என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. மீண்டும் முதல்வரை மட்டுமே டார்கெட் செய்யும் விஜய்.. இலக்கு ஒன்று தான், அதில் எவ்வித மாற்றமும் இல்லை..

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ அவரது அரசியல் இலக்கு குறித்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையின் தொனி மற்றும்…

vijay vs stalin 1

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ அவரது அரசியல் இலக்கு குறித்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையின் தொனி மற்றும் உள்ளடக்கம், இதுவரை தமிழ்நாட்டில் யாரும் செய்ய துணியாத நேரடி அரசியல் தாக்குதலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதல்வரை மட்டுமே திரும்ப திரும்ப குறிவைத்து அவர் பேசியிருப்பது, அவரது எதிர்கால அரசியல் வியூகத்தின் ஆழத்தை உணர்த்துகிறது.

விஜய் வெளியிட்ட வீடியோவின் இறுதியில், எந்தவித தயக்கமும் இன்றி முதல்வருக்கு அமைதியாக ஒரு நேரடி சவால் விடுத்தார். “முதல்வர் அவர்களே, உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும், ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்றால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் என் வீட்டில் அல்லது என் அலுவலகத்தில் இருப்பேன். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அவரது கூற்று, ‘நீங்கள் என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள், என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள்’ என்ற உறுதியான நிலைப்பாட்டை குறிக்கிறது. இந்த வார்த்தைகள், வெறும் உணர்ச்சிபூர்வமான பேச்சாக இல்லாமல், தன் மீதான எந்தவொரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் ஒரு முழுநேர அரசியல்வாதியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. இது, தமிழக வரலாற்றில் ஒரு முன்னணி நடிகர், ஆளும் கட்சிக்கு நேரடியாக விடுத்திராத ஒரு சவால் ஆகும்.

மேலும் விஜய் கரூர் சம்பவம் குறித்தோ, தனது தொண்டர்கள் மீதான வழக்குகளைப் பற்றியோ பேசும்போது, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆளும் தி.மு.க. அரசைத்தான் குற்றம் சாட்டினார். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி குறித்து ஒரு வார்த்தை கூட அவர் குறிப்பிடவில்லை.

பொதுவாக, இதுபோன்ற உள்ளூர் சம்பவங்கள் நடக்கும்போது, குறிப்பிட்ட உள்ளூர் அரசியல் புள்ளிகள் மீதுதான் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். ஆனால், விஜய் அந்த நடைமுறையை தவிர்த்து, முதல்வர் மு.க. ஸ்டாலினை மட்டுமே நேரடியாக தொடர்புபடுத்தி பேசினார்.

விஜயின் இலக்கு வெறும் உள்ளூர் நிர்வாகம் அல்லது தனிப்பட்ட அமைச்சர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் அல்ல, மாறாக, ஒட்டுமொத்த தி.மு.க. அரசின் தலைமை மட்டுமே என்பதை இது தெளிவுபடுத்துகிறது. முதலமைச்சரை நேரடியாக தாக்குவதன் மூலம், தனது அரசியல் பயணத்தின் ஒரே இலக்கு அரியணை என்பதை அவர் அடிக்கோடிட்டு காட்டுகிறார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.க்கு பிறகு சிவாஜி, விஜயகாந்த், கமல் என பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதாக கூறி பின்னர் திடீரென சில காரணங்களால் பின்வாங்கினார். ஆனால் இவர்கள் யாரும் இந்த அளவுக்கு ஒரு தலைமையை நேரடியாக விமர்சனம் செய்ததில்லை. அப்படியே விமர்சனம் செய்தாலும், அதன்பின் எந்த தலைமையை விமர்சித்தார்களோ, அதே தலைமையிடம் போய் சரணடைந்துவிட்டனர்.

ஆனால், விஜய் இந்த பாரம்பரியத்தை உடைத்து, தனது முதல் மோதலே மாநிலத்தின் முதல்வர் மட்டுமே என நேரடியாக டார்கெட் செய்துள்ளார். இது, எதிர்ப்புகளை சமாளித்து, தனக்கென ஒரு தனித்துவமான அரசியல் களத்தை உருவாக்கும் விஜயின் அணுகுமுறையை காட்டுகிறது.

விஜய்யின் இந்த வீடியோ அரசியல் விமர்சகர்கள் மத்தியில், “விஜய் சினிமா சூப்பர் ஸ்டாராக இல்லாமல், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டே செயல்படுகிறார்” என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது. அவர் தொடுத்திருக்கும் இந்த நேரடி போரானது, தமிழக அரசியலின் எதிர்காலத்தை மாற்றி எழுதும் வல்லமை கொண்டதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.