகைக்கு என்ன காரணம்? வலிய வந்து ஆதரவு கொடுக்கும் அண்ணாமலை, எடப்பாடியார்.. அதிமுக – பாஜக கூட்டணியில் வேறு வழியில்லாமல் சேர்ந்துவிடுவாரா விஜய்?

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், 41 உயிர்களை பலிவாங்கிய துயரம் என்ற நிலையை தாண்டி, தற்போது தமிழக அரசியலில் ஒரு ஆழமான சதுரங்க பலகையாக உருமாறியுள்ளது.…

vijay annamalai eps mks

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், 41 உயிர்களை பலிவாங்கிய துயரம் என்ற நிலையை தாண்டி, தற்போது தமிழக அரசியலில் ஒரு ஆழமான சதுரங்க பலகையாக உருமாறியுள்ளது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து, பாஜகவும் அதிமுகவும் விஜய்க்கு தங்கள் ஆதரவு கரத்தை நீட்டி, அவரை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர மறைமுகமாக முயற்சிக்கின்றனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க, பாஜக உடனடியாக எட்டு எம்.பி.க்கள் கொண்ட ஒரு “உண்மைக் கண்டறியும் குழுவை” அமைத்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியாக ஒரு பக்கம் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க, இன்னொரு பக்கம் நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமாமாலினி தலைமையிலான குழுவின் திடீர் வருகையும், தீவிர ஈடுபாடும் வெறும் மனிதநேய நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படவில்லை.

கள்ளச்சாராய மரணத்திற்கு, மெரினாவில் நடந்த மரணத்திற்கு இவ்வளவு வேகமாக தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விகள் எழுவது போல், பாஜகவும் ஏன் அந்த நிகழ்வுகளுக்கு குழுவை அனுப்பவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

பாஜக குழுவின் வருகை, மாநில அரசு மீது வெளிப்படையாக அழுத்தம் கொடுக்கிறது. ‘இந்த சம்பவத்தை முறையாக கையாளவில்லை’ என்று குற்றம்சாட்டுவதன் மூலம், ஆளும் கட்சிக்கு எதிராக விஜய்க்கு ஒரு அரசியல் பாதுகாப்பை வழங்க முயல்கிறது. பாஜகவின் முக்கிய தலைவர்களே நேரில் வந்து விசாரிப்பது, விஜய்க்கும் அவரது கட்சிக்கும் ஒரு தேசிய அளவிலான அங்கீகாரத்தையும் அரசியல் மரியாதையையும் கொடுக்கிறது. ‘அரசியல் ரீதியாக தனித்து விடப்படவில்லை’ என்ற நம்பிக்கையை விஜய்க்குள் விதைக்க முயல்கிறது.

ஒருவேளை விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு வர மறுத்தால், இந்த விவகாரத்தை வைத்து விஜய்யை மிரட்டவும் பாஜக முயற்சிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் யூகித்து வருகின்றனர். இதன் மூலம், மறைமுகமாக அரசியல் நெருக்கடி கொடுத்து, கூட்டணியை நோக்கி விஜய்யை தள்ளும் ஒரு உத்தியாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த சம்பவத்தில் திமுக அரசை தீவிரமாக குற்றம் சாட்டி, விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இந்த இருவரின் தொடர்ச்சியான ஆதரவு, விஜய்க்கு அரசியல் ரீதியாக ஒரு பாதுகாப்பு கவசத்தை வழங்குவதுடன், “திமுகவுக்கு எதிராக போராட, இந்த கூட்டணி உங்களுக்கு தேவை” என்ற செய்தியை மறைமுகமாக அனுப்புகிறது.

அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்க விரும்பும் விஜய், எந்தவொரு தேசிய அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி வைக்க தயக்கம் காட்டி வருகிறார். அவர் தனது பேச்சில், “எல்லா உண்மையும் தெரியும், மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று ஆளும் கட்சியை மட்டுமே குறிவைத்து பேசிய அதே நேரத்தில் கரூர் விவகாரத்தில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் தலைவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இது விஜய் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் தற்போது திமுகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பாளராக தன்னை நிலைநிறுத்தவே ஆர்வம் காட்டுகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் தனித்து போட்டியிடுவது மிகவும் சவாலானது என்பதையும், ஒரு பெரிய கூட்டணியின் ஆதரவு, நிதி பலம் மற்றும் அரசியல் பாதுகாப்பை அளிக்கும் விதமாக செயல்படுவது தான் சரியானது என்று விஜய்யை கரூர் சம்பவம் யோசிக்க வைத்திருக்கும்.

தற்போது தவெகவுக்கு ஏற்பட்டுள்ள சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்ந்தால், தனது கட்சியின் எதிர்காலம் மற்றும் நிர்வாகிகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில், வேறு வழியில்லாமல் அவர் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டு வருகிறது. அப்படி சேர்ந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தெரியாது, ஆனால் நிச்சயம் திமுக அரசு வீழ்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

கரூர் சம்பவத்தின் வலியை பயன்படுத்தி கொண்டு, விஜய்யை ஓர் அரசியல் சதுரங்கத்தின் காயாக மாற்றும் ஒரு பெரும் முயற்சி என்றே அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். விஜய்யின் அடுத்த நகர்வு, தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையை உருவாக்கும்.