கரூர் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து காவல்துறையின் விளக்கங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், மற்றும் அரசியல் விமர்சகர்களின் கேள்விகள் என பல தகவல்கள் முரண்பட்டு நிற்கின்றன. இந்த நிகழ்வு ஒரு விபத்தா, அல்லது திட்டமிட்ட சதியா என்ற கேள்விகளை கூட சமூக வலைத்தளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் அறிக்கையில், கண்ணால் பார்த்த சாட்சிகள் சிலர் கூறும் தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த நாளிதழுக்கு பேட்டியளித்த கரூரை சேர்ந்த ஆர்.கே.நிர்மல் என்ற ஐடி பணியாளர் கூறியபோது, ‘விஜய் ஸ்பாட்டுக்கு வரும் வரை கூட்டம் அமைதியாக நடந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஜெனரேட்டர் மூலம் இயங்கிய மின் விளக்குகள் அணைந்தன. அப்போது ஒரு பெண், தன் குழந்தையை காணாமல் தேடியதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. அதன்பின் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
அதே இதழுக்கு பேட்டியளித்த ரமேஷ் என்பவர், ‘விஜய், செந்தில் பாலாஜியை விமர்சித்து ஒரு பாடலை பாடியவுடன் மக்கள் உற்சாகம் அடைந்ததாகவும், அப்போது திடீரென லத்தி சார்ஜ் தொடங்கியதாகவும் கூறியுள்ளார். ரசிகர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து செருப்பு வீசிய சம்பவமும் நடந்ததாக சிலரால் கூறப்படுகிறது. நேரில் கண்ட இந்த பேட்டியை அடுத்து இந்த விபத்து, ஒரு திட்டமிட்ட சதியாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த தகவல் உண்மையா? அல்லது கற்பனையா? என்பது தெரிய வரும்.
மேலும் நெரிசல் சம்பவத்தின்போது, ஈரோடு – கரூர் நெடுஞ்சாலையில், தப்பிச் செல்ல முடியாதபடி, சாலை முழுவதும் கயிறுகளும், பேனர்களும் கட்டப்பட்டிருந்ததாக ஒருவர் கூறுகிறார். ஆனால், 4 மணிக்கு அங்கு சென்றபோது இந்த தடைகள் இல்லை என்றும், அதற்கு பிறகு அவை வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த விபத்துக்கு பிறகு, அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகளும், இதற்கு முன்னர் நடந்த மற்ற விபத்துகளுக்கும் ஒப்பிடும்போது, பல கேள்விகளை எழுப்புகின்றன. அமைச்சர்கள், முதலமைச்சர் உட்பட அனைவரும் உடனடியாக வந்து துக்கம் விசாரித்தது, உடனடியாக இழப்பீடு அறிவித்தது, விசாரணை ஆணையம் அமைத்தது என அரசு மின்னல் வேகத்தில் விரைவாக செயல்பட்டது. ஆனால், இதற்கு முன் நடந்த ஏர் ஷோ விபத்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் போன்ற நிகழ்வுகளின்போது, இந்த அளவுக்கு அரசு உடனடியாகவும் உணர்வுபூர்வமாகவும் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஒருவேளை அந்த நிகழ்வுகளின் மூலம் பாடம் கற்று அரசு இந்த விஷயத்தில் விரைவாக செயல்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் விபத்து நடந்தவுடன் விஜய் உடனடியாக ஏன் மக்களை விட்டு புறப்பட்டார் என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. ஆனால் விஜய்யை திருச்சியில் கூட தங்க வேண்டாம், உடனே சென்னைக்கு செல்லுங்கள் என காவல்துறை தான் வலியுறுத்தியதாகவும் ஒரு தகவல் உண்டு. இந்த இரண்டு தகவல்களும் ஊர்ஜிதம் செய்ய வேண்டிய தகவல்கள் ஆகும்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும், அரசியல் சூழ்ச்சியா? அல்லது மக்களின் அறியாமையா? அல்லது துரதிர்ஷ்டவசமாக எதிர்பாராமல் நடந்த விபத்தா? என்பது ஒருநபர் கமிஷன் விசாரணைக்கு பின்னரே முழுமையாக தெரிய வரும்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
