அரசியல் போட்டி என்பது அரசியல்வாதிகளுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது, மாறாக அரசியல்வாதிகளின் போட்டியால் அப்பாவி மக்கள் தான் பலிகடா ஆக்கப்படுவார்கள். இதுதான் காலம்காலமாக நடந்து வரும் செயல். ஒரு போராட்டம், ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு கலவரம் வந்தால் ஒரே ஒரு அரசியல்வாதி இதுவரை பலியாகியுள்ளாரா? பலியாகும் அனைவரும் பொதுமக்கள் தான். அரசியல்வாதிகள் ஒரு பக்கம் தப்பித்துவிடுவார்கள், இன்னொரு பக்கம் பிண அரசியல் செய்வார்கள். இதற்கெல்லாம் காரணம் கடந்த 50 ஆண்டுகளாக சிஸ்டம் கெட்டு போனதுதான்.
”சிஸ்டம் சரியில்லை” என்று ரஜினிகாந்த் சொன்னபோது, “நாங்கள் தான் சிஸ்டம், நாங்கள் தான் அதை சரி செய்கிறோம்” என்று அரசியல்வாதிகள் பதிலளித்தனர். ஆனால், கரூரில் நடந்த நிகழ்வும், அதற்கு பின்னால் நடந்த சம்பவங்களும், அந்த “சிஸ்டம்” எப்படி செயல்படுகிறது என்பதைத்தெளிவாக உணர்த்தியுள்ளன.
கரூர் சம்பவத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் இரண்டு விதமான அரசியல் பரப்புரைகள் கிளம்பின. ஒன்று, “விஜய் தான் 39 பேர் இறந்ததற்கு காரணம்” என்றும், மற்றொன்று, “ஆளும் கட்சியின் பொறுப்பற்ற தன்மையால் மற்றும் காவல்துறையின் அலட்சியத்தால் தான் இது நடந்தது” என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறை இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. அவர்கள் அளித்த விளக்கத்தில், தமிழக வெற்றிக் கழகம் முதலில் ஒரு சிறிய இடத்தை கேட்டதாகவும், காவல்துறையினரே, “மக்கள் கூட்டம் அதிகமாக வரும்” என்பதால், பெரிய இடமான பரிந்துரைத்ததாகவும் கூறினர். மேலும், அவர்கள் 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி கோரியதாகவும், ஆனால் 27,000-க்கும் அதிகமானோர் வந்ததாகவும் கூறப்பட்டது.
காவல்துறையின் இந்த விளக்கம், அவர்கள் தங்கள் கடமையை தட்டிக்கழிப்பதாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. “ஏற்கனவே நடந்த கூட்டங்களிலும் இதே போல அதிக கூட்டம் வந்ததே, அப்போது ஏன் தடுக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்கு முன், விஜய் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, சில ரசிகர்கள் கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து விழுந்தனர். அவர்களை கண்ட விஜய், “தண்ணீர் கொடுங்கள்… ஆம்புலன்ஸ் வரச்சொல்லுங்கள் என்று கூறினார். அதன்பின் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் வருவதற்காக மக்கள் கூட்டத்தை நெருக்கும்போது, நெரிசல் அதிகரித்தது. அதே நேரத்தில், மேடைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் இறந்தனர்.
இந்த சம்பவம் நடந்து முடிந்ததும் தான் சிஸ்டம் தனது வேலையை தரமாக செய்தது. உடனடியாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், புசி ஆனந்த், நிர்மல் குமார் உட்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே அமைச்சர்கள், முதலமைச்சர், உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு வந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இது மிகவும் வேகமான ஒரு நடவடிக்கை.
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை, மரக்காணம் கள்ளச்சாராய மரணம், விஷச்சாராய மரணங்கள், அஜித்குமார் என்ற இளைஞரின் லாக்-அப் டெத் என பல சம்பவங்களில் இந்த “சிஸ்டம்” இதே வேகத்தில் செயல்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த நிகழ்வுகளையெல்லாம் அமைச்சர்கள் இவ்வளவு வேகமாக கண்டுகொண்டார்களா? உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என்பதில் மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அங்கெல்லாம் அரசியல் எதிரி இல்லை, ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தும் நபர் இல்லை. போட்டியாளர் இல்லை. ஆனால் கரூரில் போட்டியாளர் இருக்கின்றார். இங்கு அரசியல் செய்தால் தான் எதிர்தரப்பு நடுங்கும். இதுதான் இன்றைய சிஸ்டம்.
அரசியல் நோக்கத்திற்காக, இந்த விபத்தை வேண்டுமென்றே கலவரமாக மாற்ற சிலர் முயற்சி செய்யலாம் என்ற அச்சம் இருந்ததால், விஜய் சம்பவம் நடந்த பிறகு உடனடியாக புறப்பட்டு சென்றிருக்கலாம். இது ஒருவகையில் அவரது பாதுகாப்பிற்கானது என்று சொல்லப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்து, அவர்களுடன் இருந்திருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் காவல்துறை தான் விஜய்யை உடனடியாக சென்னைக்கு போக சொன்னதாகவும் ஒரு தகவல் உள்ளது. இரண்டுமே ஊர்ஜிதப்படுத்தப்பட வேண்டிய தகவல்.
இந்த நிகழ்வு, நமக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. ஒரு நடிகர் ஒரு கட்சி ஆரம்பிக்கும்போது ரசிகர் கூட்டத்தை அரசியல் தொண்டராக மாற்றும்போது, அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம். ஒரு கட்சி, ரசிகர்களை பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்க வேண்டும். அ
அதேபோல் காவல்துறையும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான நிபந்தனை விதிக்க வேண்டும். பேனர்கள் வைப்பதில், அனுமதி பெறுவதில் என அனைத்து விதிகளிலும் சமத்துவம் பேணப்பட வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
