திட்டமிட்டசதியா? தற்செயலாக நடந்த விபத்தா? 40 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்பது யார்? தவெகவா? தமிழக அரசா? பரஸ்பரம் குற்றம் சாட்டினால் மட்டும் போதாது? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுத்தால் மட்டும் போதாது, நீதி வேண்டும்..!

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர நிகழ்வுக்கு பிறகு, நிவாரணங்கள்…

karur stampade

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர நிகழ்வுக்கு பிறகு, நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டாலும், விபத்துக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது. இது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட துயரம் என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

த.வெ.க. மற்றும் தமிழக அரசு ஆகிய இரு தரப்புகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்த விபத்து ஒரு திட்டமிட்ட சதி என்று த.வெ.க. குற்றம் சாட்டுகிறது. அதே சமயம், த.வெ.க. எந்தவொரு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் கூட்டத்தை நடத்தியது என தமிழக அரசு விமர்சிக்கிறது.

கூட்டத்திற்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார். ஆனால், த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ ட்வீட்டில், விஜய் காலை 11 மணிக்கே வருவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மக்கள் காலை முதலே குவிய தொடங்கினர். அனுமதி இல்லாத நேரத்தில் மக்களை கூட்டியது ஏன் என்ற கேள்விக்கு த.வெ.க.வும், அதை காவல்துறை ஏன் அனுமதித்தது என்ற கேள்விக்கு காவல்துறையும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

கூட்டத்திற்கு அனுமதி கோரப்பட்ட நேரத்திற்கு முன்பே மக்கள் வந்ததால், பகல் முழுவதும் வெயிலில் தவித்தனர். அவர்களுக்கு குடிநீர் கூட கிடைக்கவில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒரு குறுகிய தெருவில் அனுமதித்தது ஏன்?

விபத்துக்கு முன்பாக, விஜய் பேச தொடங்கியபோது, ஒரு ஆம்புலன்ஸ் கூட்ட நெரிசலில் சிக்கி நின்றது. விஜய் வழிவிடும்படி கூறியும், கூட்டத்தினர் நகராதது ஏன்? அதே சமயம், இதுபோன்ற பெரிய கூட்டங்களுக்கு அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வசதிகளை அருகில் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்படாததும் கவனிக்கத்தக்கது.

த.வெ.க.வின் கூற்றுப்படி, இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்றும், கலவரத்தை ஏற்படுத்த கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கருத்து கொண்டவர்கள் கூட்டத்திற்குள் நுழைந்து, பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனினும், ஒரு கட்சி தலைவரின் கூட்டத்தில் மற்ற கட்சி ஆதரவாளர்கள் வருவது சகஜமான ஒன்றுதான். அதை எதிர்கொள்ள காவல்துறையும், கட்சி நிர்வாகமும் தயாராக இருக்க வேண்டும்.

விஜய் தனது உரையின்போது, கூட்டத்தில் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக உணர்ந்து, பதற்றமடைந்து, பேச்சை முடித்துக்கொண்டார். அவரது பதற்றம், மக்களை இன்னும் குழப்பமடைய செய்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் அவரை பார்க்க எட்டு மணி நேரம் காத்திருந்த நிலையில், அவர் சில நிமிடங்கள் மட்டுமே பேசியதால், அவரை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் மக்கள் இன்னும் நெருக்கி வந்தனர். இதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

இந்த துயரமான நிகழ்வு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் நடந்தது அல்ல. இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். சாலைகளிலும், குறுகிய தெருக்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் ஒரு தெளிவான வரையறையை வகுக்க வேண்டும். ஒரு தலைவரின் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த அப்பாவி மக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 40 உயிர்கள் பலியாகி உள்ளன. அரசியல் லாபங்களுக்காக மக்களின் உயிரை பணயம் வைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, இந்த விபத்து ஒரு பாடமாக இருக்க வேண்டும்.