துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்திய அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்படாததால், வீரர்கள் மேடையில் எந்த பரிசுகளும் இல்லாமல் கொண்டாடினர். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேபஜித் சைகியா, செய்தியாளர்களிடம் கூறியபோது அவர், “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றமான சூழலில், ஒரு பாகிஸ்தானிய தலைவர் கையால் கோப்பையை பெற வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்” என்றார்.
இந்திய அணிக்கு கோப்பையை அமீரக கிரிக்கெட் வாரிய துணை தலைவர் காலித் அல் ஜாரூனி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த கோரிக்கையை மொஹ்சின் நக்வி நிராகரித்து, தானே பரிசுகளை வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், மொஹ்சின் நக்வி மேடையிலிருந்து கோப்பையையும், பதக்கங்களையும் எடுத்துக்கொண்டு தனது ஹோட்டல் அறைக்கு சென்றதாக தேபஜித் சைகியா குற்றம் சாட்டினார். “எங்கள் அணியின் கோப்பையையும், பதக்கங்களையும் அவர் எடுத்துக்கொண்டு, தனது ஹோட்டல் அறைக்கு செல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் விளையாட்டுத் தன்மைக்கு விரோதமான செயல்” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
“விரைவில் கோப்பையும், பதக்கங்களும் இந்தியாவிடம் திருப்பி அளிக்கப்படும் என நம்புகிறோம். இந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள ஐ.சி.சி மாநாட்டில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் இந்த செயலுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வோம்” என்றும் சைகியா தெரிவித்தார்.
இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், “வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மறுக்கப்படுவது என் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே முதல்முறை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
மொஹ்சின் நக்வியின் இந்த செயல், இரு நாடுகளின் அரசியல் உறவுகளை கிரிக்கெட் களத்திலும் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணி, ஐ.சி.சி-யிடம் வலுவான புகார் அளிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
