கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜய், அதில் கரூரில் மட்டும் எப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.. நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் பெரிதாக தொடரும் என தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம்.
என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு வலி நிறைந்த சூழ்நிலையை நான் சந்தித்ததே கிடையாது. மனசு முழுக்க வலி, வலி மட்டும்தான்.
இந்த சுற்றுப்பயணத்தில் இத்தனை மக்கள் பார்க்க வருவதற்கு ஒரே ஒரு காரணம்தான். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம். அந்த அன்புக்கும் பாசத்திற்கும் நான் எப்போதும் கடமைப்பட்டவன். அதனால்தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களுடைய பாதுகாப்பு, வேற எந்த சமரசமும் செய்யக்கூடாது என்பது என் மனசுல ரொம்ப ஆழமா இருந்தது. அந்த எண்ணம்தான்.
அதனால்தான் இந்த அரசியல் காரணங்கள் எல்லாத்தையும் தவிர்த்து, ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களுடைய பாதுகாப்பு மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அதற்கான இடங்களை தேர்ந்தெடுப்பது, அதற்கான இடங்களை பார்த்து அனுமதி கேட்பது என செயல்பட்டோம். போலீஸ் துறையில் நாங்களும் கோரிக்கை வைத்தோம்.
ஆனால், நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நான் ஒரு மனிதன்தானே? அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எப்படி அந்த ஊரை விட்டு என்னால் கிளம்பி வர முடியும்? நான் திரும்பி போக வேண்டும் என்று இருந்திருந்தால், அது ஒரு காரணம் காட்டி, அங்கு வேறு சில பதற்றமான சூழ்நிலைகள், வேறு சில அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தவிர்த்தோம்.
இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கிற இத்தனை குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்ன சொன்னாலும் இது ஈடாகாது என்று எனக்கு தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் அனைவரும் விரைவில் குணமாகி வர வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் வேண்டிக்கொள்கிறேன். கூடிய சீக்கிரமே உங்கள் எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.
இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை, எங்களுடைய நிலைமையை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கிட்டத்தட்ட ஒரு ஐந்து மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்குப் போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. ஆனால், கரூரில் மட்டும் எப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கரூரை சேர்ந்த அந்த மக்கள் அந்த உண்மையை வெளியே சொல்லும்போது, கடவுளே நேரில் வந்து இறங்கி அந்த உண்மைகளை சொல்வதுபோல் எனக்கு தோன்றியது.
சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்கள் போய், அந்த இடத்திலிருந்து நாங்கள் பேசிவிட்டு வந்தோம். இந்த சம்பவத்தில் எங்கள் தரப்பிலிருந்து எந்தத் தவறும் நடக்கவில்லை. ஆனால், நீங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வைத்திருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல, சமூக வலைத்தளத்தை சேர்ந்த நண்பர்கள், தோழர்கள் அவர்கள் மீதும் வழக்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.
முதல்வர் சார், உங்களுக்கு ஏதாவது பழி வாங்க வேண்டும், பிரச்சினை என்றால் என்னை வேண்டுமானாலும் பண்ணுங்கள். அவர்கள் எனக்கு தேவை, நான் உங்கள் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்ன வேண்டுமானாலும் செய். நண்பர்களே, தோழர்களே, நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் பெரிதாக தொடரும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
