தவெக அமைதியாக இருப்பது ஏன்? விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று போஸ்டர் ஒட்டிய பிறகும் எதிர்வினை ஆற்றாதது ஏன்? எங்கே சென்றார்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா? கைதான தவெகவினரை காப்பாற்ற என்ன நடவடிக்கை? இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தலைவன் அமைதியாக இருக்கலாமா?

கரூரில் நடந்த துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல், 41 உயிர்களை பலி வாங்கியது. இந்த சம்பவம் ஒரு பெரிய அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது. உயிரிழந்தவர்களுக்காக வருந்துவதை காட்டிலும், ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில்தான் இரண்டு தரப்பும் முனைப்புடன்…

vijay 4

கரூரில் நடந்த துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல், 41 உயிர்களை பலி வாங்கியது. இந்த சம்பவம் ஒரு பெரிய அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது. உயிரிழந்தவர்களுக்காக வருந்துவதை காட்டிலும், ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில்தான் இரண்டு தரப்பும் முனைப்புடன் செயல்படுவதாக நடுநிலை அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைதியான அணுகுமுறை, பல கேள்விகளையும், தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம், அவரால் தான் 41 பேர் உயிரிழந்தனர், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட ஒரு போஸ்டர் பரவலாக ஒட்டப்பட்டது. இதை ஒரு “மாணவர் சங்கம்” வெளியிட்டதாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் சதியை பலரும் உணர்ந்துள்ளனர். இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டு ஒரு கட்சியின் தலைவர் மீது சுமத்தப்படும்போது, அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றுவதுதான் அரசியல் அறம். ஆனால், தவெக இந்த விவகாரத்தில் எந்த ஒரு கடுமையான எதிர்வினையையும் ஆற்றாமல் அமைதி காப்பது தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒரு கட்சியின் தலைவர் மீது பழி சுமத்தப்படும்போது, அந்த பழியை மறுத்து அறிக்கை வெளியிட வேண்டும். அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் மௌனம் காப்பது ஏன்?

ஒருவேளை தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் ஆழ்ந்து யோசித்து, ஒரு முடிவை எடுக்க காத்திருக்கலாம் என்று கருதினாலும், தவெக-வின் இரண்டாம் நிலைத் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றோர் இந்தச்சம்பவம் குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்தச்சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.

குறைந்தபட்சம், அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹20 லட்சம் நிதியுதவி அறிவித்தது மட்டுமே போதுமா? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையை நேரில் சென்று அளித்திருக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல், வீட்டிற்குள்ளேயே இருந்து அறிக்கைகள் மட்டும் வெளியிட்டால், ஒரு கட்சியை எப்படி வழிநடத்த முடியும்?

ஒரு அரசியல் கட்சிக்கு இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகள் வரும்போது, அதன் தலைவர் துணிச்சலுடன் முன்னால் வந்து நிற்க வேண்டும். தமிழகத்தில் திமுக என்ற மாபெரும் அரசியல் சக்தியை எதிர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அக்கட்சியின் ஒவ்வொரு நகர்வையும் எளிதாக புரிந்துகொள்ள முடியாது. இத்தகைய சூழலில், “எது வந்தாலும் பரவாயில்லை, துணிந்து நிற்போம்” என்ற மன உறுதி ஒரு தலைவனுக்கு மிக அவசியம்.

கோடிக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு பின்னால் இருக்கிறார்கள் என்ற நிலையில் அவர் ஏன் தயங்குகிறார்? அவர் இப்போது ஒரு நடிகர் அல்ல, அரசியல் கட்சியின் தலைவர். தலைவனாக இருக்கும்போது, தன்னுடைய தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் பாதுகாக்க வேண்டியது அவரது கடமை.

இந்த விவகாரத்தில் விஜய் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவரது கட்சிக்கு எதிர்காலம் உண்டு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தவெக-வின் இந்த மௌனம், அவர்களின் அரசியல் பயணத்தில் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.